Breaking News

1987 ஆம் ஆண்டு தோல்விக்கு பழிவாங்கும் என நினைத்த ரசிகர்கள்! மீண்டும் ஏமாற்றியது இந்திய அணி

1987ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய போட்டியை நினைவுப்படுத்தி, இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பழிவாங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இன்றைய போட்டியிலும் இந்திய அணி பரிதாப தோல்வியைச் சந்தித்தது. 

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இதே மைதானத்தில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு போட்டி குறித்த சுவாரஸ்யத்தை இங்கு காண்போம். 1987ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின்போதுதான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி (உலகக்கோப்பையின் 3வது போட்டி) இந்த மைதானத்தில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில்தான் சிக்ஸர் மன்னன் என்ற அழைக்கப்பட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அறிமுகமானார். அதுபோல் ஆஸ்திரேலிய அணியில் டாம் மோடி அறிமுகமானார்.

image

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆலன் பார்டர் கேப்டனாகவும், இந்திய அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும் இருந்தனர். இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. அதாவது, இன்று ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயித்திருக்கும் ரன்னை எடுத்திருந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜியோஃப் மார்ஸ் 110 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 1 ரன்னில் தோல்வியைத் தழுவியது. 

49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணி 269 ரன்களை (இன்று ஆஸ்திரேலியா அடித்திருக்கும் ரன்கள்) மட்டுமே எடுத்தது. ஒரு பந்து மீதம் இருந்தபோதும், விக்கெட் இல்லாமல் இந்திய அணி 1 ரன்னில் தோல்வி கண்டது ரசிகர்களுக்கு வருத்தத்தைத் தந்தது. இந்தச் சூழலில், ஆஸ்திரேலிய அணியைப் பழிவாங்க இன்று, இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இன்றைய போட்டியில் இறுதிவரை போராடிய இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

image

இவ்விரு அணிகளுக்கான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் ஸ்டீவ் சுமித் மட்டும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் எல்லோரும் இரட்டை இலக்கங்களில் ரன் எடுத்திருந்தனர். அதிகபட்சமாக தொடக்க பேட்டர் மிட்செல் மார்ஸ் 47 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் 3 விக்கெட்களையும், சிராஜ், அக்சர் ஆகியோர் 2 விக்கெட்களையும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 

தொடக்க பேட்டர்களாய் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் சற்று அதிரடி காட்டியபோதும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கேப்டன் ரோகித் 30 ரன்களிலும், சுப்மன் கில் 37 ரன்களிலும் நடையைக் கட்டினர். அதற்குப் பின் விராட் கோலியுடன் இணைந்த கே.எல்.ராகுல் சற்று நிதானம் காட்டினாலும், அவரும் 32 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த அக்‌ஷர் படேல் 2 ரன்களில் நடையைக் கட்டினார். ஒருபுறம் விக்கெட் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்தாலும், விராட் கோலி மட்டும் பொறுமையுடன் விளையாண்டு அரைசதம் அடித்தார்.

image

அவர் 54 ரன்கள் எடுக்க, அவருக்குத் துணையாக ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் பொறுப்புணர்ந்து ஆடாததால் இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இன்றைய போட்டியிலும் இந்தியாவின் 360 வீரரான சூர்யகுமார் யாதவ் டக் அவுட் முறையில் வீழ்ந்தார். இதன்மூலம் தொடர் ஒன்றில் தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆன பட்டியலில் இடம்பிடித்தார்.

image

இறுதியில் இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் தோல்விக்கு 5 முக்கிய காரணம்!

1. ஆட்டத்தை மாற்றிய ரன் அவுட்

270 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் முக்கியமான நேரத்தில் அக்ஸர் பட்டேல் ரன் அவுட் ஆனார். இந்தத் தொடரில் அக்ஸர் பட்டேல் பார்மில் இருந்து வருகிறார். அதனால்தான் அவரை முன் கூட்டியே களமிறக்கினார் ரோகித் சர்மா. ஆனால், பலன் கிடைக்கவில்லை. 

2. பார்ட்னர் ஷிப் அமையவில்லை

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை 250 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யும் போது நீண்ட பார்ட்னர் ஷிப் தேவை. ஆனால், இந்திய அணிக்கு பெரிதாக அது அமையவில்லை. ரோகித் சர்மா - கில் இடையில் மற்றும் கே.எல்.ராகுல் - விராட் கோலி இடையே மட்டும் பார்ட்னர் ஷிப் சற்று நேரம் நீடித்தது

3. ஆஸி. அசத்தல் பீல்டிங் & பந்துவீச்சு

சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணின் பீல்டின் மிகவும் அபாரமாக இருந்தது. பல ரன்களை தங்களுடைய அசாத்திய பீல்டிங்கால் தடுத்தனர். முக்கியமான ரன் அவுட்டையும் செய்தனர். பந்துவீச்சும் அவ்வளாவு அசத்தலாக இருந்தது. ஆடம் ஜம்பா தன்னுடைய சுழலில் இந்திய அணியை சாய்த்துவிட்டார்

4. மோசமான ஷாட் விளையாடி ஆட்டமிழப்பு

முக்கியமான நேரத்தில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் மோசமான ஷாட் விளையாடி ஆட்டமிழந்தனர். சூர்யகுமாரின் கோல்டன் டக் அவுட்டும் இந்திய அணியை பாதித்தது

5. யாராவது ஒருவர் டேக் ஓவர் செய்திருக்கணும்

ஆட்டத்தை பொறுத்தவரை யாராவது ஒரு வீரர் கையில் எடுத்து இறுதிவரை கொண்டு செல்ல வேண்டும். இருவருக்கு அந்த வாய்ப்பு இருந்தது. ஒருவர் விராட் கோலி, மற்றொருவர் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்தவரை இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மோசமான ஷாட் விளையாடி இறுதியில் அவரும் ஆட்டமிழந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/BjzI92k
via

No comments