Breaking News

ஒன் பை டூ

இராம.ஸ்ரீநிவாசன், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க

``அமைச்சர் பொன்முடி, ‘யார் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம்’ என்பதை மறந்துவிட்டாரா என்ன... ஒரு மூத்த அமைச்சர், ஆளுநர்மீது அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது முறையா... 2014-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சி அமைத்ததிலிருந்து தி.மு.க-வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் தமிழ்நாட்டுக்கு யார் ஆளுநராக வந்தாலும் அவர்களை எதிர்க்கும் போக்கு வழக்கமாகிவிட்டது. ஆளுநர் என்பவர் எதையும் எதிர்த்து கேட்காமல் இவர்களின் கைப்பாவையாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களா... இப்போது இருக்கும் தமிழக ஆளுநர் மிகவும் அறிவார்ந்தவர், அதிகம் படிக்கிறார். அறிவுபூர்வமாகவும் கருத்துபூர்வமாகவும் பேசுகிறார். அவர் பேசும் கருத்துகள் குறித்து விவாதிப்பதும் விமர்சிப்பதும்தான் சரியானதாக இருக்கும். அதை விட்டுவிட்டு ஆளுநரையே இவர்கள் விமர்சிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்ததுபோல, மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு அமைதியாகத் தூங்கும் ஆளுநர்களை இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்போல. உண்மையில், தமிழக முதல்வரைவிட தமிழ் மொழி குறித்தும், தமிழர்கள் குறித்தும், தமிழ்நாடு குறித்தும் நன்கு தெரிந்துவைத்திருக்கிறார் நம் ஆளுநர். அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைக்கும் அமைச்சர்களுக்கு ஆளுநரின் அறிவாற்றல் எங்கே புரியப்போகிறது... பொன்முடி ஆளுநரிடம் சென்று பாடம் படிக்க வேண்டும்.’’

இராம.ஸ்ரீநிவாசன், தமிழ் கா.அமுதரசன்

தமிழ் கா.அமுதரசன், மாணவரணி துணைச் செயலாளர், தி.மு.க

``ஆளுநர் குறித்து அமைச்சர் மிகச்சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். 2014-ல் பா.ஜ.க ஒன்றிய அரசுப் பொறுப்பை ஏற்றதுமே, தங்களின் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு ஆளுநர் என்ற பெயரில் தங்களின் ஒற்றர் போன்றவர்களை அனுப்பி, மாநில அரசுகளுக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கியது. தமிழக ஆளுநரும் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களைப் பரப்ப வந்த ஒற்றர்போலத்தான் செயல்படுகிறார். ‘ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது, கூட்டணிக் கட்சிகள் குறித்துப் பேசக் கூடாது. ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களை, கால வரம்பின்றி நிறுத்திவைக்கக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால், ‘யார் என்ன சொன்னால் எனக்கென்ன’ என்பதுபோல, மாநில அரசின் மசோதாக்களையெல்லாம் உப்பிட்டு ஊறுகாய் ஜாடியில் போட்டுவைத்திருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டமன்றத்தில் தேசியகீதத்தை அவமதித்து வெளிநடப்பு செய்தது, அரசுக்கு எதிராகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்துவது, கலவரத்தை உருவாக்கக் கனவு காண்பது என அவரின் திட்டங்கள் பலவும் மக்களுக்கும், மாநில அரசுக்கும் எதிரானவையாக இருக்கின்றன. ஆளுநர் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். ராஜாஜி முதல் மோகன் பகவத் வரையிலான ஆர்.எஸ்.எஸ் முன்னோடிகள் பலருக்கும் ‘பாடம்’ சொல்லிக்கொடுத்த மண் இது. ஒருநாள் ஆளுநர் ரவிக்கும் தமிழ்நாடு தக்க பாடம் சொல்லிக்கொடுத்து விரட்டியடிக்கும்.’’



from India News https://ift.tt/kbSLzWI

No comments