Breaking News

ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் அபகரிப்பு? - நயினார் நாகேந்திரன் தரப்பு தன்னிலை விளக்கம்!

நெல்லை சட்டமன்ற தொகுதியின் பா.ஜ.க உறுப்பினரான நயினார் நாகேந்திரன் மீது அறப்போர் இயக்கம் நில அபகரிப்பு புகாரை தெரிவித்துள்ளது. அதில், “மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலம் சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ளது. அதில், 1.3 ஏக்கர் நிலத்தை இளையராஜா என்பவரிடம் இருந்து வாங்குவதற்காக நயினார் நாகேந்திரன், அவரது மகன் நயினார் பாலாஜி ஆகியோர் கிரைய ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

100 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் சென்னையில் போடப்படாமல் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சப்-ரெஜிஸ்டர் அலுவலகத்தில் நடந்துள்ளது. அந்த நிலத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்தி இருக்கிறது என்பதைக் கூட கவனத்தில் கொள்ளாமல் ஒப்பந்தம் போட்ட இளையராஜா மற்றும் நயினார் நாகேந்திரன், அவரது மகன் நயினார் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த நிலத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என நயினார் நாகேந்திரனின் மகனும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவருமான நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ``அந்த நிலம் நாராயணன் கிராமிணி என்பருக்குச் சொந்தமானது. அவர் குலாப்தாஸ் என்பவரிடம் கடன் பெற்றதற்காக 1931-ல் நீதிமன்றத்தின் மூலம் கிரையப் பத்திரம் செய்து கொடுத்துள்ளார்.

பா.ஜ.க மாநில இளைஞரணி துணைத்தலைவர் நயினார் பாலாஜி

குலாப்தாஸின் பேரனான நாராயணன் ஓரா என்பவர் மும்பை நீதிமன்றத்தில் வாரிசு சான்று பெற்றுள்ளார். அதை எல்லாம் சரிபார்த்த பின்னர் இளையராஜா என்பவர் விற்பனைக்கான உரிமம் பெற்றுள்ளார். இதற்கிடையே அந்த நிலம் தொடர்பாக சிலர் போலியான பத்திரங்களை பதிவு செய்துள்ளனர். அது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. விற்பனை உரிமம் வைத்துள்ள இளையராஜாவிடம் இருந்து நாங்கள் அந்த நிலத்தை வாங்குவதற்காக, நிலத்தின் உண்மையான மதிப்பான ரூ.46 கோடியில் இரண்டரை கோடி ரூபாயை அட்வான்ஸாக கொடுத்து பத்திரம் பதிவு செய்துள்ளோம்.

அந்த நிலத்துக்காக பதிவு செய்ததில் எந்தவித விதிமுறை மீறலும் கிடையாது. நாங்கள் நிலத்தை 2022 ஜூன் 1-ம் தேதி பதிவு செய்து விட்டோம். ஆனாலும் அந்த நிலத்துக்கான மதிப்பு, பட்டா உள்ளிட்டவற்றை சரிபார்த்த சென்னை சார்-பதிவாளர் அலுவலக அதிகாரிகள் ஒப்புதல் அளித்த பிறகே ராதாபுரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்து எங்களுடைய ஒப்பந்தப் பத்திரத்தைக் கொடுத்தார்கள்.

செய்தியாளர் சந்திப்பில் நயினார் பாலாஜி

ஆனால், பத்திரப் பதிவு விதி 28-ன் கீழ் வேறு இடத்தில் பத்திரம் பதிவு செய்யக் கூடாது என்பதற்கான நடைமுறை ஜூன் 29-ம் தேதி தான் வந்தது. அதற்கு முன்பாகவே நாங்கள் பத்திரம் பதிவு செய்துள்ளோம். அதனால் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. ஆனால் இந்த நிலத்துக்கு உரிமை கொண்டாடும் யாருக்கோ ஆதரவாகவோ அல்லது நிலத்தை வாங்க முயன்ற யாரோ சிலருக்காக அறப்போர் இயக்கத்தினர் எங்கள் மீது பொய்யாக குற்றம் சாட்டுகிறார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது அவதூறு பரப்பப்படுவதாகச் சந்தேகிக்கிறேன். என் தந்தை நயினார் நாகேந்திரன் மீது மக்களிடம் இருக்கும் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் செயல்படும் அறப்போர் இயக்கம் மீதும் அதன்பின்னணியில் இருப்பவர்கள் மீதும் அவதூறு வழக்குத் தொடருவோம்” என்றார்.



from India News https://ift.tt/C0DMz5e

No comments