Breaking News

கள ஆய்வு: முதலமைச்சர் ஸ்டாலினின் விழுப்புரம் விசிட்; பரபரக்கும் முன்னேற்பாடுகள்!

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கான கள ஆய்வை, நாளை மற்றும் நாளை மறுதினம் விழுப்புரத்தில் மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எனவே, விழுப்புரம் நகர் முழுவதிலும் விறுவிறுப்பாக புனரமைப்பு பணிகளும், முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், முதலமைச்சர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு விருந்தினர் மாளிகை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை இன்று காலை ஆய்வுசெய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன வேலைகள் நடைபெறுகின்றன என்று ஆய்வுசெய்வதற்காக இந்தியாவிலேயே 'கள ஆய்வு' செய்கின்ற ஒரே முதலமைச்சர் தளபதி ஸ்டாலின்தான்.

பொன்முடி ஆய்வு

சேலம், வேலூர், மதுரையைத் தொடர்ந்து தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் 3 மாவட்டங்களுக்கான கள ஆய்வை மேற்கொள்கிறார். அந்த ஆய்வு நாளை காலை 11:30 மணிக்கு ஆரம்பமாகும்" என்றார்.

இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆகியோர்... விழுப்புரம், மகாராஜபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நவீன மின் தகன மேடையின் பணியினையும், கீழ்பெரும்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அறிவுசார் மையத்தினையும், விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகத்தின் அருகே கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு, "நாளைய தினம் விழுப்புரத்துக்கு வரும் முதலமைச்சர், காவல்துறை மற்றும் விவசாயிகளுடன் பேசிவிட்டு அன்றைய நிகழ்ச்சியை முடிக்கிறார். நாளை மறுநாள்... அமைச்சர்களாகிய பொன்முடி, மஸ்தான், நான், பன்னீர்செல்வம், எ.வ.வேலு, உதயநிதி, பெரியசாமி உள்ளிட்டோர் துறை பணிகளை ஆய்வுசெய்கிறார்கள். 

முன்னேற்பாடுகள்
முன்னேற்பாடுகள்
முன்னேற்பாடுகள்
முன்னேற்பாடுகள்
முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
முன்னேற்பாடு பணிகள்

மந்திரிகளின் துறை சார்பாக நடைபெறும் பணிகள்... கடந்த வருடத்திலிருந்து இப்போது வரை எப்படி பணிகள் நடக்கின்றன, எப்போது முடிவடையும், எவ்வளவு விரைவாக மக்களின் பயன்பாட்டுக்கு அவற்றை கொண்டு வர முடியும் என்று பார்வையிட்டு வரும்படி முதலமைச்சர் சொன்னார்கள். அதன்படி நான் கடலூர், விழுப்புரம் பார்த்துவிட்டேன். என்னுடைய செயலாளர் திண்டிவனம் சென்றிருக்கிறார். துறை அதிகாரிகள் நேற்று கள்ளக்குறிச்சியில் சென்று பார்த்துவிட்டனர், வேலூரையும் பார்த்துவிட்டோம். எனவே முதல்வர் அது குறித்து கேட்கும்போது, பார்வையிட்டு ஆய்வு செய்ததைத் தெரிவிப்போம். பாதாளச் சாக்கடைத் திட்டத்தை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் முடித்துக் கொடுத்துவிடுவோம். விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்தவிருக்கிறோம். அதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

திருக்கோவிலூரில் அறிவுசார் மையம் வேண்டும் என அமைச்சர் (பொன்முடி) சொன்னார். அவரது உத்தரவுப்படி செய்துவிடுகிறேன்" என்றார். அதற்கு அமைச்சர் பொன்முடி, "அது கோரிக்கை" என்றதும்... "இல்லை, எனக்கு பெரிய மந்திரி (பொன்முடி)... உத்தரவு போட்டிருக்கிறார், செய்துவிடுகிறேன்" என்று கலகலப்பாக பதிலளித்தார் அமைச்சர் கே.என்.நேரு. இதனால் அங்கு சற்று சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய அவர், "பாதாளச் சாக்கடைத் திட்டத்தை பொறுத்தவரை ரோட்டில் பள்ளம் தோண்டுகிறார்கள், சாலை போடுகிறார்கள், மீண்டும் அதிலேயே பள்ளம் தோண்டுகிறார்கள் என்றால்.. அது நாம் வேண்டுமென்றே செய்வது கிடையாது. மக்கள் நலனுக்காகத்தான். ஒரு திட்டம் ஒப்புதலாகி வருவதற்குள், 'சாலை சரியில்லை' என கோரிக்கை எழும். அதன்படிதான் சரி செய்து தருகிறோம்.

கே.என்.நேரு பேட்டி

கட்டடம் கட்டுவது, சாலை போடுவது போன்று பாதாளச் சாக்கடைத் திட்டம் மற்றும் குடிநீர்த் திட்டங்களுக்கு எளிதில் ஒப்பந்ததாரர் கிடைப்பதில்லை. இருப்பவர்களை வைத்துதான் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி பணிகளை காலதாமதமாக செய்ய எங்களுக்கு என்ன ஆசையா? கூடிய விரைவில் முடித்து தந்துவிடுவோம். ஆறு லட்சம் மக்கள் இருந்தால் விழுப்புரத்தை மாநகராட்சியாக அறிவித்துவிடுவோம். அதற்கு, அருகிலுள்ள கிராமங்களை இணைக்க வேண்டியிருக்கிறது. அதற்கான வேலைகள் இருக்கின்றன. எனவே, முதலமைச்சரின் அனுமதி பெற்று உரிய முயற்சி செய்கிறோம்" என்றார்.



from India News https://ift.tt/KJXW2IH

No comments