"இன்று பில்கிஸ் பானு... நாளைக்கு நீங்களோ, நானோ" - விடுதலை செய்தது எப்படி என உச்ச நீதிமன்றம் கேள்வி!
2002-ம் ஆண்டு மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்ற குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும், அதன் தொடர்ச்சியாக முஸ்லிம்கள்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலும் சுதந்திர இந்தியாவின் இருண்ட பக்கங்களாகும். அப்படியான கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற என்ற இஸ்லாமிய கர்ப்பிணி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இதைவிடவும் பேரதிர்ச்சியாக, பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த 11 குற்றவாளிகளை, நன்னடத்தை என்ற பெயரில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுவித்தது.

அவர்களுக்கு மாலைகளுடன் வரவேற்புகளும் கிடைத்தன. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. குஜராத் அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளும் குவிந்தன. அது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 27-ம் தேதியன்று, பில்கிஸ் பானுவுக்கு நடந்தது மிகவும் கொடூரமான செயல் எனக் கூறியதுடன், இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவித்ததற்கான சான்றுகளைச் சமர்ப்பிக்குமாறு குஜராத் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கின்மீதான இன்றைய விசாரணையின்போது, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு குஜராத் அரசை சரமாரியாகக் கேள்விகேட்டது.
அதில், ``கர்ப்பிணி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சிலர் கொலைசெய்யப்பட்ட வழக்கை, பிரிவு 302-ன் கீழ் வரும் சாதாரண கொலை வழக்குடன் நீங்கள் ஒப்பிட முடியாது. ஆப்பிளை எப்படி ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட முடியாதோ, அதுபோல படுகொலையை, சாதாரண கொலையுடன் ஒப்பிட முடியாது.

குற்றங்கள் அனைத்தும் பொதுவாக சமூகத்துக்கு எதிரானவை. எனவே சமத்துவமற்றவர்களைச் சமமாக நடத்த முடியாது. எதன் அடிப்படையில் குற்றவாளிகளை விடுதலை செய்தீர்கள். இன்றைக்கு பில்கிஸ் பானு.... நாளைக்கு நீங்களோ, நானோ அல்லது வேறு யாராகவோ இருக்கலாம். குற்றவாளிகளை விடுவித்ததற்கான சரியான காரணங்களை ஆவணமாக சமர்பிக்காவிட்டால், இதில் நாங்களே முடிவெடுப்போம்" என்று குஜராத் அரசை கே.எம்.ஜோசப், பி.வி. நாகரத்னா அமர்வு எச்சரித்தது.
from India News https://ift.tt/7AetjQl
No comments