Breaking News

``தமிழக முதல்வருக்கு கர்நாடகாவில் அவமரியாதை; சங்கடமாக இருக்கிறது!" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு தொகுதியில் அரசு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஆளும்கட்சி பல்வேறு பிரச்னைகளில் உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் வருகின்ற 22-ஆம் தேதி(இன்று) எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளுநரிடம் மனு கொடுக்க உள்ளோம்.

திமுக அரசு இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. இதில் முதலமைச்சரின் மருமகன் சம்பந்தப்பட்டுள்ளார் என முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்த ஆடியோவில் வெளியாகிருந்தது.

செய்தியாளர் சந்திப்பு

அன்று நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, மதுக்கடைகளை மூடச்சொன்னார்கள். தி.மு.கவினரும் அதன் கூட்டணிக் கட்சியினரும் ஆளுநரை சந்தித்து எங்களுக்கு எதிராக மனு கொடுத்தார்கள். ஆனால் இன்று அமைதியாக உள்ளார்கள்.

மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு செய்துள்ளதில் நாங்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டியதில்லை. ஏற்கனவே பணமதிப்பிழப்பை திடீரென கொண்டு வந்தனர். ஆனால், தற்போது கால அவகாசம் கொடுத்துள்ளனர். எனவே மத்திய அரசின் இந்த விவகாரத்தில் எங்களுக்கு கருத்து வேறுபாடு கிடையாது.

மதுரையில் தி.மு.க நிர்வாகி ஒருவர் வாளை வைத்து பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். தி.மு.க ஒரு ரெளடிக்கட்சி என்பதை அவர்களே நிரூபித்து வருகிறார்கள்.

செல்லூர் ராஜூ

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க வெற்றி பெற பணி செய்து வருகிறோம். தி.மு.க-விற்கு பதிலடி கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர்.

பொய் வாக்குறுதி கொடுத்து தி.மு.க-வினர் ஆட்சிக்கு வந்தனர். தற்போது வரலாறு காணாத அளவிற்கு தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு ஆளுங்கட்சி அமைச்சர் துணை போய் உள்ளார். 22 பேர் இறந்துள்ளார்கள், பலருக்கு கண் பார்வை போயுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்சம் முதல்வர் அறிவிக்கிறார். மதுரை சித்திரை திருவிழாவில் இறந்தவர்களுக்கு எந்த நிவாரணமும் அறிவிக்கவில்லை. கள்ளச்சாராயம் விற்றவருக்கே ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர்.

மதுவிலக்குத்துறை அமைச்சரின் செயல்கள் தான்தோன்றித்தனமாக உள்ளது. குவாட்டருக்கு பத்து ரூபாயும், ஆஃப்புக்கு 15 ரூபாயும் கூடுதலாக வாங்குகிறார்கள், கப்பம் கட்டாத அதிகாரிகள் தூக்கி அடிக்கப்படுகிறார்கள்.

செய்தியாளர் சந்திப்பு

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், மத்தியிலும் ஆட்சி அமைக்கும் என கூறுவது, அகில இந்திய கட்சிகள் வழக்கமாக சொல்வதுதான்.

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ஒரு வேடிக்கை நடந்துள்ளது. நம் முதலமைச்சருக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. பத்தோடு பதினொன்றாக அவரை தள்ளி விட்டுள்ளனர். இதன் மூலம் கர்நாடக அரசு தமிழர்களை புறக்கணிப்பதை பார்க்க முடிகிறது. எங்கள் முதலமைச்சருக்கு இப்படி ஒரு அவமரியாதை ஏற்படுத்திய கர்நாடக அரசை கண்டிக்கிறேன்.

கர்நாடகா பதவியேற்பு விழா

அவர் திமுக தலைவராக அல்ல, எட்டு கோடி தமிழக மக்களின் பிரதிநிதியாக சென்றுள்ளார். முதல்வருக்கு முக்கியத்துவம் தராதது தி.மு.க-வினருக்கு சங்கடமாக இருக்கிறதோ இல்லையோ எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது" என்றார்.



from India News https://ift.tt/res9VTI

No comments