``பாஜக எங்களை நியாயமான முறையில் நடத்தவில்லை!” - வருந்தும் ஷிண்டே தரப்பு எம்.பி
மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை தேர்தல் கமிஷன் உண்மையான சிவசேனாவாக அங்கீகரித்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதே தங்களை தயார் படுத்த ஆரம்பித்துள்ளன. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறது. கடந்த முறை நடந்த மக்களவைத் தேர்தலில் சிவசேனா 23 தொகுதியில் போட்டியிட்டு 18 தொகுதியில் வெற்றி பெற்றது. ஆனால் அதில் 13 பேர் இப்போது ஏக்நாத் ஷிண்டே பக்கம் தாவிவிட்டனர்.
ஆனாலும் தங்களுக்கு கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகள் அனைத்தும் வேண்டும் என்று உத்தவ் தாக்கரே மகாவிகாஷ் அகாடி கூட்டணிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதே போன்று ஏக்நாத் ஷிண்டேயும் தங்களுக்கு கடந்த முறை போட்டியிட்ட 23 தொகுதிகளையும் எங்களுக்கு ஒதுக்கவேண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவரது கட்சி எம்.பி.கஜானன் கீர்த்திகர் அளித்த பேட்டியில், ``முன்பு நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறாமல் இருந்தோம். இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறோம். ஆனால் பா.ஜ.க. எங்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறது. எங்களுக்குள் எந்த வித பிரச்னையும் இல்லை. அனைத்திலும் இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். இப்போது எங்களுடன் 13 எம்.பி.க்கள் இருக்கின்றனர். கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகள் அப்படியே தொடரவேண்டும். எங்களது தொகுதியில் போட்டியிட நாங்கள் தயாராகி வருகிறோம்” என்றார்.
ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா அமைச்சர் தீபக் கேசர்கரும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீட்டில் கடந்த முறை எப்படி இருந்ததோ அதே முறை தொடரவேண்டும் என்று தெரிவித்தார்.
from India News https://ift.tt/G6cCr1V
No comments