Breaking News

பத சவல சடடதத ஆதரககம ஆம ஆதம... மகம சழககம எதரககடசகள!' - எனன கரணம?

பொது சிவில் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடியின் பேச்சுக்கும், மத்திய அரசின் தீவிரமான முயற்சிகளுக்கும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி மட்டும் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பது எதிர்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரின் புருவங்களையும் உயர்த்தச் செய்திருக்கிறது.

பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம் கருத்துக்கேட்பும், மோடி பேச்சும்:

கடந்த ஜூன் 14-ம் தேதி 22வது சட்ட ஆணையம் இந்தியா முழுவதுக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது பற்றி பொதுமக்கள், மத அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவித்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பொது சிவில் சட்டத்து ஆதரவாகவும் எதிராகம் தங்கள் கருத்துகளை சட்ட ஆணையத்திடம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த ஜூன் 27-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சென்று வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி பா.ஜ.க கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு ஒரு சட்டம், இன்னொரு உறுப்பினருக்கு வெறொரு சட்டம் என்று இருவேறு விதிமுறைகளின்கீழ் இருந்தால் அந்தக் குடும்பம் முறையாகச் செயல்படமுடியுமா? அதேபோல, ஒரு நாடு எப்படி வெவ்வேறுவிதமான சட்டங்களின்கீழ் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல முடியும்? நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால், பொது சிவில் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களைத் தூண்டி விடுகிறார்கள்!" எனக் குற்றம்சாட்டினார்.

மோடி

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும், ஆம் ஆத்மி ஆதரவும்...

அதைத்தொடர்ந்து காங்கிரஸ், தி.மு.க, ஐக்கிய ஜனதா தளம், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எனப் பல்வேறு எதிர்கட்சிகளின் தலைவர்களும், ``பொது சிவில் சட்டம் என்ற பெயரில் நாட்டின் பன்முகத் தன்மையைப் பறிக்க பா.ஜ.க அரசு திட்டமிடுகிறது. இந்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயினர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்!" என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சந்தீப் பதக் - ஆம் ஆத்மி

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி கட்சி மட்டும் பொதுசிவில் சட்டத்துக்கு கொள்கை ரீதியில் ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாகப் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சந்தீப் பதக், ``பொது சிவில் சட்டத்தை ஆம் ஆத்மி கொள்கைரீதியாக ஆதரிக்கிறது. இந்திய அரசியலமைப்பின் 44-வது பிரிவும் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறது. ஆனால், பொது சிவில் சட்டம் அனைத்து மத சமூகங்களையும் பற்றியது என்பதால், அனைத்துத் தரப்பினரிடமும் கலந்தாலோசனை செய்து, ஒருமித்தக் கருத்து ஏற்பட்டால் மட்டுமே மத்திய அரசு அதைக் கொண்டுவர வேண்டும். ஏனெனில், இதுபோன்ற விஷயங்களில் அனைவரும் ஒருமித்தக் கருத்துடன் செல்ல வேண்டும் என்று நங்கள் நம்புகிறோம்!" எனக்கூறி ஆதரவு தெரிவித்தார்.

பொது சிவில் சட்டத்தை ஆம் ஆத்மி ஆதரிப்பது இது முதல்முறை அல்ல; ஏற்கெனவே பலமுறை பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு குஜராத் தேர்தல் நேரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ``இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 44-ல், பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதற்கு நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளை கேட்டு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆனால், அந்த சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர பா.ஜ.க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக பா.ஜ.க காத்திருக்கிறதா?" என சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் கெஜ்ரிவால்

இப்போதுதான் பாட்னா எதிர்கட்சிகள் கூட்டத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக அனைத்து எதிர் கட்சிகளும் ஓரணியில் ஒன்றுகூடியிருக்கும் நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக தேர்தல் கூட்டணி அமைக்கலாமா? என வியூகம் வகுத்துவரும் நிலையில், தாங்கள் எதிர்க்கும் பொதுசிவில் சட்டத்தை ஆம் ஆத்மி கட்சி மட்டும் ஆதரித்து தனி ட்ராக்கில் பயணிப்பதை எந்த ஒரு எதிர்க்கட்சியும் விரும்பவில்லை என்றே தெரிகிறது. இது இரண்டாவது கட்ட எதிக்கட்சிகளின் கூட்டத்தில் எதிரொலிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது!



from India News https://ift.tt/zqWMJDd

No comments