"அதிமுக எம்.எல்.ஏ என்பதால், என்னைப் புறக்கணிக்கிறார்கள்..!" - எம்.எஸ்.எம்.ஆனந்தன் குற்றச்சாட்டு!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லடம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆட்சியர் கிறிஸ்துராஜை நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், ``கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தின்போது பல்லடம் தொகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக வெளிவட்ட சாலைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ரூ.45 கோடியில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாறிய பின்பு அதற்கான பணிகள் தொடங்கப்படாமல் இருக்கின்றன. அதை ஆய்வுசெய்து பணிகளைத் தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், பல்லடம் நகராட்சியிலுள்ள 18 வார்டுகளில் பாதாளச்சாக்கடைத் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 10 வார்டுகளில் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்.எஸ்.எம்.ஆனந்தன், ``கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் திருப்பூர் மாவட்டத்துக்குப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவை தற்போது கைவிடப்பட்டிருப்பதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகக் கூடிய சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே, அதையெல்லாம் மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம் நகராட்சியில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் எனக்கு அழைப்பிதழ் வழங்கப்படுவதில்லை. ஆளுங்கட்சியினரால், அ.தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி என்பதால், பல்லடம் தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. பல்லடம் தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளர் என்ற பெயரில், மற்ற தொகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கும் நிலை உள்ளது" என்றார்.
from India News https://ift.tt/majuJi6
No comments