மணபபர பரடடததல மககயததவம பறம பணகள! - பனனண எனன?
மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும் குக்கி உள்ளிட்ட பழங்குடியினருக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதலை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய மாநில பா.ஜ.க அரசுகள் திணறுகின்றன. மாநிலம் முழுவதும் ராணுவத்தினரும் துணை ராணுவப்படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், இரண்டு மாதங்களாக போராட்டம் நீடித்துவரும் நிலையில், அவர்களால் அங்கு அமைதியைக் கொண்டுவர முடியவில்லை.
‘அமைதியை நிலைநாட்ட முடியாத பிரேன் சிங் அரசே ராஜினாமா செய்’ என்று வீதிகளில் இறங்கி மக்கள் போராடுகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் பெண்களாக இருக்கிறார்கள். இது தொடர்பாக ஏராளமான புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகியிருக்கின்றன. அதில் ஒரு வீடியோவில், ராணுவ வீரர்களுடன் பெண்கள் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்கிறார்கள். “நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இங்கிருந்து நீங்கள் கிளம்பலாம்” என்று ராணுவ வீரரிடம் ஒரு பெண் கூறுகிறார்.
மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் பெண்கள் ஈடுபட்டுவருகிறார்கள். கடந்த ஜூன் 17-ம் தேதி இரவு, மாநிலத்தின் பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால், காக்சிங் உள்ளிட்ட மாவட்டங்களில் விளக்குகளை ஏந்தியபடி பெண்கள் மனிதச் சங்கிலி இயக்கம் நடத்தினர். “வன்முறையைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. அரசுகளின் இந்தத் தோல்வியால் நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்திருக்கிறோம்" என்று பெண்கள் ஆவேசப்பட்டனர்.
மணிப்பூரில் அமைதி நிலைநாட்டப்படாத சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள்கள் பயணமாக அங்கு சென்றார். அப்போது, ராகுல் காந்தியை வரவேற்கும் வகையில், கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு ஏராளமான பெண்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்தனர். ஓரிடத்தில் ராகுல் காந்தியை போலீஸார் தடுத்துநிறுத்தினர். அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது என்று கூறி, ராகுல் காந்தியை போலீஸார் தடுத்தபோது, அதற்கு எதிராக அந்தப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பாகவும், ராணுவத்தினரின் அத்துமீறல்களுக்கு எதிராக மணிப்பூர் பெண்கள் பெரும் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்தார் ஐரோம் ஷர்மிளா. ராணுவத்தினரின் அத்துமீறல்களைக் கண்டித்து `Indian Army Rape us’ என்ற வாசகத்துடன் கூடிய பதாகையை ஏந்திவாறு, மணிப்பூர் தாய்மார்கள் நிர்வாணத்துடன் நடத்திய போராட்டம் உலகையே அதிரவைத்தது.
தற்போது மைதேயி, குக்கி என இரு இனங்களையும் சேர்ந்த பெண்கள் வீதிகளில் போராடுகிறார்கள். மைதேயி இனத்தைச் சேர்ந்த போராட்டக் குழுவினர் பல்வேறு இடங்களில் கலவரத்தில் ஈடுபட்ட நிலையில், அந்தக் குழுவைச் சேர்ந்த 12 பேரை சில நாள்களுக்கு முன்பாக ராணுவம் கைதுசெய்தது. அவர்களை விடுவிக்கக் கோரி பெண்கள் தலைமையில் சுமார் 1,200 பேர் ராணுவத்தினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்ததால், அவர்களை அங்கிருந்து கலைப்பதற்கு பலப்பிரயோகம் செய்யாத ராணுவத்தினர், 12 பேரையும் விடுவித்தனர். வன்முறையில் ஈடுபடும் ஆண்களுக்கு உதவும் வகையிலும், பெண்கள் களத்தில் நிற்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் சொல்லப்படுகிறது.
from India News https://ift.tt/wlykv6x
No comments