நாமக்கல்: ``திமுக-வினர் கொள்ளையடிப்பதில் மட்டுமே மும்முரம் காட்டுகின்றனர்" - குற்றம்சாட்டும் தங்கமணி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அ.தி.மு.க சார்பில், விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவற்றைக் கட்டுபடுத்த தவறியதாக தி.மு.க அரசைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அ.தி.மு.க நாமக்கல் மாவட்டச் செயலாளர் தங்கமணி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ``தமிழகத்தில் ஆட்சி நடத்திவரும் தி.மு.க அரசால், யாருக்கும் எந்த பயனும் இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. விலைவாசி அதிகரித்துவிட்டது, காய்கறிகள் அனைத்தும் விலை உயர்ந்துவிட்டன. அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது விலைவாசியைக் கட்டுக்குள்கொண்டு வந்து, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்தபோது, அவற்றை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கினோம்.

அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

ஆனால், தற்போது விலைவாசி, சொத்து வரி, மின் கட்டணம் போன்றவை உயர்ந்து, ஊழல் மலிந்துவிட்டது. டெல்டா மாவட்டங்கள் வறட்சியை நோக்கிச் செல்லும் நேரத்தில், எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்குச் சென்ற தமிழக முதலமைச்சர், கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சரிடம் இது குறித்த கோரிக்கையை வைக்காமல், கர்நாடகா அரசைக் கண்டு பயந்து போய் அது குறித்துப் பேசாமல் வந்துவிட்டார். ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி காவிரியில் நீர் பெற்றுத் தந்தோம். கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றின்மீதும் ஊழல் வழக்குகள் உள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டிருக்கிறது. மதக்கலவரம் ஏதும் ஏற்படவில்லை.

நாட்டு மக்களுக்கான நலன் குறித்த எண்ணாமல், பிரதமர் மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே I.N.D.I.A கூட்டணிக்கு உள்ளது. 5 கட்சிகளை தாவிச் சென்ற செந்தில் பாலாஜி ஊழல் குறித்து அமலாக்கத்துறை அவரைக் கைதுசெய்து அழைத்துச் சென்றதற்கு, அவரை தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட தி.மு.க-வினர் நேரில் சென்று நலம் விசாரித்திருக்கின்றனர். ஆனால், தி.மு.க-வின் மூத்த நிர்வாகியான பொன்முடியை யாரும் சென்று சந்திக்கவில்லை. இதிலிருந்து மூத்த தி.மு.க-வினருக்கு அந்தக் கட்சியில் உரிய மரியாதை இல்லை என்பது தெரிகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், இலவச ஃபேன், மிக்ஸி, கிரைண்டர், 100 யூனிட் இலவச மின்சாரம், தாலிக்கு ஒரு பவுன் தங்கம் போன்ற திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டன. மக்களைப் பாதிக்காதவாறு உதய் மின் திட்டத்தில் மாநில அரசை இணைத்து மின் கட்டணத்தை உயர்த்தாமல், அ.தி.மு.க அரசு பார்த்துக் கொண்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

ஆனால், ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் அன்று இதற்காக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். ஆனால், இன்று அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். அதை குறைப்பார்களா... தட்கலில் வழங்கப்பட்ட மின்சாரத்துக்கு மீட்டர் வைத்தபோது, ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். உடனடியாக அந்தத் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கைவிட்டார். தி.மு.க மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாய் தருவதாகக் கூறி, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்த பிறகு, அ.தி.மு.க-வின் அழுத்தத்தின் காரணமாகவே தற்போது நாடாளுமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, மகளிர் உரிமைத்தொகை தருவதாக அறிவித்திருக்கின்றனர். அதிலும் பல குழப்பங்கள் உள்ளன.

2021 சட்டமன்றத் தேர்தலில்தான் மக்கள் ஏமாந்து விட்டார்கள். அதன் காரணமாக வீட்டு வரி, சொத்து வரி, மின்சாரக் கட்டணம் உயர்ந்து விசைத்தறி தொழில், ஆழ்துளை கிணறு, லாரி தொழில்கள் முடங்கிவிட்டன. ஆண்டுதோறும் 6 சதவிகிதம் மின் கட்டணம் உயர்கிறது. மின் இணைப்பு டெபாசிட் கட்டணமும் உயர்ந்து, தொழில் முடங்கி, வேலை வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குச் சென்றவர்கள் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். தி.மு.க-வின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. இன்று ஏன் தி.மு.க ஆட்சிக்கு வந்தது என்ற வேதனையில் இருக்கின்றனர். தி.மு.க-வில் செந்தில் பாலாஜி, பொன்முடி போன்ற அமைச்சர்கள்மீது ஊழல் வழக்குகள் பாய்ந்திருக்கின்றன. தி.மு.க-வினர் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாயைக் கொள்ளையடித்திருக்கின்றனர் என தி.மு.க அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். இதை அ.தி.மு.க-வினர் கூறினால் அவர்கள்மீது வழக்கு போடுவார்கள். ஊழல் குறித்து தி.மு.க அமைச்சர் கூறியதின் பின்னணி என்ன என்றும் ஸ்டாலின் விளக்கம் தர வேண்டும்.

அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

மின்சாரத்துறையில் மின்மாற்றி வாங்கியதில் 400 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என அறப்போர் இயக்கம், தி.மு.க அரசுமீது குற்றம்சாட்டியிருக்கிறது. இதற்கு ஸ்டாலின் பதில் தர வேண்டும். கட்டுமான பொருள்களான சிமென்ட், செங்கல் போன்றவை தி.மு.க-வினரின் கமிஷன் மற்றும் மிரட்டல் போக்கினால் விலை உயர்ந்துவிட்டன. இதனால், தமிழகத்தில் எந்த தொழிலும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ராசிபுரம் தி.மு.க நகர்மன்ற பெண் உறுப்பினர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டது குறித்து அந்தக் கட்சியின் மேலிடத்துக்கு எந்த கவலையும் இல்லை. கொள்ளையடிப்பதில் மட்டுமே அவர்கள் மும்முரம் காட்டுகிறார்கள். ராசிபுரம் தி.மு.க நகரச் செயலாளரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த தற்கொலை நடந்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி பொருந்தாத கூட்டணியாக உள்ளது. அவர்களால் பிரதமர் வேட்பாளர் யார் என்பதைக்கூட அறிவிக்க முடியவில்லை.

ஊழல் மந்திரிகள் அந்தக் கூட்டணியில் நிறைந்திருப்பதால், நிதி துறையை யார் பெறுவது என்ற சண்டை அவர்களுக்குள் இருக்கும். சிதம்பரம், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் போன்றவர்கள் ஊழல் செய்யும் மந்திரிகளை தங்களுடன் வைத்துக்கொண்டு அந்தத் துறைக்குப் போட்டி போடுவார்கள். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான, நிலையான தலைவர்களை கடந்த 10 ஆண்டுகளில் கொண்டு ஆட்சி நடத்தியது. இதனால்தான் உலக அளவில் இந்தியாவுக்கு நன்மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் நமது விவகாரங்களில் தலையிடுவது இல்லை. எனவே, தி.மு.க அரசின் திறனற்ற, மக்கள் விரோத ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். வருகிற தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால்தான், நன்மை பெற முடியும் என்ற உண்மை நிலவரத்தை மக்கள் அறிந்து கொண்டார்கள்" என்றார்.

அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ``மதுபாட்டில்கள் டெட்ரா பேக் திட்டம் கலப்பட மதுவுக்கு வழிவகுக்கும் என்பதால், முந்தைய ஆட்சியில் அதிகாரிகள் தகவல் தெரிவித்த நிலையில், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரவில்லை. ஆனால், அதிகாரிகள் இப்போது இருக்கும் அமைச்சரிடம் தவறான தகவலை தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 40 - க்கு 40 தொகுதிகளைக் கைப்பற்றும்" என்றார்.



from India News https://ift.tt/OXReL1z

No comments