Breaking News

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி துறையில் சிபிஐ ரெய்டு; இரண்டு அதிகாரிகள் கைது! - பின்னணி என்ன?

புதுச்சேரி, அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சோலை செல்வராஜ். அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக, `மணி பேக்கர்ஸ்’ என்ற பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. வணிக வரித்துறை அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்த செல்வராஜ், போலி கணக்கு எழுதுவதற்காக வணிக வரி ஆலோசகர் ராதிகா என்பவரை அணுகியிருக்கிறார். அப்போது ``வணிக வரித்துறைக்கு செலுத்த வேண்டிய தொகையை குறைத்துக் கொடுத்தால், அதில் ஒரு பகுதியை உங்களுக்கு கமிஷனாக கொடுக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். உடனே அதற்கு சரியென்று சொன்ன ராதிகா, புதுச்சேரி வணிக வரித்துறையில் பணிபுரியும், உதவி வணிக வரித்துறை அதிகாரிகள் ஆனந்தன் மற்றும் முருகானந்தத்திடம் பேரம் பேசியிருக்கிறார்.

கைதுசெய்யப்பட்டவர்கள்

அவர்களின் செல்போன் உரையாடல், சி.பி.ஐ அதிகாரிகளிடம் சிக்கியது. அதையடுத்து, இந்திரா காந்தி சிலை சதுக்கம் அருகில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்துக்குள், நேற்று முன்தினம் மாலை சென்ற அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த வணிக வரித்துறை அதிகாரிகள் ஆனந்தன், முருகானந்தம், வணிக வரி ஆலோசகர் ராதிகா, பிளாஸ்டிக் தொழிற்சாலை அதிபர் செல்வராஜ் போன்றவர்களிடம் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வரி ஏய்ப்பு செய்ததும், அதை மறைப்பதற்காக லஞ்சம் வாங்கியதும் உறுதியானது.

அதையடுத்து ஆனந்தன், முருகானந்தம், ராதிகா மற்றும் செல்வராஜை கைதுசெய்த சி.பி.ஐ அதிகாரிகள், புதுச்சேரி நீதிமன்ற தலைமை நீதிபதியும், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியுமான சந்திரசேகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும், 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி சந்திரசேகரன். அதையடுத்து அவர்கள் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலமைச்சர் ரங்கசாமி பொறுப்பு வகிக்கும் வணிக வரித்துறையில், லஞ்சம் பெறப்பட்ட புகாரில் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர் ரங்கசாமி

 சி.பி.ஐ தரப்பில் விசாரித்தபோது, ``அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல், பொய் கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்கள். அதை மறைப்பதற்காக லட்சக்கணக்கில் பேரம் பேசியிருக்கிறார்கள். அதற்கான ஆவணங்கள் எங்களிடம் சிக்கியது. அவர்களும் உண்மையை ஒப்புக்கொண்டார்கள். அதையடுத்து அவர்களைக் கைதுசெய்திருக்கிறோம்” என்றனர்.



from India News https://ift.tt/PX2uReN

No comments