Breaking News

ED ரெய்டு: ``தமிழகத்தை வன்முறை காடாக்க வேண்டும் என்பதுதான் பாஜக நோக்கம்" - சிந்தனைச் செல்வன் பொளேர்

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில்... அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதனிடையே நேற்று இரவு 7.30 மணியளவில், விழுப்புரம் திமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன். உடன், விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் புகழேந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் குலாம் மொய்தீன் ஆகியோர் இருந்தனர்.

பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை - விழுப்புரம்

அப்போது பேசிய சிந்தனை செல்வன், "ஆட்சியைப் பிடிக்க பாஜக இன்று ஊழல்வாதிகளின் புகலிடமாக மாறியிருக்கிறது. இந்திய அளவில், ஏன் உலக அளவிலேயே மிக மோசமான ஊழல்வாதிகள் கடைசியாக அடைக்கலம் புகுகின்ற இடமாக பாஜக இருக்கிறது. பொதுமக்கள் மத்தியில் தனிமைப்பட்டு கிடக்கின்ற பாஜக... இன்று தனக்கு எதிராக, அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதை கண்டு கலக்கம் அடைந்திருக்கிறது. அதனுடைய விளைவு... பொதுமக்களை சந்திப்பதன் மூலமாக எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வது என்கின்ற ஜனநாயக நடைமுறைக்கு மாறாக, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை எதிர்க்கட்சிகளின் மீது ஏவி, தனது வஞ்சத்தை தீர்த்துக்கொள்ள பாஜக முயற்சி செய்து வருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே, "இந்தியாவிற்கு இரண்டாவது விடுதலை போர் தேவை" என முழங்கியவர், இன்று தமிழகத்தை வழிநடத்தும் திமுக தலைவர் ஸ்டாலின்.  அகில இந்திய அளவிலான எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து வெற்றியும் கண்டு வருகிறார். இன்று பெங்களூரிலே வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒருங்கிணைப்பை திசை திருப்புகின்ற, மலிவான, அருவருப்பான அரசியலைத்தான்... பாஜக, 'அமலாக்கத்துறை விசாரணை' என்கிற பெயரில் இன்று நடத்தி காட்டியிருக்கிறது. திராவிட கருத்தியலில், தமிழக அமைச்சர்களிலேயே மிகவும் முன்னோடியாகவும், வலிமையாகவும் சமரசமின்றி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடியவர் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள்.

அமலாக்கத்துறை சோதனை - விழுப்புரம்

ஆளுநர் ரவி அவர்கள்... உயர்கல்வித்துறையை சார்ந்து நேரடியாக அவரிடத்தில் கருத்தியல் ரீதியாக மோதலை உருவாக்கிய போதும், கண்ணியமான முறையில் அதை கருத்தியலோடு எதிர்கொண்ட ஒரு மாபெரும் ஆளுமை. ஆகவே, பொன்முடி அண்ணனின் வீட்டில், கல்வி நிறுவனங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த அருவருப்பான அமலாக்கத்துறையின் விசாரணை என்பது தமிழகத்தின் சமூக நீதி மரபு மற்றும் கொள்கைகளுக்கு எதிரான பாஜக-வின் மலிவான அரசியல். இதைப்பற்றி தற்போது விழுப்புரம் திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதித்தோம்.

கண்ணியமான முறையிலே பாஜக-வின்  சீண்டலை எதிர்கொள்ள வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்துள்ளோம். தமிழகத்தை வன்முறை காடாக்க வேண்டும் என்பதுதான் பாஜக-வின் நோக்கம். அந்த அடிப்படையில்தான், ஹெச்.ராஜா அவர்களும், அண்ணாமலை போன்றவர்களும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆகவே, இதுபோன்ற சீண்டல்களை எதிர்கொள்வது பற்றியும் இன்று நாங்கள் ஆலோசனை செய்திருக்கிறோம்.  தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும், நாங்கள் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றோம். எதிர்வரும் தேர்தலில் பாஜக-வை துடைத்தெறிய வேண்டும் என்பதில் தமிழக மக்கள் ஒருங்கிணைந்து நிற்க வேண்டும்.

பொன்முடி

அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இதை ஏதோ திமுக-விற்கு எதிரான செயல்பாடாக கருதாமல்... தமிழகத்திற்கு, அரசியலமைப்பு சாசனத்திற்கு, ஜனநாயகத்திற்கு எதிரான பாசிச அணுகுமுறையாக புரிந்துக்கொண்டு, எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தலைமையின் வழிகாட்டுதலோடு போராட்டத்தை அணுகுவது என காத்திருக்கிறோம். இது போன்ற அடக்குமுறைகளை சந்தித்துதான் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் தலை நிமிர்ந்திருக்கின்றன. அடக்குமுறைகளால் அழிந்துப்போகின்ற இயக்கமல்ல திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள். இது இன்னும் வலுவாக மக்களிடத்திலே செயல்பட உத்வேகத்தை தரும் என நம்புகிறோம்" என்றார்.



from India News https://ift.tt/3xMNvZY

No comments