ஒன் பை டூ
இனியன் ராபர்ட், மாநில செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்
“ஒன்பது ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்துவிட்டு, தேர்தல் நெருக்கத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவருவதும், அதுவும் இந்தத் தேர்தலில் அமல்படுத்தப்படாது என்று சொல்வதும் பா.ஜ.க-வினருக்கு இதில் துளியும் ஆர்வம் இல்லை என்பதைத்தானே காட்டுகிறது... உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை ஒரே நாளில் அமல்படுத்தினார்களே, அப்போது மட்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினார்களா என்ன... இப்போதல்ல, 2029 தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தாலும்கூட, இவர்கள் பெண்கள் என்ற பெயரில் உயர்சாதியினரை மட்டும்தான் எம்.பி., எம்.எல்.ஏ-வாக ஆக்குவார்கள். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான், மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது பெறப்பட்ட சாதிவாரி விவரங்களையெல்லாம் மக்களவையில் வெளியிட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்திலேயே காங்கிரஸ் முயன்றது. ஆனால், அது நடந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டே 2ஜி விவகாரத்தைக் கையிலெடுத்து நாடாளுமன்றத்தை முடக்கினார்கள் பா.ஜ.க-வினர். பிறகு 2014 தேர்தலில் ஓ.பி.சி சமூகத்தைச் சார்த்த மோடி பிரதமரானால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரம் உடனடியாக வெளியிடப்படும் என்று சொல்லியே ஆட்சிக்கும் வந்தார்கள். சொன்னதையும் செய்யவில்லை... இயல்பாக 2021-ல் எடுக்கப்படவேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பையும் நடத்தவில்லை. ஏற்கெனவே மண்டல் கமிஷன் அறிக்கையால் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தபோது, அதை எதிர்த்து யாத்திரை நடத்தி, நாட்டையே கலவரக் காடாக்கிய பாசிச பா.ஜ.க கும்பல், தேர்தல் வந்ததும் சமூகநீதிக்காக நிற்பதுபோல நாடகமாடுகிறது. ஆனால், மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்.”
நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க
“ராகுல் காந்தி விவரம் தெரியாமல் உளறிக்கொண்டிருக்கிறார். `செய்வன திருந்தச் செய்’ என்பார்களே... அப்படி வரப்போகும் காலங்களில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படவிருப்பதால், அதையும் கணக்கில்கொண்டு மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவிருக்கிறது பா.ஜ.க அரசு. இந்தச் சாதாரண பொது அறிவுகூட இல்லாமல், ராகுல் காந்தி மலிவான விளம்பரத்துக்காகப் பேசுகிறார். இந்த ஒதுக்கீடு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ராகுல் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நான்கு முறை இந்த மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாத ஒரே காரணத்தால்தான் இந்த மசோதா நிறைவேறவில்லை. இப்போதும்கூட மசோதாவை ஏற்றுக்கொள்வதுபோல ஆதரவு தெரிவித்துவிட்டு, குழப்பத்தை ஏற்படுத்தவே காங்கிரஸார் முயல்கிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீட்டையும், மகளிர் இட ஒதுக்கீட்டையும் ஒப்பிடுவது அபத்தமானது. இப்போது ஓ.பி.சி மக்களுக்காகப் பேசும் காங்கிரஸ், இத்தனை ஆண்டுக்காலம் ஆட்சிப் பொறுப்பிலிருந்தபோது எத்தனை ஓ.பி.சி மக்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது... காங்கிரஸுக்கு ஓ.பி.சி இட ஒதுக்கீடு குறித்துப் பேச எந்த அருகதையும் இல்லை. வி.பி.சிங் ஆட்சியில் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபோது, ‘சாதிரீதியான இட ஒதுக்கீடு என்பது நாட்டைப் பிளக்கும் செயல்’ என்று சொன்ன ராஜீவ் காந்தியின் மகன், இன்று இந்த நாட்டை சாதிரீதியாகப் பிளக்க முற்படுகிறாரா என்பதே என் கேள்வி!”
from India News https://ift.tt/LrFoSVO
No comments