Breaking News

நமக்குள்ளே... மகளிர் உரிமைத் தொகை: வாழ்த்தி வரவேற்போம்... விடாமல் வலியுறுத்துவோம்!

பெண்களின் குடும்ப உழைப்பை அரசு அங்கீகரிக்கும் விதமாக, தமிழக முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், சிறப்பான முன்னெடுப்பு. வீட்டுக்காக ஊதியமற்ற உழைப்பை வழங்கும் பெண்களுக்கு பொருளாதார ஆதரவு தரும் விதமாக அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் இத்திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, குடும்பத் தலைவிகளுக்கு மாதந் தோறும் ரூ.2000 வழங்கும் திட்டத்தை ஆகஸ்ட் 30 அன்று தொடங்கியுள்ளது.

தமிழகத்தில், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குக் கீழ், ஐந்து ஏக்கருக்குக் குறை வான நிலம், வீட்டுக்கு ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சார பயன்பாடு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட, மாநிலம் முழுக்க இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. விண்ணப்பங்கள், அரசிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு, அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலமும் உறுதிசெய்யப்பட்டன. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வழிசெய்யப்பட்டுள்ளது.

தங்களது உழைப்பு, ஆற்றல் என அனைத்தையும் வீட்டில் கரைத்தாலும், ஒரு 10 ரூபாய் தேவைக்குக்கூட அப்பா, கணவர், மகன், சகோதரன் என ஆண்களையே சார்ந்திருந்த பெண்களுக்கு, இத்திட்டம் கொடுக்கும் ஆசுவாசம், ஆதரவு, சார்பின்மை மிகப்பெரியது. இது முதலீட்டுத் திட்டம் அல்ல என்றாலும், நம் மாநிலப் பெண்களின் சுயமரியாதை, அங்கீகார உறுதி திட்டம்

ஆனாலும், உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதில் பல நிர்வாகக் குளறுபடிகள் நடந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்காத சிலருக்கும் உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டதாக குறுஞ்செய்திகள் வந்துள்ளன. அரசு நிர்ணயித்துள்ள குறைவான வருமான வரம்புக்குள் வராத, பொருளாதார நிறைவு பெற்றவர்களும் பயனாளர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். தகுதியிருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட ஏழ்மைப் பெண்களின் சோகங்கள் ஒருபக்கம். இன்னொருபக்கம், மினிமம் பேலன்ஸ் இல்லை என்று வங்கிகள் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்துள்ளன. அது வங்கிகளின் வழக்கமான செயல்முறை. ஆனால், அரசு இப்படி ஒரு பிரச்னையை முன்னரே உத்தேசித்து, பயனாளர்களிடம் மினிமம் பேலன்ஸ் பற்றி அறிவுறுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காதது அதன் செயல்திறன் குறைவே.

இந்திய அளவில் மிகப் பெரிய பணப் பரிமாற்றத் திட்டமான இந்த உரிமைத்தொகை திட்டத்துக்கு ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுக்க 1.065 கோடி பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனில், அதற்கான நிர்வாகச் செயல்பாடுகளில் எந்தளவுக்கு நேர்த்தி இருந்திருக்க வேண்டும்?

முதல் கட்டத்திலேயே முளைத்திருக்கும் குழப்பங்களை சரி செய்து, தகுதியற்றவர்கள் பலன் பெறாமலும், தகுதியானவர்கள் தவிர்க்கப்படாமலும் இருக்க அரசு ஆவண செய்ய வலியுறுத்துவோம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்



from India News https://ift.tt/d5Ov3Q4

No comments