Breaking News

``இரட்டை நிலைப்பாடுகளைக் கொண்ட உலக நாடுகள்!” - காட்டமான ஜெய்சங்கர் பேசியது என்ன?!

நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய கருத்துகள் சர்வதேச அரங்கில் கவனம் பெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சி `தெற்கு எழுச்சி பெறுகிறது: நல்லுறவு, அமைப்புகள் மற்றும் சிந்தனைகள்’ ( ‘South Rising: Partnerships, Institutions and Ideas' ) என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கரின் உரை இப்பொழுது உலக அரங்கில் பேசுபொருளாகி இருக்கிறது. “உலகம் இரட்டை நிலைப்பாடுகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று அவர் காட்டமாக பேசினார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது, “இது இன்னமும் இரட்டை நிலைப்பாடுகளைக் கொண்ட உலகமாகத் தான் உள்ளது. பேசும் போது ஒரு நிலைப்பாடு, செயல்படுத்தும் போது மற்றொரு நிலைப்பாடு என இருக்கிறார்கள். செல்வாக்கு மிக்க நாடுகள் தனது திறன்களை ஆயுதமாக்கியுள்ளன. அரசியல் விருப்பத்தை விட, மாற்றத்திற்கான அரசியல் அழுத்தம் இருபதாகவே நான் நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “உலகில் மாற்றத்துக்கான ஒரு உணர்வு வளர்ந்து வருகிறது. அதன் பிரதிபலிப்பாக தெற்கு நாடுகள் உள்ளது. ஆனால் அதற்கு அரசியல் எதிர்ப்பும் உள்ளது. ஆதிக்கம் மிக்க நாடுகள் மற்றும் ஐ.நா கவுன்சில் மாற்றத்திற்கான அழுத்தத்தை எதிர்கின்றனர். இன்றும் பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்துபவர்கள் தங்கள் உற்பத்தித் திறனை பயன்படுத்துகின்றனர். வரலாற்று ரீதியாகச் செல்வாக்கு உள்ள நாடுகள் அல்லது அமைப்பு ரீதியாகச் செல்வாக்கு உள்ள நாடுகள் உண்மையில் அந்த திறனை ஆயுதமாக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் சரியான விஷயத்தைச் சொல்வார்கள் ஆனால் அவர்களிடம் இரட்டை நிலைப்பாடுகள் தான் இருக்கிறது” என்று அவர் தன்னுடைய உரையில் தெரிவித்திருந்தார்.

அவரின் அந்த உரையில் மிக முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாததுக்கு உள்ளாகினார். அவர் கலாசாரம் பற்றி பேசுகையில், “கலாசாரம் மறுசீரமைப்பு என்பது உண்மையில் உலகின் பன்முகத்தன்மையை மதிப்பது, பிற கலாசாரங்கள் மற்றும் பிற மரபுகளுக்கு மரியாதை வழங்குவதாகும். மற்றவர்களின் பாரம்பரியம், மரபு, இசை, இலக்கியம், மற்றும் அவர்களின் வாழ்வியலை மதிப்பது. இது தெற்கு உலகம் விரும்பும் மாற்றதின் ஒரு பகுதியாகும்’ என்று தெரிவித்தார்.

ஜெய்சங்கர்

ஜெய்சங்கரின் இந்த உரை என்பது உலகளாவிய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்தியா - கனடா நாட்டுக்கு இடையில் பதற்றம் நிலைவிவரும் சூழலில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த ஒன்பது நாள் பயணம் மற்றும் அவரின் உரை இவை இரண்டும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது.



from India News https://ift.tt/3xQH5vW

No comments