Breaking News

``எந்த நிபந்தனையும் இல்லை" - அமித் ஷாவை நேரில் சந்தித்து NDA கூட்டணியில் இணைந்த குமாரசாமி!

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கிய மதச்சார்பற்ற ஜனதா தளம் படுதோல்வியைச் சந்திக்கவே, 2024 தேர்தலிலும் தனித்துதான் களமிறங்குவோம் என்று கூறிவந்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நான்கு மாதங்களிலேயே, மதச்சார்பற்ற ஜனதா தளம், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையப்போவதாகப் பேச்சுகள் அடிபட்டது. அதற்கேற்றாற்போலவே, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தேவகவுடா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும், பிரதமர் மோடி, அமித் ஷா-வையும் நேரில் சந்தித்துவந்தார்.

பாஜக - குமாரசாமி - காங்கிரஸ் - கர்நாடகா

இருப்பினும் அதிகாரபூர்வ செய்திகள் எதுவும் வெளிவராத நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான எடியூரப்பா, கூட்டணியை உறுதிப்படுத்தும் விதமாக, ``தேவகவுடா மோடியைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கு 4 சீட் என்பது ஏற்கெனவே முடிவாகிவிட்டது" என்று இந்த மாத தொடக்கத்தில் கூறியிருந்தார். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, எடியூரப்பா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறினார்.

இப்படியிருக்க, தேவகவுடாவும், அவரின் மகன் குமாரசாமியும், நட்டா மற்றும் அமித் ஷா-வை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சந்தித்தாக பேச்சுகள் கசிந்தன. இந்த நிலையில், குமாரசாமி நேற்று டெல்லியில் அமித் ஷாவை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த சந்திப்பின்போது, நட்டா மற்றும் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உடனிருந்தனர்.

குமாரசாமி, ஜே.பி.நட்டா, அமித் ஷா

சந்திப்புக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய குமாரசாமி, ``பா.ஜ.க-வுடன் கூட்டணியமைப்பது குறித்து இன்று முறைப்படி விவாதித்தோம். எங்கள் தரப்பிலிருந்து இதில் எந்த நிபந்தனையும் இல்லை" என்று கூறினார்.

மேலும், நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், ``அமித் ஷா-வை, குமாரசாமி சந்தித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் அங்கம் வகிக்க முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முழு மனதுடன் நாங்கள் வரவேற்கிறோம்" என்று ட்வீட் செய்திருந்தார்.



from India News https://ift.tt/Df9Xjlu

No comments