Breaking News

``சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் பாஜக-வின் `Anti OBC DNA' அம்பலமாகியிருக்கிறது" - காங்கிரஸ் சாடல்

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தள அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, புள்ளி விவரங்களை வெளியிட்டது. தற்போது இந்திய அளவில் இந்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மத்திய அரசுக்கு இந்த சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் நெருக்கடியாக மாறும் எனக் கருதப்படுகிறது. 1931-க்குப் பிறகு சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தி, தரவுகளை வெளியிட்ட முதல் மாநிலம் என பீகார் அடையாளப்படுத்தப்படுகிறது.

காங்கிரஸ் - ராகுல் காந்தி, கார்கே

இதைத் தொடர்ந்து, ஒடிசா மாநிலமும் இந்த ஆண்டு, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ``காங்கிரஸ் தலைமையிலான கடந்த UPA அரசு, உண்மையில், மக்கள்தொகை கணக்கெடுப்பை முடித்துவிட்டது. ஆனால் அதன் முடிவுகள் மோடி அரசால் வெளியிடப்படவில்லை. மத்திய அரசு தேசிய சாதிவாரி கணக்கெடுப்பை விரைவில் நடத்த வேண்டும். சமூக அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு, உறுதியான அடித்தளத்தை வழங்குவதற்கும், சமூகநீதியை ஆழப்படுத்துவதற்கும் இத்தகைய மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம்" எனக் குறிப்பிட்டார்.

மத்தியப் பிரதேசத்தில் நடந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "சாதியின் பெயரால் நாட்டைப் பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. அன்றைக்கு ஏழைகளின் உணர்வுகளோடு விளையாடினார்கள்... இன்றும் அதே விளையாட்டைத்தான் ஆடுகிறார்கள், முன்பு சாதியின் பெயரால் நாட்டைப் பிரித்தார்கள்... இன்றும் அதே பாவத்தைச் செய்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் செய்துவரும் ஊழலால் இன்று அவர்கள் மேலும் ஊழல்வாதிகளாகவே இருக்கிறார்கள். சாதி அடிப்படையில் பிளவுபடுத்தும் எந்த முயற்சியும் பாவம்" எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி

இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``சாதிவாரிக் கணக்கெடுப்பை பா.ஜ.க எதிர்ப்பது, குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும். இந்த எதிர்ப்பின் மூலம், பா.ஜ.க-வின் OBC-க்கு எதிரான DNA அம்பலமாகியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியும், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த தங்கள் நிலைப்பாட்டை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/o3n5L6e

No comments