Breaking News

செந்தில் பாலாஜி இல்லாத திமுக - கோவையில் சறுக்குமா... சாதிக்குமா..?!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன. தேர்தல் என்றாலே கொங்கு மண்டலம் தனி கவனத்தை ஈர்க்கும். 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தாலும், கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியைக்கூட வெல்லவில்லை.

கோவை

கொங்கு மண்டலம் முழுவதுமே தி.மு.க எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து கோவை மாவட்டத்துக்கு செந்தில் பாலாஜியை பொறுப்பு  அமைச்சராக நியமித்தனர். தேர்தல் என்றாலே பூத்கமிட்டிதான் அரசியல் கட்சிகளின் முதுகெலும்பு.

தி.மு.க-வுக்கு கோவை உள்ளிட்ட  கொங்கு மண்டலத்தில் அது வீக்காக இருந்தது. பூத் கமிட்டியை வலுப்படுத்தி சந்தித்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அதே கோவை மாவட்டத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது தி.மு.க.  அதேவேகத்தில் மற்ற கட்சிகளுக்கு முன்பே நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்களையும் செந்தில் பாலாஜி வகுத்தார்.

செந்தில் பாலாஜி

பூத்கமிட்டி அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைதுசெய்துவிட்டது. இதையடுத்து முத்துசாமியை கோவை பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளனர்.

கோவை வந்த உடனே, “நான் தற்காலிகம்தான். உங்களுக்கு செந்தில் பாலாஜிதான் நிரந்தரம். அவர் விரைவில் வந்துவிடுவார்” என்று முத்துசாமி கூறியிருந்தார். ஆனால் செந்தில் பாலாஜி விரைவில் விடுதலையாகிவிடுவார் என்ற நம்பிக்கை உடன்பிறப்புகளிடம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கிறது.

முத்துசாமி

செந்தில் பாலாஜி இல்லாத தி.மு.க கோவையில் எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறது என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய  உடன்பிறப்புகள், “அ.தி.மு.க பூத்கமிட்டி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தி.மு.க சில மாதங்களுக்கு முன்பே அந்தப் பணிகளை முடித்திருந்தாலும், அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தலில் எந்த அளவுக்கு இறங்கி வேலை செய்வார் என்பது அனைவரும் அறிந்ததே.

கோவை திமுக

செந்தில் பாலாஜி இருந்திருந்தால் அவருக்குக் கடும் போட்டி கொடுத்திருப்பார். தொழில்துறை கோவை மாவட்டத்தின் அஸ்திவாரம். மின்கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தொழில்துறையினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கடந்த இரண்டரை ஆண்டுக்கால தி.மு.க ஆட்சியில் சொல்லிக் கொள்ளுமளவுக்கு கோவைக்கு பெரிய திட்டங்கள் வரவில்லை. கட்சிக்காரர்களும் மகிழ்ச்சியாக இல்லை. செந்தில் பாலாஜி இருந்தபோது ஒவ்வொரு பூத்கமிட்டிக்கும் பொறுப்பாளரை நியமித்திருந்தார். அவர்கள் மூலம் பல்வேறு வியூகங்களை செயல்படுத்துவார். தற்போது பூத்கமிட்டிக்கு பொறுப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் சம்பிரதாயத்துக்காக மேற்பார்வை மட்டுமே செய்கின்றனர்.

கோவை திமுக

மற்றபடி பூத்கமிட்டிக்கும், கட்சிக்கும் தொடர்பே இல்லை. சமீபத்தில் முதல்வர் தலைமையில் நடந்த பாக முகவர்கள் கூட்டமும் கண் துடைப்புதான். தேர்தலின்போது மட்டும் பூத்கமிட்டியை தூசி தட்டியதே, கடந்த தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தியது. அப்படி இல்லாமல், இப்போதிருந்தே பூத்கமிட்டியை வலுப்படுத்தினால்தான், கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை தக்கவைக்க முடியும்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/B6xr9qe

No comments