Breaking News

`எங்களைச் சொல்வதற்கு பாஜக-வுக்கு என்ன அருகதை இருக்கிறது?' - விளாசும் கே.பாலகிருஷ்ணன்!

அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி முறிவு, பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.

“அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவை வி.சி.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்கின்றன. ஆனால், தி.மு.க நாடகம் என்கிறதே?”

“நாங்களும் அ.தி.மு.க-வின் இன்றைய முடிவைத்தான் வரவேற்கிறோம். ஆனால், அதில் உறுதியாக இருப்பார்களா என்று தெரியாது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர்களுக்குள் சமரசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் சி.ஏ.ஏ, ஒரே நாடு, ஒரே தேர்தல் என பா.ஜ.க முன்னெடுக்கிற எல்லாவற்றிலும் உடன்பட்டு அ.தி.மு.க ஆதரிக்கிறது. எனவே அண்ணாமலையின் பேச்சை மட்டுமே அடிப்படையாக வைத்து கூட்டணி ஏற்படவோ, பிரியவோ முடியாது.”

“கடைசி நேரத்தில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டால், சில கட்சிகள் அ.தி.மு.க அணிக்குச் செல்லக்கூடும் என்கிறார்களே?”

“இவையெல்லாம் வெற்று ஊகம். பா.ஜ.க கூட்டணியிலிருந்து இன்றைக்கு அ.தி.மு.க வெளியில் வந்திருந்தாலும், கடந்தகால தவறுகள் எல்லாம் நியாயமாகிவிடுமா... இல்லை, அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்து, அவர்கள் செய்ததை எல்லாம் நியாயம் என்றுதான் சொல்லிவிடுமா?”

அதிமுக - பாஜக `மோதல்'

“பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்துகிறதா தி.மு.க அரசாங்கம்... கூட்டணிக் கட்சிகளும் கண்டும் காணாதுபோல இருந்துவிட்டனவோ?”

“நாங்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறோம். சுமுகமாக பிரச்னையை முடிக்க அரசிடமும் கோரிக்கை விடுத்திருக்கிறோம். கோரிக்கையை எப்போது நிறைவேற்றுவது என்பதை நிதிநிலைக்கு ஏற்ப அரசுதான் முடிவெடுக்க வேண்டும். நியாயமான கோரிக்கை வைக்கும்போது நிறைவேற்றுங்கள் என்று நாங்கள் சொல்லத் தவறுதில்லை.”

“ஆனால் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்து வாக்குறுதி கொடுத்தாரே?”

“போராட்டக்காரர்களின் எதிர்ப்பார்ப்பில் நியாயம் இருக்கிறது. நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் இந்த 2 ஆண்டுகளில் புதிதாக உருவான பிரச்னைகள் அல்ல இவை. 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றாத ஏராளமான கோரிக்கைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் நிறைவேற்றிட முடியாது. முன்னுரிமை அடிப்படையில் இதை நிறைவேற்றுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம்.”

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

“33% இட ஒதுக்கீட்டை வைத்து காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் மகளிரை சாதிரீதியாகப் பிரிக்கப் பார்க்கிறார்கள் என பிரதமர் மோடி குற்றம்சாட்டுகிறாரே?”

“சாதி அடிப்படையில் மக்களைப் பிரித்து ஏற்றத்தாழ்வுகள் பாவிக்கும் சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்கும் உரிமை கிடைக்க என்ன வழி இருக்கிறது... எதைச் சொல்லி பிரித்து வைத்திருக்கிறார்களோ, அதைச் சொல்லித்தானே உரிமையைப் பெற வேண்டியிருக்கிறது. உள் இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் 33% இடங்களை யார் நிரப்புவார்கள் என்று நமக்குத் தெரியாதா... ஆனால் அதைமறைத்துவிட்டு, சாதிரீதியாக மகளிரைப் பிரிக்கப் பார்க்கிறார்கள் எனப் பேசுகிறார் மோடி. ஓ.பி.சி பெண்கள் அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது என்று மோடிதான் சாதி அரசியல் செய்கிறார் என்பது இதில் தெளிவாகத் தெரிகிறது.”

“ஆனால் பா.ஜ.க-வால்தானே மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவே முடிகிறது?”

“மற்ற கட்சிகள் எல்லாம் வேண்டாம், வேண்டாம் என்று சொன்னவை பலவற்றை உடனுக்குடன் வேண்டுமென்றே நிறைவேற்றினார்கள். ஆனால், 2029-ல்தான் 33% இட ஒதுக்கீடு கொடுக்கப் போகிறோம் என்கிறார்கள். மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்தவில்லை, சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த மாட்டோம் என்கிறார்கள். இதையே 2029-ல் நிச்சயம் முடிக்க மாட்டார்கள். அதற்குப் பிறகு தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். அது எப்போது நடக்கும் என்று தெரியாது. இதெல்லாம் முடிந்த பிறகுதான் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு நிறைவேறும் என்றால் எப்போது... கூலிக்கு மாரடிப்பது என்று கிராமங்களில் சொல்வதைப்போல, பெயருக்கு நாங்களும் செய்தோம் என்று மசோதா நிறைவேற்றிவிட்டார்கள், அவ்வளவுதான்.”

புதிய நாடாளுமன்றம்

“பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட்டுவிட்டார்கள். தமிழ்நாட்டில் நடத்தச் சொல்லி சி.பி.எம் கேட்காதா?”

“தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தித்தான் ஆக வேண்டும். கேரளா, மேற்கு வங்கத்தில்கூட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், மாநில அரசுகள் இதைச் செய்வது வேறு, மத்திய அரசு செய்வது வேறு. மக்கள்தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து மத்திய அரசால் இதை எளிமையாகச் செய்துவிட முடியும். முறையான தரவுகள் இருந்தால்தான் அரசின் நிவாரணத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் முறையாக கொண்டுபோய் சேர்க்க முடியும். அனைத்து தரப்பு மக்களையும் வளர்ப்பதன்மூலம்தான் சாதிய உணர்வை மட்டுப்படுத்த முடியும்.”

“கம்யூனிஸ்ட்டுகள்தான் இந்தியாவின் வளர்ச்சிக்கே பெரும் தடை என்று அண்ணாமலை கூறுகிறாரே?”

“பொதுத்துறையைப் பாதுகாக்க வேண்டுமென்று நாங்கள் சொல்கிறோம். அதற்காக நாங்கள் போராடுகிறோம். ஆனால் ஒவ்வொன்றாக விற்று அழித்துக் கொண்டிருக்கிறது மோடி ஆட்சி. பிறகு எப்படி இந்தியா வளரும்... கார்ப்பரேட்டுகள்தான் வளர்வார்கள். சரி, மோடி ஆட்சியில் தொழில், விவசாயம் வளர்ந்திருக்கிறதா... வேலைவாய்ப்புகள் பெருகிவிட்டதா... ரூபாய் மதிப்பு உயர்ந்துவிட்டதா... சுதந்திர இந்தியாவிலேயே மிக மோசமான ஆட்சி என்றால் அது மோடி ஆட்சிதான். எனவே, எங்களைப் பார்த்து இதைச் சொல்லும் அருகதை பா.ஜ.க-வுக்கு இல்லை. நாங்கள் வறுமை ஒழிய பாடுபடுகிறோம். ஆனால், பா.ஜ.க இந்தியாவின் வளர்ச்சியை சுடுகாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.”

Modi

“காவிரி விவகாரத்தில் உறுதியான முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமி கேட்கிறாரே?”

“அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டலாம். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் என்ன பயன் இருக்கப்போகிறது... புதிதாக கோரிக்கை எதையாவது வைக்கப்போகிறோமா... காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றன. பா.ஜ.க மட்டும்தான் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது தெரியவில்லை.”



from India News https://ift.tt/0ftJlEN

No comments