ஸ்ரீவில்லிப்புத்தூர்: கிராமசபைக் கூட்டத்தில் கேள்விகேட்ட விவசாயியைத் தாக்கிய விவகாரம்; ஒருவர் கைது!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், பிள்ளையார்குளம் ஊராட்சிக்குட்பட்ட கங்காகுளம் கிராமத்தில் கடந்த 2-ம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் கேள்வி கேட்ட அம்மையப்பன் எனும் விவசாயியை ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. மான்ராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையிலேயே ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியன் என்பவர் காலால் எட்டி உதைத்தார். இது தொடர்பான வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியனின் செயலுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து அவர் தலைமறைவானார்.
சம்பவம் தொடர்பாக விவசாயி அம்மையப்பன் அளித்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீஸார் ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியன் மீது வழக்கு பதிவுசெய்து, அவரைத் தேடி வந்தனர். இந்த நிலையில் கிராமசபைக் கூட்டத்தின்போது அம்மையப்பனைத் தாக்கிய ஊராட்சிச் செயலரின் ஆதரவாளரான அழகு தேவேந்திரபுரத்தைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் ராசு (42) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய நபரான ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியனைக் கைதுசெய்யும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விவசாயி அம்மையப்பனைத் தாக்கிய வழக்கிலிருந்து முன்ஜாமீன் கேட்டு, ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியன் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/QTzGOy9
No comments