``போராட்டம் என்ற பெயரில் வருத்திக் கொள்ளாதீர்கள்!” - ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் அன்பில் மகேஸ்
திருச்சி மாவட்டப் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து கல்வியாளர்கள் சங்கமம் நடத்திய "ஆசிரியர்களுடன் அன்பில் - நம்மில் ஒருவர்" நிகழ்ச்சி திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்றுமுந்தினம் (07-10-2023) மாலை நடைபெற்றது. 10 நாள்களாக நடைபெற்று வந்த ஆசிரியர்கள் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பங்கேற்போடு நடைபெற்றுள்ள இந்நிகழ்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஐஏஎஸ் இந்நிகழ்ச்சியைத் தலைமையேற்று தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு ஆசிரியர்களின் கோரிக்கைகளை தாங்கிய `ஆசிரியர் மனசுப் பெட்டி’யை திறந்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் தங்கமூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் வை. குமார் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் க. அறிவொளி, `ஆசிரியர் மனசுப் பெட்டி’ திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வின் இறுதி வரையில் பங்கேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி நிறைவுரையாற்றினார்.
ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த தங்கள் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஆசிரியர் மனசுத் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணை இயக்குநர் குமார் பேசுகையில், "சமூகத்தில் ஆசிரியர் என்ற வார்த்தைக்கு இருக்கும் மதிப்பை பல்வேறு எதார்த்தமான உதாரணங்களோடு எடுத்துரைத்து, அதிகாரிகளும் ஆசிரியர்களும் நல்லுறவுடன் இருக்க வேண்டும்” என வலியுறுத்திப் பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் க. அறிவொளி, "ஆசிரியர்கள் போராட்டத்தின் போது, `குடிநீருக்கு என்ன செய்றாங்க? அதை நாமே வழங்கலாமே!’ என்று ஆலோசனை சொன்னவர் அமைச்சர் அன்பில் மகேஸ். இவரிடம் இணக்கமாக பேசியே நீங்கள் உங்களுக்கான கோரிக்கைகளை பெற்றுக்கொள்ளலாம்" என்றார்.
இறுதியாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், "உங்களது போராட்டத்தில் நியாயம் இருக்கிறது. நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள் என்பதாகப் பார்க்கவில்லை. உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினீர்கள் என்பதாகத்தான் எடுத்துக் கொள்கிறேன். சொல்வது எளிது. நிதிநிலைமை, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் அரசு முடிவு எடுக்க முடியும். "ஆசிரியர் மனசு" வழியே கிடைக்கப் பெறும் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்றி வருகிறோம். போராட்டம் என்ற பெயரில் உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/8PyHQS1
No comments