Breaking News

ஆவின் பச்சை பால் பாக்கெட் சர்ச்சை: `பச்சைப் பொய் சொல்கிறாரா அமைச்சர் மனோ தங்கராஜ்?’ - முழுப் பின்னணி

தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை வரும் நவம்பர் 25-ம் தேதியோடு நிறுத்திக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும், அதற்கு பதிலாக பச்சை நிற பாக்கெட் பாலை விட 1% கொழுப்புச் சத்து குறைவான ஊதா நிற பாக்கெட் விற்பனையை அதிகரிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தமிழ்நாடு அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், அதற்கு பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்திருக்கும் விளக்கமும் சர்ச்சையையும் சந்தேகத்தையும் கிளப்பியிருக்கிறது.

ஆவின் ஊதா பால்

அரசியல் கட்சித் தலைவர்களின் கண்டனம்:

இந்த விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ``மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல். ஏற்கனவே 6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79% கொழுப்புச் சத்தே இருப்பது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தில், பா.ஜ.க மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்தச் சோதனை அறிக்கையை அமைச்சரின் பரிசீலனைக்காக இணைத்திருக்கிறோம். இவ்வாறு கொழுப்புச் சத்துக்களை குறைத்து ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பியிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்று விளையாடி கொண்டிருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. மேலும், பாலில் கொழுப்புச் சத்தைக் குறைத்து விட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்து வருவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பால் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதையடுத்து அ.தி.மு.க பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, ``2021ல் விடியா திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு தலைகீழாக மாறியது. பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. பால் கொள்முதல் 20 லட்சம் லிட்டராகக் குறைந்தது. நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் 4.5 சதவீதம் கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் இம்மாதம் 25ந் தேதி முதல் நிறுத்தப்படும் என்று செய்திகள் தெரிய வருகின்றன. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்து எங்கள் ஆட்சியில் இருந்ததுபோல், ஆவின் பாலையே நம்பியுள்ள தமிழக மக்களுக்கு நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்துகிறேன்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி

அதேபோல பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ``ஆவின் ஆலைகளில் பதப்படுத்தப்படும் பாலில் கொழுப்புச்சத்துக் குறைவாக இருப்பதால், அதன் கொழுப்புச் சத்தை 4.5% என்ற அளவுக்கு உயர்த்த ஆண்டுக்கு ரூ.840 கோடி அளவுக்கு வெண்ணெய்யை வாங்கி பாலுடன் சேர்க்க வேண்டியுள்ளது. அதனால் ஏற்படும் கூடுதல் செலவை தவிர்ப்பதற்காகத் தான் பச்சை உறை பால் உற்பத்தி மற்றும் விற்பனையை ஆவின் நிறுவனம் நிறுத்தியிருக்கிறது. 3.5% என்ற குறைந்த கொழுப்புச் சத்துக் கொண்ட ஆவின் டிலைட் பாலுக்கு, 4.5% கொழுப்பு சத்து கொண்ட பச்சை உறை பாலின் விலையையே வசூலிப்பது மறைமுகமான விலை உயர்வு ஆகும். இதனால், ஆவின் பால் வாடிக்கையாளர்கள் தனியார் பாலை நோக்கி செல்லும் வாய்ப்புள்ளது. அதற்காகத் தான் ஆவின் இப்படி செய்கிறதா? என்ற ஐயம் எழுகிறது.

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

ஆவின் நிறுவனம் கடுமையாக நிர்வாக சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விற்பனை 10 லட்சம் லிட்டருக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், அதன் கொள்முதல் வழக்கமான அளவை விட சுமார் 10 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் காலப்போக்கில் ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்த நேரிடும். இந்த நிலையை மாற்ற பால் கொள்முதலையும், கொள்முதல் விலையையும் உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டின் பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கை குறைந்தது 50% ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என கோரிக்கை வைத்தார். இதேபோல பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பால் முகவர்கள் சங்கங்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர் மனோ தங்கராஜ் கொடுத்த விளக்கம்:

இந்த நிலையில், ஆவின் பச்சை பால் பாக்கெட் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ``அதானியை வளர்ப்பதற்கு பிரதமர் மோடி ஓடுவது போல், தமிழ்நாட்டில் சில கார்பரேட்களை வாழ வைப்பதற்காக சில கைக்கூலிகள் ஓடி கொண்டிருக்கிறார்கள். ஆவினை தகற்க வேண்டும் என்பதே இந்த கார்பரேட் கை கூலிகளின் நோக்கம். ஆவின் நிறுவனத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதன் வெளிப்பாடுதான் ஆவின் பால் மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவது. ஆவின் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் சிலர் பொய் சொல்லி வருகின்றனர். பச்சை நிற நிலைபடுத்தப்பட்ட பசும்பாலில் கூடுதலாக 1% கொழுப்பு சேர்த்து பதப்படுத்தி விற்கப்பட்டு வருகிறது. கூடுதலாக கொழுப்பு சேர்ப்பது அறிவியல்பூர்வமாக இன்றைய வாழ்க்கை தரத்துக்கு தேவையற்ற ஒன்றாகும். பல வாடிக்கையாளர்கள் கூடுதலாக கொழுப்பு அல்லது புரதம் உள்ளிட்ட திடப்பொருட்கள் சேர்ப்பதை விரும்பவில்லை. பசும் பாலில் சராசரியாக கிடைக்கும் 3.3% கொழுப்பு அளவிலேயே மக்களுக்கு தரமான பசும்பால் வழங்கும் நோக்கத்தோடு 3.5% கொழுப்பு மற்றும் 8.5% இதர சத்துக்கள் அடங்கிய பாலுடன் வைட்டமின் A மற்றும் D தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு செறிவூட்டி ஊதா நிற பாக்கெட்டுகளில் ஆவின் டிலைட் பாக்கெட்டை வழங்கி வருகிறோம். ஆவின் நிறுவனம் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதன் காரணமாகத்தான் குறைந்தபட்ச ஆதார விலை பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கிறது. வட மாநில பால் நிறுவனங்களை தமிழ்நாட்டில் நுழைக்க வேண்டும் என்பதற்காக கார்ப்பரேட் கைக்கூலிகள் ஆவின் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார்கள்!" என குற்றச்சாட்டுடன் பதிலளித்தார்.

மனோ தங்கராஜ்

அமைச்சர் விளக்கத்தின்மீது குற்றச்சாட்டு:

இந்தநிலையில் அமைச்சரின் விளக்கம் குறித்து ஆவின் டிரான்ஸ்போர்ட் கான்ட்ராக்டரும் அ.தி.மு.க முன்னாள் தென்சென்னை மாவட்ட செயலாளருமான ஆவின் என்.வைத்தியநாதனிடம் பேசினோம். ``ஆவின் பச்சை பால் பாக்கெட் விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான பச்சைப் பொய்யைச் சொல்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். 40 ஆண்டுகாலமாக 4.5% கொழுப்பு சத்துடன் விற்கப்பட்டுவந்த பச்சை பால் பாக்கெட்டை, மக்களின் ஆரோக்கியத்துக்கு தேவையற்றது என்று சொல்லி விளக்கமளிக்கிறாரே அமைச்சர் மனோ தங்கராஜ், இதற்கு முன்பு பால்வளத்துறை அமைச்சர்களாக இருந்த கே.என்.நேரு, ஆற்காடு வீரசாமி, உடுமலை ராதாகிருஷ்ணன், கிருஷ்ணசாமி, ராஜேந்திரபாலஜி, நாசர் உள்ளிட்டோருக்கெல்லாம் தெரியாத விஷயம் இவருக்கு மட்டும் தெரிந்துவிட்டதா? முதலில் ஆவினில் `Cow Milk' என்றோ `buffalo Milk' என்றோ தனித்தனியாக பால் வகை கிடையாது. ஆவினில் இரண்டுமே கலந்த 'Mixed Milk' மட்டுமே உண்டு. ஆனால், புதிதாக அறிமுகப்படுத்திய ஊதா நிறப் பால் பாக்கெட்டில் Cow Milk என்று போடப்பட்டிருக்கிறது. தவிர, Vegetarian milk, Non-vegetarian Milk என்றெல்லாம் புது விளக்கமெல்லாம் கொடுக்கிறார் அமைச்சர். இந்தியாவின் நம்பர் 1 நிறுவனமான அமுல் நிறுவனமாகட்டும், தென்னிந்தியாவின் முன்னனி நிறுவனமான நந்தினி நிறுவனமாகட்டும் இரண்டுமே 4.5% கொழுப்பு சத்து கொண்டு பாலை விநியோகிக்கும்போது ஆவின் மட்டும் அதை நிறுத்துவது ஏன்?

ஆவின் டிரான்ஸ்போர்ட் கான்ட்ராக்டர், ஆவின் என்.வைத்தியநாதன்

உண்மை காரணம் என்னவென்றால், தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.3 குறைக்கப்பட்டது. இதனால், ஆவின் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.280 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை சரிகட்டத்தான் ஆரஞ்சு பால் பாக்கெட் விலையை தொடர்ந்து உயர்த்திக்கொண்டும், 40%-க்கும் அதிகமான மக்கள் வாங்கிவந்த பச்சை பால் பாக்கெட்டை நிறுத்திவிட்டு புதிதாக ஊதா நிறப் பால் பாக்கெட் விற்பனையை அதிகரிக்கவும் செய்துவருகிறார்கள். இந்த உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே? அதைவிடுத்து சமாளிப்பதற்காக வீண் பொய்களைக் கூறி மக்களை குழப்பி வருகிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். தி.மு.கவில் ஒரு வட்டச்செயலாளருக்கு இருக்கக்கூடிய விவரம் கூட இவருக்கு இல்லை! தவறான தகவலைக் கூறி, மக்களிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கெட்டப் பெயரை உண்டாக்குகிறார். இப்படியே சென்றால் ஆவின் நிறுவனம் திவால் நிலைக்குத்தான் செல்லும்!" என கடுகடுத்தார்.

அமைச்சரின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என, பலதரப்பினரிடம் இருந்து எதிர்குரல்கள் வர தொடங்கி இருப்பதால், ஆவின் பச்சை பால் சர்ச்சை, அமைச்சரின் விளக்கத்தை தாண்டியும் தொடர்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/i7HUBa9

No comments