Breaking News

கழுகார் பதில்கள்: என்ன நடந்தால் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும்?

நடேஷ் கன்னா, நெல்லை.

புயல்களுக்கு ஏன் அழகான பெயர்களை வைக்கிறார்கள்?

புயல்தான் பயங்கரமாக இருக்கிறது. பெயராவது ஆறுதலாக இருக்கட்டுமே என்றுதான்!

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

துவாரகா பிரபாகரன்..?

ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன, பதில்களாக!

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

“காங்கிரஸ் ஒரு செத்துப்போன பாம்பு” என்று நடிகை குஷ்பு கூறியிருக்கிறாரே?

பிறகு எதற்கு அதை அவ்வளவு ஆவேசமாகத் தாக்குகிறாராம்?!

சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

தொழில் போட்டியும், நெருக்கடியும்தான் நடிகர்களை அரசியலுக்கு இழுத்துவருகின்றனவா?

ரௌடிகளுக்கு இது பொருந்தும். ஆனால், நடிகர்கள் அரசியலுக்கு வர ஆசைப்படுவது பெரும்பாலும் அதிகார ஆசையில்தான். தன் பின்னால் விசிலடித்துக்கொண்டு வரும் லட்சக்கணக்கான கூட்டத்தைவைத்து ‘என்ன செய்யலாம்?’ என யோசிக்கும்போது, அதன் உட்சபட்ச அறுவடைக்கான இடமாக அரசியல் நாற்காலிகள்தான் அவர்களின் மனக்கண்ணில் தோன்றுகின்றன.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

நேர்மையாக வாழ்வதும், கத்தி மேல் நடப்பதும் ஒன்றுதானே..?

இல்ல... ஒப்பிட்டுப் பார்த்தா, கத்தி மேல் நடப்பது ஈஸிதான்!

சு.முத்துராமலிங்கம், வைகுண்டம்.

என்ன நடந்தால் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும்?

மிராக்கிள்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

இவ்வளவு பெரிய சீனியரான அமைச்சர் துரைமுருகன், உதயநிதிக்குத் துதி பாடுவதிலேயே குறியாக இருக்கிறாரே ஏன்?

எந்தப் பாடலைப் பாடினால், எந்தக் கதவு திறக்கும் என்று நன்கு தெரிந்தவர்.

ஏந்தல் இளங்கோ, மதுராந்தகம்.

“மோடிதான் உண்மையான டெல்டாக்காரர்” என்கிறாரே அண்ணாமலை?

ம்... யாரங்கே... ‘தஞ்சை விவசாயி’ மாடல் டிரெஸ் ஒண்ணு பார்சல்..!

பரமேஷ்வரன், திருநள்ளாறு.

கழுகார் கடவுளிடம் வேண்டுவது உண்டா?

இல்லை. இயற்கை எனும் பெரிய சக்திக்கு நன்றி சொல்வது உண்டு. ஆனாலும், எல்லா மதங்களின் பிராத்தனை வடிவங்களும், பாடல்களும், இசையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, மண்ணில் எவ்வளவு உழைத்தும் பலன் கிடைக்காத பாட்டாளிகளின் கோபமும் கெஞ்சலும் நிறைந்த உயிர்ப்புள்ள வேண்டுதல்களுக்குத் தலைவணங்கத் தோன்றும். அப்படி வேண்டுதல் வடிவிலான எனக்குப் பிடித்த கவிதை ஒன்று, உங்களுக்காக:

பேஞ்சா பேயும் காஞ்சா காயும்

வக்காள ஓழி வானம்

ஆடியில வுட்டாதான் தையில அறுப்பு

இந்த மேக்கூரைய அடச்சாதான் நிம்மதி

பெரிய புள்ள சாதக நோட்டு

சின்னப் பய சட்டிபிகேட்டு

அப்பனோட மொடங்கிப்போன தப்பு

எல்லாங் கெடக்கு எறவானத்துல

பொறுத்ததுதான் பொறுத்துச்சி

அறுக்குற மட்டும் பொறுத்தாக்க

கருப்பஞ் செத்த போட்டிடலாம்

பெரியவளுக்கொரு வழிய தேடலாம்

ரெண்டு சுருட்டும் பட்டசாராயமுந் தர்றேன்

செத்த வழிகாட்டேங் கருப்பா.

- வினையன்

(நூல்: எறவானம்)என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

‘பருத்திவீரன்’ விவகாரத்தில், இயக்குநர் அமீரிடம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மன்னிப்புக் கேட்டிருக்கிறாரே?

மன்னிப்புக் கேட்கவில்லை, வருத்தம் தெரிவித்திருக்கிறார். ‘பருத்திவீரன்’ விவகாரம் தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் இருக்கிறது. ஆனால், வாதங்களோ மீடியாக்களில் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பரபரப்புகளுக்கும் பேட்டிகளுக்கும் பின்னால் வேறு சில ‘பர்ப்பஸ்’கள் இருப்பதும் வெளிப்படையாகப் புரிகிறது. நடக்கட்டும்..!ரா.ராஜ்மோகன், விழுப்புரம்.

`140 கோடி மக்கள் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும்படி திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் வேண்டிக்கொண்டதாக’ கூறுகிறாரே பிரதமர் நரேந்திர மோடி?

கோவிந்தா... கோவிந்தா..!



from India News https://ift.tt/T9Fjcr8

No comments