`உண்மையான டெல்டாக்காரர் பிரதமர் மோடிதான்' என்கிறாரே அண்ணாமலை? - ஒன் பை டூ
இ.பரந்தாமன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க
“அண்ணாமலை சொன்ன கருத்தைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. டெல்டாவுக்கும் பா.ஜ.க அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது... உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னபோதுகூட, மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு `காவேரி மேலாண்மை ஆணையம்’ என்று மாற்றி அமைத்தது. அதற்கும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை சேர்மனை நியமிக்காமல் இழுத்தடித்தது. வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் மாதக்கணக்கில் போராடி, அதில் 230 விவசாயிகள் உயிரிழந்தபோதும் நெஞ்சம் உருகாத பாசிச அரசுதான் மத்திய பா.ஜ.க. இவர்களுக்கு டெல்டா குறித்தோ, விவசாயிகள் குறித்தோ பேச என்ன அருகதை இருக்கிறது... ‘நதிகளை இணைப்போம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம்’ என்று கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாதவர் பிரதமர் மோடி. ஆனால், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 7,000 கோடி வேளாண் கடன் தள்ளுபடி என்று தி.மு.க அரசு விவசாயிகளுக்குச் செய்த திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். காவிரி வேளாண் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள தி.மு.க அரசு அனுமதி மட்டுமே கொடுத்தது. எண்ணெய் நிறுவனங்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன... பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் செயலையே பா.ஜ.க அரசு செய்துவருகிறது. தமிழக விவசாயிகள் பா.ஜ.க-வின் பொய்ப் பிரசாரத்தை ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை!”
ஜி.கே.நாகராஜ், மாநில விவசாய அணித் தலைவர், பா.ஜ.க
“முழுக்க முழுக்க உண்மை. தன்னை மூச்சுக்கு மூச்சு டெல்டாக்காரன் என்று சொல்லும் ஸ்டாலின், டெல்டா விவசாயிகளுக்குச் செய்த நன்மை என்ன... பா.ஜ.க அரசில்தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, 150 ஆண்டுக்கால காவிரிப் பிரச்னைக்கு ஒரு பெரும் தீர்வு கிடைத்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, கர்நாடகாவில் பா.ஜ.க அரசு இருக்கும்வரை காவிரித் தண்ணீர்ப் பிரச்னை எழுந்ததா... ஆனால், தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து காவிரித் தண்ணீர் விவகாரம் பூதாகரமாகிறது. வேளாண் சட்ட மசோதா குறித்து விவசாயிகள் மத்தியில் ஒரு தவறான புரிதல் ஏற்பட்டுவிட்டது. அது நடைமுறைக்கு வந்திருந்தால் விவசாயிகள் நன்மைகள் மட்டுமே அடைந்திருப்பார்கள். விவசாயிகளுக்கு கிசான் சம்மான் நிதி, ஓய்வூதியம், மானியம் என்று ஆண்டுக்கு 6.5 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு செலவு செய்கிறது. தமிழக டெல்டா பகுதியில் விளையும் அரிசி, இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லப்படுவதற்கு மத்திய அரசு மட்டுமே காரணம். தி.மு.க-வுக்கு என்றுமே விவசாயிகள் குறித்துக் கவலை கிடையாது. இதே தி.மு.க அரசுதான் காவிரி டெல்டா மண்டலத்தைக் காவு கொடுத்தது. ஆனால் பாரத பிரதமர் மோடி, இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் கொண்டு வந்தார். அதனால்தான் சொல்கிறோம், உண்மையான டெல்டாக்காரர் பிரதமர் மோடிதான்!”
from India News https://ift.tt/Dm0eo8j
No comments