Breaking News

`இந்தியாவை மாற்றுவேன் என்ற பிரதமர் நாட்டின் பெயரை மாற்றியிருக்கிறார்' என்ற உதயநிதியின் விமர்சனம்?

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“அரசியலமைப்புச் சட்டத்தில் ‘இந்தியா என்ற பாரதம்’ என்ற வார்த்தை இருப்பதே தெரியாமல், விளையாட்டுப் பிள்ளைபோலப் பேசியிருக்கிறார், விளையாட்டுத்துறை அமைச்சர். தனிப்பட்ட உதயநிதிக்கு இது தெரியவில்லை என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஏனென்றால், எந்தத் தகுதியும் இல்லாமல், கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர் என்ற ஒரே தகுதியுடன் பொறுப்புக்கு வந்ததால் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அவர். ஏற்கெனவே, ‘சனாதனத்தை ஒழிப்பேன்’ என்று பேசி தானும் கெட்டு, தன் கூட்டணியிலிருக்கும் காங்கிரஸின் வீழ்ச்சிக்கும் காரணமாகிவிட்டார் உதயநிதி. ஆனாலும், அவருக்குப் புத்தி வந்ததாகத் தெரியவில்லை. இனியாவது மற்றவர்கள் எழுதிக்கொடுப்பதை அப்படியே பேசாமல் நாட்டின் கலாசாரம், பண்பாடு, நாகரிகம், சட்டம் குறித்துத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். எதற்காகச் சொல்கிறேன் என்றால், வெறுமனே பா.ஜ.க-வைத் திட்டி மட்டுமே அரசியல் செய்ய அவர்கள் ஒன்றும் எதிர்க்கட்சியில்லை. தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கிறார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு பா.ஜ.க-வைத் திட்டுவது மட்டும்தான் தங்கள் வேலை என்று அவர்கள் நினைப்பார்களேயானால், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்பட்டதைப்போல, தமிழ்நாட்டிலும் தி.மு.க-வை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிடுவார்கள் மக்கள்.”

நாராயணன் திருப்பதி, தமிழன் பிரசன்னா

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

“அமைச்சர் உதயநிதி பேசுவதெல்லாம், இந்த பா.ஜ.க-வினரை ஏன் இப்படி மனவேதனைக்கு உள்ளாக்குகிறது என்றால், அவர் சொல்கிற ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. நாட்டின் உண்மையான பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல், ராமர் கோயில் கட்டுவது, தெருவுக்கும் ஊருக்கும் பெயரை மாற்றுவது என்று பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாத விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது பா.ஜ.க. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 156 டாலராக இருந்தபோதும், மக்களுக்கு வெறும் 66-70 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைத்தது. ஆனால், மோடி பிரதமரான பிறகு கச்சா எண்ணெய் விலை பாதியாகக் குறைந்தும், பெட்ரோல் விலை இரு மடங்காக உயர்ந்தது. இத்தனைக்கும் பெட்ரோல், கியாஸ் விலையைக் குறைப்போம், டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துவோம், ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்துத்தான் ஆட்சிக்கே வந்தார்கள். ஆனால், அவர்கள் சொன்னதற்கு நேர்மாறாகத்தான் எல்லாம் நடக்கின்றன. இதைப் பற்றியெல்லாம் மக்கள் சிந்தித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் மதவெறியைத் தூண்டிவிடுவது, நாட்டின் பெயரை மாற்றுவது போன்ற திசைதிருப்பும் அரசியலைச் செய்கிறது மோடி அரசு. ‘தெலங்கானாவில் பா.ஜ.க வெற்றிபெறவில்லையென்றால் நான் மரணிப்பதற்குச் சமம்’ என்று பேசினார் மோடி. அதையும் மீறி மக்கள் அவர்களைத் தோற்கடித்திருக்கிறார்கள் என்றால், மக்கள் பா.ஜ.க-மீது எந்த அளவுக்குக் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.”



from India News https://ift.tt/1tu6GKh

No comments