Breaking News

‘பேசி தீர்த்துக்கோங்க’ - ஸ்டாலின் vs ரவி மோதல்... முற்றுப்புள்ளி வைக்குமா உச்ச நீதிமன்ற அறிவுரை?!

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல், அடுத்த லெவலுக்குப் போயிருக்கிறது. 'இது தமிழ்நாடு இல்லை... தமிழகம் தான்' என்பது உள்ளிட்ட தமிழ்நாட்டின் கொள்கைகளுக்கும், மக்களின் எண்ணோட்டத்துக்கும் நேர் எதிராக இருந்து ஆளுநர் ரவி கருத்துகளை பேசி வருகிறார். அதேபோல, பா.ஜ.க-வின் கொள்கை கோட்பாடுகளை பேசி வருகிறார் ஆளுநர். அண்ணாமலைக்குப் போட்டியாக ஆளுநர் ரவி, தி.மு.க எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார்.

ஆளுநர் ரவி

தமிழகத்தின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையா, ஆர்.என்.ரவியா என்று குழப்பமாக இருக்கிறது. மாதத்துக்கு ஒரு முறை, ஒன்றுக்கும் உதவாத ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, ‘லொட லொட’வெனப் பேசி, சர்ச்சையாக்குவதையே வழக்கமாக்கியிருக்கிறார் ஆளுநர்.' என்று தி.மு.க-வினர் ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அரசு இயற்றும் மசோதாக்களை நிறுத்தி வைத்துக் கொண்டு, ' நான் நிறுத்தி வைத்தால், அது முடிந்து போய்விட்டதாக அர்த்தம்' என்று ஆளுநரின் பேச்சை தி.மு.க சீரியஸாக எடுத்துக் கொண்டது.

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

அதன்படிதான், மசோதாக்களை நிறுத்தி வைக்கும் ஆளுநருக்கு எதிராகவும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழ்நாடு அரசு. இதனால் பதற்றமான ஆளுநர், வழக்கு விசாரணைக்கு வரும்போது, 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார். இதனால், மீண்டும் அந்த 10 மசோதாக்களை சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு. இந்த மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர்.

இந்நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குடியரசு தலைவருக்கு மசோதாக்கள் சென்றது குறித்து அரசு தரப்பில் இருந்து ஆட்சேபனை தெரிவித்தனர். அப்போது, "மசோதாக்கள் குடியரசுத் தலைவரிடம் சென்றுவிட்டதால், அவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு போடமுடியாது. அவரிடமிருந்து மீண்டும் மசோதாக்களை பெற்று ஆளுநரிடம் தரவும் முடியாது. எனவே இந்த வழக்கை பொறுமையாக விசாரிக்கலாமா?' என தலைமை நீதிபதி கூறியதோடு, " விரைவில் ஆளுநர் முதல்வர் சந்திப்பு நிகழ வேண்டும்" என்று கருத்து தெரிவித்தார். இதை அரசு தரப்பும் ஏற்றுக் கொண்டது.

சித்திக்

இதையடுத்துதான், மசோதாக்கள் தொடர்பாக பேச, முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்து இருக்கிறார்.

இதுகுறித்து தி.மு.க செய்தி தொடர்புக்குழு துணைச் செயலாளர் வழக்கறிஞர் சித்திக்கிடம் கேட்டபோது, "இந்த அழைப்புக்கு பின்னால் இருக்கும் மிகப்பெரிய அரசியலை முதலில் நாம் பேச வேண்டும். ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் எண்ணங்களுக்கு எதிராகதான் ஆளுநரின் செயல்பாடு இருக்கிறது. மக்களின் நலனுக்காக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போடுகிறார். இதுதொடர்பான வழக்கு விசாரணை வரும்போதுதான், மசோதாக்களை திருப்பி அனுப்புகிறார்.

இப்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். இப்படி ஆளுநரின் நோக்கமே தவறாக இருக்கிறது. வரலாறு காணாத பெருமழை பொழிந்து மக்கள் கஷ்டப்படும்போது, ஆளுநர் எங்கே போனார்? தனது மாளிகையை இறுக பூட்டிக் கொண்டு இருந்தார். தற்போது ஆளுநருக்கு எதிராக வழக்கில் நீதிபதிகளின் அறிவுறுத்தலையடுத்து, நிவாரண பணிக்காக களத்தில் இருக்கும் முதல்வரை சந்திக்க அழைப்பு விடுவது கேவலமான அரசியல். இப்போதுகூட களத்தில் இருக்கும் முதல்வரை வேலை செய்யவிடாமல் தடுக்கதான் ஆளுநர் இதுபோன்ற நாடகம் ஆடுகிறார். இது மக்களை ஏமாற்றும் செயல். ஆளுநரின் இந்த தந்திரம் ஒருபோதும் தமிழ்நாட்டில் பலிக்காது. ஆளுநர் குறித்த முடிவை முதல்வரே எடுப்பார்.' என்றார் சூடாக.

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து

இதுதொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் பேசும்போது, "சமீபத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. அதை ஆளுநர் பரிசீலனையில் எடுத்திருந்தால், அரசின் கோபம் கொஞ்சம் குறைந்திருக்கும். ஆனால், அதை அப்படியே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, தனது ஈகோவை காட்டியிருக்கிறார் ஆளுநர். ஒருவேளை மசோதாக்களை ஆளுநர் தன்வசம் வைத்திருந்தால், சந்திப்புக்கு முதல்வர் ஏற்பாடு செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது. நிலைமை இப்படியிருக்க, உச்ச நீதிமன்றத்தில் அறிவுறுத்தலால், நிர்பந்தம் ஏற்பட்டு முதல்வருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஆளுநர். அதுவும் சரிவர அழைப்பு விடவில்லை. ஆளுநரின் அழைப்பை ஏற்கும் மனநிலையில் முதல்வரும் இல்லை என்று தான் தெரிகிறது." என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/B1FL6Yl

No comments