Breaking News

புயல் பாதிப்புகளை பார்வையிட வராத பிரதமர் திறப்புவிழாவுக்கு மட்டும் தமிழகம் வருவது சரியா? - ஒன் பை டூ

பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க

``எந்த வகையிலும் சரியில்லை. ‘இமயமலைச் சாரலில் ஒருவன் இருமினான்... குமரி வாழ்வான் மருந்து கொண்டோடினான்’ என்ற உணர்வு படைத்த தமிழர்கள், மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்தபோது ஒன்றிய அரசு பாராமுகமாக நடந்துகொண்டதை மறக்க முடியுமா... உண்மையில் தமிழக மக்கள்மீது அக்கறை இருந்திருந்தால், பாதிப்புகளைப் பார்வையிடப் பிரதமர் வந்திருக்க வேண்டாமா... இப்போது மட்டுமல்ல, எப்போதுமே தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே நடத்திக்கொண்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. நமது வரிப்பணத்தை வாங்க மட்டும் வஞ்சமில்லாமல் நீள்கிற அவர்களது கரம், நம் துயரைத் துடைக்க மட்டும் நீளாது என்றால் எப்படி... மாநில அரசு மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதும் ஹெலிகாப்டர் தொடங்கி அனைத்து விஷயங்களையும் மத்திய அரசிடம் போராடியே பெறவேண்டியிருந்தது. வந்துபோன ஹெலிகாப்டர்களுக்கும் எப்போது பில் அனுப்புவார்களெனத் தெரியவில்லை. தமிழ்நாட்டுக்கு வந்த நிதியமைச்சரை, ‘மயிலாப்பூரில் காய்கறி வாங்கத்தான் நேரமிருக்கிறதா?’ என்று பொதுமக்களே விமர்சிக்கத் தொடங்கிய பிறகுதானே தென்மாவட்டங்களை எட்டிப் பார்த்தார். ஆனாலும் மக்களைச் சந்திக்காமல், கோயிலுக்குச் சென்று அதிகாரிகளிடம் என்ன பேசினார் என்று எல்லோருமே பார்த்தோமே... தமிழ்நாட்டின் மீது இவர்களின் அக்கறை இவ்வளவுதான்.’’

பழ.செல்வகுமார், நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

``குறைசொல்ல வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது. மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பின் போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தமிழகத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். தென்மாவட்டங்களுக்கு நிதியமைச்சரே நேரில் சென்று பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஆய்வு நடத்தினார். தமிழக முதல்வரிடம் தொலைபேசியிலும், நேர் சந்திப்பின்போதும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து விசாரித்திருக்கிறார் பிரதமர். அதோடு பேரிடர் நிதியும் உடனடியாக விடுவிக்கப்பட்டு, மீட்புப்பணிகளும் விரைந்து முடுக்கிவிடப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக வெள்ளம், புயல் பாதிப்புகளைப் பொறுத்தவரை அவற்றை முதலில் கையாளவேண்டியது மாநில அரசுதான். மாநில அரசின் வசம்தான் அரசு இயந்திரம் இருக்கிறது. பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து, மாநில அரசின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் அதற்கேற்ப நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும். இதுதான் நடைமுறை. ஆனால், இந்த உண்மையை மறைத்து மலிவான அரசியல் செய்கிறார்கள். மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களிலும் சுமார் பத்து சதவிகிதப் பங்கு தமிழ்நாட்டுக்குக் கிடைப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இப்போதுகூட ரூ.19,850 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைக்கவே பிரதமர் தமிழகத்துக்கு வருகிறார். தமிழக மக்களுக்காகப் பிரதமர் தொடர்ந்து உழைத்துக்கொண்டேதான் இருக்கிறார். அது மக்களுக்குத் தெரியும்.’’



from India News https://ift.tt/9tTzW7F

No comments