Breaking News

'34 வயதினிலே'... கிரிக்கெட் வீரர் ஷெல்டன் ஜாக்சனின் காத்திருப்பும், ஆதங்கமும்..!

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொருவருக்கும் எப்படியாவாது தேசிய அணியில் இடம் கிடைத்துவிடாதா? நாமும் கோலி, தோனி போன்றார்களுடன் இணைந்து விளையாடமாட்டோமா என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்யும். பலருக்கும் இந்த கனவு நிஜமாவதில்லை, சிலருக்கு மட்டுமே அது சாத்தியப்படுகிறது. அதேவேளையில் தேசிய அணியில் இடம் கிடைக்காததால் அவர்கள் திறமைசாளிகள் இல்லை என்ற அர்த்தம் இல்லை. ஏதோ ஒரு காரணம் அது விளையாட்டின் நிழல் உலகில் இருக்கும் அரசியலாக கூட இருக்கலாம். ஆனால் நிச்சயம் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் தன்னுடைய ஆட்டத்திறனுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏக்கப் பெருமூச்சின் அனல் காற்றில் கலந்துக்கொண்டோதன் இருக்கிறது.

image

அப்படியொரு ஏக்கத்தை இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார் உள்ளூர் போட்டிகளில் அசாத்திய திறமைசாளியும், ரஞ்சி கோப்பையில் நாயகனாக விளங்கும் ஷெல்டன் ஜாக்சன். ரஞ்சிப் போட்டிகளில் பல ஆண்டுகளாக சவுராஷ்ட்டிரா மற்றும் புதுச்சேரி அணிக்காக விளையாடியவர். இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கொல்க்ததா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார். உள்ளூர் போட்டிகளில் பல ரெக்கார்டுகளை வைத்துள்ள ஷெல்டன் ஜாக்சனுக்கு இப்போது வயது 34. பல சாதனைகளை கிரிகெட்டில் செய்தும் அவருக்கு ஒரு முறை கூட தேசிய அணிக்கு தேர்வாகவில்லை என்பதுதான் வேதனை.

image

1986 ஆம் ஆண்டு சவுராஷ்ட்டிராவின் பாவ்நகரில் பிறந்தவர் ஷெல்டன் பிலிப் ஜாக்சன். தொடக்கத்தில் மும்பை ஜூனியர் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய அவரை 2011 ஆம் ஆண்டு தன்னுடைய ரஞ்சி அணியில் சேர்த்துக்கொண்டது சவுராஷ்ட்டிரா. அதன் பின்பு ஷெல்டன் ஜாக்சனுக்கு ஏறுமுகம்தான். இவர் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது சிறப்பு. இதுவரை 76 "ஃபர்ஸ்ட் கிளாஸ்" போட்டிகளில் விளையாடியுள்ள ஜாக்சன் மொத்தம் 5634 ரன்களை குவித்துள்ளார், அவரது ஆவரேஜ் 49.42. மொத்தம் 19 சதங்கள், 27 அரை சதங்களும் அடங்கும். இவரின் அதிகபட் ஸ்கோர் 186 என பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

image

கடைசியாக நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில்  100 சிக்ஸ்ர்கள் அடித்து சாதனை படைத்திருக்கும் இவர், டி20 போட்டியிலும் அசாத்திய திறமைசாலி. இதுவரை தேசியளவில் நடைபெற்ற 59, டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாக்சன் 1 சதம், 6 அரை சதம் என 1240 ரன்களை குவித்துள்ளார். இப்படியொரு வீரர் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரஞ்சியில் விளையாடி இருக்கிறார். பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறார் ஆனாலும் தேசிய அணியின் தேர்வாளர்கள் பார்வையில் ஜாக்சன் விழவே இல்லையா அல்லது வேண்டாம் என்று ஒதுக்கி வைத்துவிட்டார்களா என தெரியவில்லை. இப்போது 34 வயதாகிவிட்டதால் ஜாக்சன் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு குறைவே என்றாலும் இப்போது எரிமலையாக வெடித்திருக்கிறார் ஜாக்சன்.

image

ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜாக்சன் "எனக்கு வயது 34. ஆனால், 22 வயது இளம் வீரர்களை விட நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். 30 வயதுக்கு மேற்பட்ட புதுமுக வீரரை அணியில் சேர்க்கக் கூடாது என எந்த சட்டம் சொல்கிறது? ஒரு வீரரை எதை வைத்துத் தீர்மானிக்க வேண்டும், வயதையா அல்லது திறமையை வைத்துத் தீர்மானிக்க வேண்டுமா? திறமை இருந்தும் வயது காரணமாக எனக்கு வாய்ப்பு கிடைக்காததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்வியை தேர்வாளர்களை நோக்கி எழுப்பியுள்ளார். அப்படியென்றால் முன்பைப் போல் அதிரடி காட்டாத மூத்த வீரர்களை 35 வயதுக்கு மேலும் ஏன் அணியில் வைத்திருக்கிறீர்கள். இந்த விதிமுறை எனக்குப் புரியவில்லை என விளாசியிருக்கிறார்.

image

அந்தப் பேட்டியில் தொடர்ந்து பேசியுள்ள ஜாக்சன் "கடந்த இரண்டு சீசன்களில் 900 ரன்கள் வரை அடித்துள்ளேன். அதுவும் கடந்த சீசனில் 100 சிக்ஸர்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளேன். இதைப்பற்றி ஏன் யாரும் பேச மறுக்கிறார்கள்? அணித் தேர்வாளர்கள் இதற்குமேல் என்ன தகுதி எதிர்பார்க்கிறார்கள்? வயதுதான் பிரச்னை எனச் சொன்னால் அது ஏற்புடைய காரணமல்ல. இளம் வீரர்களை மட்டுமே தேர்வு செய்யும் அணித் தேர்வாளர்கள், திறமைக்கு முதன்மையான முக்கியத்துவம் தரவேண்டும்" என்ற கோரிக்கையும் வைத்துள்ளார். ஷெல்டன் ஜாக்சனின் இந்தப் பேச்சு உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத ஒரு நேர்மையான சாமானியனின் பேச்சாக கூட வைத்துக்கொள்ளலாம்.

அப்படிப்பார்த்தால் இந்திய அணிக்கு தேர்வாகாத உள்ளூர் போட்டிகளில் பல சாதனைகளை படைத்த, படைத்துக் கொண்டிருக்கும் பல வீரர்கள் இன்னமும் இருக்கிறார்கள். பலர் ரிட்டையர் ஆகிவிட்டு தன்னுடைய ஆதங்கத்தை மனதோடு புதைத்துவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள். கிரிக்கெட் மட்டுமல்ல அனைத்து துறையிலும் பல நேரங்களில் திறமையானவர்களுக்கான அங்கீகாரம் ஒன்று தாமதமாக கிடைக்கிறது அல்லது கிடைக்காமலேயே போய்விடுகிறது. இப்படி ஷெல்டன் ஜாக்சன் போல பேசுபவர்கள் ஒரு சிலரே, ஆனால் இன்னமும் இந்திய அணியில் இடம் கிடைக்க காத்திருக்கிறார் ஜாக்சன், அவரின் இந்த காத்திருப்பு நிஜமாகிறதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3fU2fDr
via

No comments