Breaking News

கேரளா: 6 வயது சிறுமி கொலை; 3 ஆண்டுகளாக சிறார் வதை கொடூரம்! - டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகி கைது

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாரில் சுரக்குளம் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக்கொண்ட கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். சுரக்குளம் எஸ்டேட்டில் உள்ள ஒரு வீட்டிற்குள் கடந்த 30-ம் தேதி ஆறு வயது சிறுமி கயிற்றில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார். அவரது பெற்றோர் காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில்தான் வீடு திரும்புவார்கள். அந்த சிறுமியின் சகோதரன் முடிவெட்டச் சென்றிருந்த சமயத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. எனவே சிறுமி விளையாடும்போது, அறையில் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றில் கழுத்து சிக்கி இறந்திருக்கலாம் எனப் பெற்றோர் கருதினர். ஆனால், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சிறுமி பலமுறை சிறார் வதை செய்யப்பட்டிருப்பதாக பகீர் தகவலைத் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகி அர்ஜுன்

இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார் அந்த சிறுமியின் வீட்டை ஒட்டி வசித்துவந்த அர்ஜுன்(22) என்பவர் சிறுமியை சிறார் வதை செய்ததாக கண்டுபிடித்தனர். இதையடுத்து கடந்த 4- ஆம் தேதி அர்ஜுன் கைது செய்யப்பட்டார். சி.பி.எம் கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ-யின் ஏரியா தலைவராக உள்ளார் அர்ஜுன். அந்த சிறுமியை மூன்று வயது முதலே பலமுறை சிறார் வதை செய்திருப்பதாக போலீஸ் விசாரணையில் அர்ஜுன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த மாதம் 30-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த அர்ஜுன் சிறுமியை சிறார் வதை செய்திருக்கிறார். அதில் சிறுமி மயங்கியிருக்கிறார். அவள் இறந்துவிட்டாள் எனக்கருதிய அர்ஜுன் அந்த அறையில் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றில் சிறுமியை தொங்கவிட்டிருக்கிறார். அதன் பிறகு அங்கிருந்து வெளியேறிவிட்டார். பின்னர் சிறுமியின் சகோதரன் வீட்டில் சென்று பார்த்து சத்தம்போட்டிருக்கிறான். அதன்பின்னர் அப்பகுதியினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு, சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் பிடியில் அர்ஜுன்

மேலும் சிறார் வதை செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீஸார் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அர்ஜுனிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணாக பதில்கூறி சிக்கிக்கொண்டார். டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகி என்பதால் ஆளும் கட்சி மென்மையான விசாரணை நடத்துவதாக எதிர்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. வண்டிப்பெரியாரில் ஆறுவயது சிறுமி மூன்று ஆண்டுகளாக சிறார் வதை செய்யப்பட்டு இறுதியில் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/3hUSqVz

No comments