“பிறந்தநாள் காணும் என் மகனுக்கு இதனை சமர்பிக்கிறேன்”-டெல்லியின் வியூகத்தை சிதைத்த உத்தப்பா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒன்பதாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதை உறுதி செய்துள்ளது சென்னை.
சென்னை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது அனுபவ வீரர் ராபின் உத்தப்பாவின் ஆட்டம்.
ரெய்னாவுக்கு மாற்றாக அணியில் இடம் பெற்றவர் உத்தப்பா. பிளே-ஆஃப் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என்ற நிலையே இருந்தது. கிரிக்கெட் விமர்சகர்கள் தொடங்கி பலரும் ‘உத்தாப்பா விளையாடுவது சந்தேகம் தான்’ என சொல்லி இருந்தனர். ஆனால் அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என டாஸ் வென்ற பிறகு தோனி சொன்னார்.
ரெய்னாவுக்கு மாற்று வீரரான உத்தப்பா இந்த ஆட்டத்தில் அப்படி என்ன செய்வார்? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஒரு காரணமும் உள்ளது. நடப்பு சீசனில் பிளே-ஆஃப் போட்டிக்கு முன்னதாக வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார் அவர். அதில் முறையே 19 மற்றும் 2 ரன்கள் மட்டும் எடுத்திருந்தார். அவரது செயல்பாடு தான் அந்த கேள்வியை முன்வைக்க காரணமாக அமைந்தது. முதல் ஓவரில் டூப்ளசிஸ் அவுட்டாக மூன்றாவது பேட்ஸ்மேனாக களத்திற்கு வந்தார் உத்தப்பா. இதுவும் இந்த சீசனில் புதிதாக அமைந்தது. மொயின் அலிக்கு முன்னதாக அவர் பேட்டிங் ஆர்டரில் களம் இறங்கியதும் குறிப்பிடத்தக்கது.
அவர் சந்தித்த முதல் பந்தை கவர் டிரைவ் ஆடி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அதுவும் நோர்க்யா வீசிய பந்தில் இதை செய்தது தரமான சம்பவம். அதன் பிறகு அவரது ரன் வேட்டையை எந்தவொரு டெல்லி பவுலராலும் தடுக்க முடியவில்லை. 44 பந்துகளில் 63 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தார். அதை பயன்படுத்தி இறுதி ஓவரில் தோனி கூலாக மூன்று பவுண்டரி விளாசி அணியை வெற்றிபெற செய்ய உதவியது.
“அணியின் வெற்றிக்காக நானும் எனது பங்களிப்பை வெளிக்கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. இன்று எனது மகனுக்கு பிறந்த நாள். அவனுக்கு இந்த இன்னிங்ஸை அற்பணிக்கிறேன். நான் களத்திற்கு பேட் செய்ய சென்ற போது அணிக்கு நல்ல தொடக்கம் தேவைப்பட்டது. அதை நான் செய்தேன். ஐபிஎல் அணிகளில் வீரர்களை மிகவும் நெருக்கமாக அரவணைத்து செல்வது சென்னை என நான் நினைக்கிறேன். அதனால் தான் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்” என 25-வது அரை சதத்தை பதிவு செய்த உத்தப்பா, ஆட்டத்திற்கு பிறகு சொல்லி இருந்தார்.
“உத்தப்பா டாப் ஆர்டரில் விளையாட மிகவும் விரும்புவார். மொயின் அலி மூன்றாவது பேட்ஸ்மேனாக அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். இருந்தாலும் இந்த போட்டியில் மூன்றாவது பேட்ஸ்மேன் மொயின் அலியா அல்லது உத்தப்பாவா என்ற ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இறுதியில் அதை ஆண்டவனிடம் கொடுத்தோம் எனவும் சொல்லலாம். எங்களது தொடக்க ஆட்டக்காரர் யாருக்கு எதிராக அவுட்டானார் என்பதை பார்த்து அந்த முடிவை எடுத்தோம்” என ஆட்டத்திற்கு சென்னை அணியின் கேப்டன் தோனி சொல்லி இருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3loJ07v
via
No comments