Breaking News

அதிவேகமாக வந்த கார்; மும்பை கடல்பாலத்தில் நிறுத்தியிருந்த கார்கள் மீது மோதியதில் 5 பேர் பலி | Video

மும்பையில் பாந்த்ரா-ஒர்லி இடையே நடுக்கடலில் பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த கடல் பாலத்தில் செல்ல கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மும்பையின் ஒரு அடையாளமாக விளங்கும் இந்த கடல் பாலத்தில் அடிக்கடி தற்கொலை சம்பவங்கள் நடப்பதுண்டு. காரை கடல் பாலத்தின் மத்திய பகுதிக்கு ஓட்டிச்சென்று பாலத்தில் இருந்து கடலில் குதித்து விடுவது என சில விரும்பதகாத சம்பவங்கள் நடந்தது. இதனால் கடல் பாலத்தில் எங்கும் வாகனங்களை தேவையில்லாமல் நிறுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இந்த பாலத்தில் வாகனங்கள் எப்போதும் கண்மூடித்தனமாக கடுமையான வேகத்தில் செல்வது வழக்கம். இன்று அதிகாலை 3.30 மணிக்கு இப்பாலத்தில் வேகமாக வந்த கார் ஒன்று பாலத்தின் ஓரத்தில் நிறுத்தி இருந்த 3 கார்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் மீது மோதிக்கொண்டது. இதில் காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபந்து நடந்த பகுதி

மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் கடல் பாலத்தில் ஒரு விபத்து நடந்திருந்தது. அதில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லத்தான் ஆம்புலன்ஸ் வந்திருந்தது என்றும், காயம் அடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட இருந்த நேரத்தில் மிகவும் வேகமாக வந்த கார் மற்ற கார்கள் மீது மோதிக்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கார் மோதிய வேகத்தில் அப்பளம் போல் நொறுங்கியது.

காயம் அடைந்தவர்கள் அனைவரும் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காரை வேகமாக ஓட்டி வந்த டிரைவர் மது அருந்தி இருந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் கடல் பாலத்தில் பாந்த்ராவில் இருந்து ஒர்லி செல்லும் வழித்தடங்கள் தற்காலிகமாக அடைக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்து வருகிறது. அதிகாலையில் நடந்த இச்சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடல் பாலம்

மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மும்பையின் மேற்கு பகுதியில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக 2010ம் ஆண்டு இந்த கடல் பாலம் கட்டப்பட்டது.



from தேசிய செய்திகள் https://ift.tt/9yjES1l

No comments