ஒற்றைக் கையில் காயங்களுடன் பேட் செய்த ஹனுமா விஹாரி... 57 பந்துகளை எதிர்கொண்டு அதிரடி!
காயத்தால் ஒற்றைக் கையால் பேட் செய்த ஹனுமா விஹாரி, மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறார்.
ஆந்திர கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் ஹனுமா விஹாரி, சமீபத்தில் இந்தூரில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை தொடரில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் களமிறங்கினார். இதில் 2வது நாளான நேற்று, முதல் இன்னிங்ஸில் ஆந்திரா 127.1 ஓவர்களில் 379 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இந்த ஆட்டத்தின் தொடக்க நாளில் ஹனுமா விஹாரி பேட் செய்தபோது ஆவேஷ் கான் வீசிய பந்து அவரது மணிக்கட்டை தாக்கியது. இதனால் 37 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆந்திரா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் ஹனுமா விகாரி மீண்டும் பேட் செய்ய வந்தார். வலது கை பேட்டரான ஹனுமா விஹாரி காயம் காரணமாக இடது கை பேட்டராக மாறினார். இடக்கை மணிக்கட்டில் மேலும் காயம் ஏற்படாமல் தடுப்பதற்காக இப்படி விளையாடினார்.
கிட்டத்தட்ட ஒரு கையால் மட்டையை பிடித்தபடி விளையாடி இரு பவுண்டரிகளை அடித்தார். 57 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த ஹனுமா விஹாரி இறுதியாக சரண்ஷ் ஜெயின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடைசி விக்கெட்டுக்கு அவர், 26 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஹாரின் இந்த துணிச்சலான நடவடிக்கையால் ஆந்திர அணி, 379 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் கையில் எலும்புமுறிவு ஏற்பட்டபோதும் இடக்கையால் பேட்டிங் செய்து அனைவருடைய பாராட்டுகளையும் மீண்டும் பெற்றுள்ளார் விஹாரி. இதற்கு முன்பு, கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில், தொடைப் பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டு அவதிப்பட்ட நிலையிலும் ரவிச்சந்திரன் அஷ்வினுடன் இணைந்து விஹாரி விளையாடியதுடன் அந்த ஆட்டத்தை டிரா செய்யவும் உதவி செய்தார். அவர்கள் பார்டனர்ஷிப் 259 பந்துகளில் 62 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் அன்றைய போட்டியில் விஹாரி, 3 மணி நேரத்துக்கும் மேலாக ஒற்றைக் கையுடன் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஹாரிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்தாலும், சிலர் இது ஆபத்தானது எனக்கூறி இப்படி செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/tO4kpCX
via
No comments