Breaking News

``அண்ணாமலையும், நானும் சேர்ந்து பிரசாரம் செய்கிறோமா?" - ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி தகவல்!

ஈரோடு வில்லரசம்பட்டியிலுள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று மாலை 3 மணி முதல் 5:30 மணி வரையிலும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், தங்கமணி, வேலுமணி, வளர்மதி, சி.வி.சண்முகம், கருப்பணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட செயலாளர்கள், த.மா.கா மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, த.மா.கா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்டோருடன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கூட்டம் முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும், நானும் ஒன்றாக பிரசாரம் செய்வோமா என்று கேட்கிறீர்கள். நாங்கள் ஒன்று சேர்ந்து பிரசாரம் செய்யவில்லை. அவர் வேறு பகுதியிலும், நான் வேறு பகுதியிலும் பிரசாரம் செய்ய இருக்கிறோம். இங்கு நாங்கள் எந்த ரகசிய ஆலோசனையும் நடத்தவில்லை. அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து தேர்தல் பணிகள் குறித்து பேசினோம். எங்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

அ.தி.மு.க ஒரு மூழ்கும் கப்பல் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி வருகிறார். அவர்தான் மூழ்கும் கப்பல். இதுவரை அவர் 5 கட்சிகளுக்குச் சென்று வந்துவிட்டார். அவர்தான் அடிக்கடி நிறம் மாறுகிறார். தி.மு.க-வினர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறலாம். ஆனால் ஓட்டுபோட வேண்டியது மக்கள் அல்லவா, அ.தி.மு.க ஆட்சியில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது உங்களுக்கே தெரியும். தி.மு.க ஆட்சியில் என்ன திட்டங்களை கொண்டு வந்தார்கள் என்று சொல்லச் சொல்லுங்கள். அ.தி.மு.க ஆட்சியில், ரூ.485 கோடி செலவில் ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தி, பெரும்பாலான வார்டுகளுக்கு தண்ணீர் கொடுத்தோம். அதன் பின்பு ஆட்சிக்கு வந்தவர்கள் முறையாகப் பணியை திட்டமிடாததால் முழுமையாக குடிநீர் விநியோகிக்க முடியாத நிலையே தொடர்கிறது. கேட்டால் இதைத்தான் திராவிட மாடல் ஆட்சி என்பார்கள்.

தி.மு.க-வினரால் எந்தத் திட்டத்தைச் சொல்லி ஓட்டுகளைக் கேட்க முடியும். பணத்தை கொடுத்துதான் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். அனைத்து மக்களையும் குடோனில் அடைத்து வைத்து பணத்தை செலவழிக்கின்றனர். இதனை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. மிகப்பெரிய ஜனநாயக படுகொலை, கிழக்குத் தொகுதியில் நடந்து வருகிறது. தொலைக்காட்சிகள் இதைக் காட்டுவதில்லை. பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதில்லை. இந்தத் தேர்தலில் விதிமுறைகள் எவ்வளவு மீறப்பட்டிருக்கின்றன என்பதை மக்களுக்கு காட்டுங்கள். மக்கள் விரோத ஆட்சியின் செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதுதான் என்னுடைய ‘ரெக்வெஸ்ட்’ ஆக வைக்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி

சொத்து வரி கடுமையாக உயர்த்திவிட்டனர். மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். விலைவாசியும் உயர்ந்துவிட்டது. போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. மின்சாரக் கட்டணம் ஆண்டுக்கு, 6 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. போக்குவரத்து ஊழியர்களுக்குப் பண பலன்கள் கிடைக்கவில்லை. இதைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் செய்திருக்கிறார்களா? அ.தி.மு.க ஆட்சியின்போது சேலம்-சென்னை எட்டுவழிச் சாலையை எதிர்த்தார்கள். இப்போது தி.மு.க அதே திட்டத்தைக் கொண்டு வர முயல்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் வாயில் பிளாஸ்திரி ஒட்டி வைத்து மௌனம் சாதிக்கின்றனர். முன்பு பாலகிருஷ்ணன் திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தினார்.
இப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, எட்டுவழிச் சாலை கொண்டு வரப்படும் என அறிவித்தார். யாராவது குரல் கொடுத்தார்களா. இதற்காக குரல் கொடுக்காத இவை, அடிமை கட்சிகள்தானே.

கடந்த, இரண்டு ஆண்டுகளாக கம்யூனிஸ்ட்டுகள் எந்தப் போராட்டத்தையாவது நடத்தியிருக்கிறார்களா? டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாகப் பாதித்திருக்கிறது. அங்கு வெற்றி பெற்ற எந்த எம்.எல்.ஏ-வும் கருத்து கூறவில்லை. போராட்டம் செய்யவில்லை. அடிமை சாசனத்தை செய்து வருகின்றனர். நான் சொன்ன கருத்துக்கு எங்காவது, அவர்களது கூட்டணிக் கட்சிகள் குரல் கொடுத்திருக்கிறார்களா... அதனால்தான் அடிமை சாசன கட்சிகள் எனக் கூறுகிறோம்.
காவிரி நதி நீர் பிரச்னை பல ஆண்டுகளாக இருந்தது. ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி, காவிரி உரிமையை மீட்டார். அப்போது, 22 நாள்களாக சட்டசபையை முடக்கினர். இருந்தாலும், சட்டபூர்வமாக உரிமையைப் பெற்றுத்தந்தோம்.

எடப்பாடி பழனிசாமி

‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். தமிழகத்திலிருந்து தேர்வு பெற்ற 38 எம்.பி-க்களில் யாராவது குரல் கொடுத்தார்களா. தி.மு.க வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தலில் கூறி வந்தனர். இதுவரை, தமிழகத்துக்காக மத்திய அரசிடம் எந்தக் குரலும் கொடுக்கவில்லை. அதனால்தான் மீண்டும் சொல்கிறேன். தி.மு.க-வுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து, அதன் கூட்டணிக் கட்சிகள் ஒத்து ஊதிக் கொண்டிருக்கின்றன.
பெட்ரோல், டீசல் விலையை, 25 மாநிலங்களில் குறைத்தனர். இங்கு குறைக்கவில்லை. தேர்தல் அறிவிப்பில் குறைப்போம் என்றனர். தேர்தல் அறிவிப்பில் குறிப்பிட்டபடி, 85 சதவிகிதம் நிறைவேற்றி விட்டோம் என்கிறார்கள். 520 அறிவிப்புகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றவில்லை என ஊடகங்களுக்கும் தெரியும். கடந்த, 21 மாதங்களில் கொள்ளை அடித்தப் பணத்தை வைத்து, மக்களை விலைக்கு வாங்கி ஜனநாயக படுகொலை செய்ய பார்க்கின்றனர். இருந்தாலும், நிச்சயமாக இந்த ஆட்சி விரைவில் முடிந்துவிடும்" என்றார்.



from India News https://ift.tt/vWndkbT

No comments