Breaking News

``எத்தனை முகமூடிகள் அணிந்தாலும், அதிமுக தூக்கி எறியப்படும்" - தங்கம் தென்னரசு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டு வரும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் நடந்த பொதுகூட்டத்தில் பச்சை பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார். தோல்வி பயம் காரணமாக மக்களின் மனதில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் ஒரு பகுதியை ஆண்ட எடப்பாடி பழனிசாமி ஈரோடுக்கு எதுவும் செய்யவில்லை.

அவர் சொன்ன பொய்கள் எல்லாம் கேலிக்கூத்தானவை. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் செய்யாத திட்டங்கள், கட்சிக்கு செய்த துரோகங்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே. பாஜக-வின் பேச்சைக் கேட்டு தமிழகத்திற்கு நன்மை செய்யத் தவறி விட்டார். அவரின் ஆட்சியில் நீட் தேர்வு விவகாரம், உதய் மின் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், மேக்கேதாட்டு அணை பிரச்னையில் கர்நாடகாவுக்கு இணைக்கமாக செயல்பட்டது, விவசாயிகளுக்கு பல்வேறு துரோகங்களை இழைத்தது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஈரோட்டில் தங்கம் தென்னரசு

ஊழலைப் பற்றி பேச அதிமுக-வினருக்கு யோக்கியதை இல்லை. அவர்களின் ஆட்சியில் செய்த பல்வேறு ஊழல்களால் தான் மக்கள் அவர்களை தூக்கி எறிந்தார்கள். குட்கா பற்றியெல்லாம் அவர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பலர் சுட்டு கொல்லப்பட்டதும், பொள்ளாச்சி பாலியல் விவாகாரத்தில் பல உண்மைகளை மூடி மறைத்தது எல்லாம் மக்களுக்கு நன்கு தெரியும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் அ.தி.மு.க எத்தனை முகமூடிகள் அணிந்து வந்தாலும் இந்தத் தேர்தலோடு அக்கட்சி மக்களால் தூக்கி எறியப்படும். ஊழலைப் பற்றி பேச அவர்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லை. பல இடைத்தேர்தல்களில் அவர்கள் செய்ததை எல்லாம் நாங்கள் செய்ததாகக் கூறுகிறார்கள்.

ஈரோட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ. 300 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறோம். இதன்மூலம் படிப்படியாக பணிகளைச்  செய்வோம். ஈரோடு வருங்காலத்தில் சீர்மிகு நகரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. ஈரோடு மக்களுக்கு அவர்கள் செய்த திட்டங்கள் ஏதுமில்லை என்பதால் ஈரோடு திண்டலில் எடப்பாடி பழனிசாமி தண்டால் எடுத்து கொண்டிருக்கிறார்.

ஈரோடு பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் நிதி பற்றாக்குறை ரூ. 2,177 கோடியாக குறைந்துள்ளது. வருவாய் பற்றாக்குறை ரூ. 1,472 கோடியாக குறைந்துள்ளதுடன், கடந்த ஆட்சியை விட நிதி நிர்வாகம் சிறப்பாக நடந்து வருகிறது. கூட்டணி தர்மத்தை மதித்து அனைத்து அமைச்சர்களும் தேர்தல் களத்தில் பணியாற்றி வருகின்றனர். அ.தி.மு.கவைப் போல் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய தொகுதியை பறித்துக் கொண்டு நாங்கள் நிற்கிறோம் என்ற உணர்வு எங்களுக்கு இல்லை. தி.மு.க-வுக்கு எந்த காலத்திலும் தோல்வி பயமில்லை” என்றார்.

கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னத்தை மக்களின் வரிப்பணத்தில் வைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தங்கம் தென்னரசு, ``மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இரட்டை இலை சின்னத்தை வைத்து விட்டு, கிரேக்க தொன்மையின் அடையாளச் சின்னமான குதிரையின் நினைவாக வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்களே. அது அவர்களது கட்சியின் நிதியிலா வைத்தார்கள்?” என்று பதில் கேள்வி எழுப்பினார் அவர்.



from India News https://ift.tt/9lWTBLa

No comments