Breaking News

ஷெபாஸ் Vs இம்ரான்: அதலபாதாளத்தில் பொருளாதாரம்... வன்முறைக்காடான பாகிஸ்தான் - என்ன நடக்கிறது?!

அரசியல், பொருளாதாரத்தில் ஸ்திரமற்ற தன்மைகளால் திணறிக்கொண்டிருக்கும் பாகிஸ்தானில், தற்போது சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்திருக்கிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைதுசெய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது ஷெபாஸ் ஷெரீப் அரசு. இதனால் இம்ரானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் பெரும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களை நாட்டின் இரு பெரும் தலைவர்களும் டீலில் விட்டு விட்டு, தங்களது சுயலாபத்துக்காக மோதிக்கொண்டிருப்பது உலகம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது.

பழிவாங்கிய ஷெபாஸ்!

உலகக் கோப்பையை வென்றெடுத்த கிரிக்கெட் நாயகன் இம்ரான் கானுக்கு நன்றிக் கடன் செலுத்த நினைத்த பாகிஸ்தான் மக்கள், 2018-ல் அவரைப் பிரதமராக்கினர். ஆட்சிக்கு வந்தவுடனேயே எதிர்க்கட்சித் தலைவரான ஷெபாஸ் ஷெரீப்-க்கும், இம்ரானுக்கும் மோதல் போக்கு தொடங்கியது. ஷெபாஸின் `பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்)' கட்சியைச் சேர்ந்தவர்கள், `இம்ரானுக்கு கிரிக்கெட் மட்டுமே தெரியும்; கேப்டனாக முன்னின்று நாட்டை வழி நடத்தத் தெரியாது' என்று கூறிவந்தனர். இந்த மோதல்களைத் தொடர்ந்து, ஷெபாஸ்மீது பல்வேறு மோசடி வழக்குகள் பாய்ந்தன. 2020-ல் பணமோசடி வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்ட ஷெபாஸ், ஏழு மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளிவந்த ஷெபாஸ், இம்ரானை பழிவாங்க நினைத்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் இறங்கினார். அதில் வெற்றியும் கண்டார்.

ஷெபாஸ் ஷெரீப்

இதனிடையே, சீனாவிடம் பெற்ற அதீத கடனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, ராணுவத்துடன் ஏற்பட்ட மோதல் போக்கு ஆகிய காரணங்களால் இம்ரான் தலைமையிலான அரசு ஊசலாடிக் கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி முடித்தார் ஷெபாஸ். எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் அரியணையும் ஏறினார். தொடர்ந்து, தன்னை சிறையிலடைத்த இம்ரான் கானை சிறைக்கு அனுப்பும் வேலைகளையும் முடுக்கிவிட்டார். அடுத்தடுத்து இம்ரான் கான்மீது வழக்குகள் பாய்ந்தன. குறிப்பாக இரண்டு வழக்குகள் இம்ரானுக்குத் தலைவலியாக அமைந்திருக்கின்றன.

சுவர் ஏறி தப்பிய இம்ரான் கான்?

கடந்த ஆண்டு தனது கட்சிக்காரர் ஷபாஸ் கில்லை கைதுசெய்ய உத்தரவிட்ட பெண் நீதிபதியையும், காவல்துறை அதிகாரியையும் `கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என்று எச்சரித்தார் இம்ரான். இந்த விவகாரத்தில், பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதியப்பட்டது. மேலும், பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்லும்போது கிடைக்கும் பரிசுகளை, அரசுக் கருவூலமான தோஷகானாவில் ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறை பாகிஸ்தானில் இருக்கிறது. ஆனால், `இம்ரான் கான் தனக்குக் கிடைத்த பரிசுகளைக் கருவூலத்தில் ஒப்படைக்காமல், அதிக விலைக்கு விற்று சொத்து சேர்த்துவிட்டார்' என அரசு குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கில் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆஜராகாமல் தவிர்த்துவந்தார் இம்ரான். இதனால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாது பிடிவாரண்ட்டை பிறப்பித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம். இதையடுத்து இம்ரான் கானை கைதுசெய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்தது பாகிஸ்தான் காவல்துறை.

லாகூரில் இம்ரானைக் கைதுசெய்யப்போவதாகத் தகவல்கள் பரவியதும், அவரது வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான பி.டி.ஐ கட்சி ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்களை மீறி வீட்டுக்குள் சென்ற இஸ்லாமாபாத் காவல்துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வீட்டுக்குள் இம்ரான் இல்லாததால் வெளியே வந்த காவல்துறையினருக்கு, அடுத்து சில நிமிடங்களில் வீட்டுக்குள் இருந்தே லைவ் வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து, `இம்ரான் சுவர் ஏறிக் குதித்து பக்கத்து வீட்டில் ஒளிந்துகொண்டிருந்தார்' என்றனர் ஆளுங்கட்சியினர். தொடர்ந்து, மீண்டும் அவரைக் கைதுசெய்ய லாகூர் வீட்டுக்கு வந்த காவல்துறையினரால், இம்ரானின் ஆதரவாளர்களைச் சமாளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் மோதல் வெடித்து பெரும் வன்முறையானது.

இம்ரான் கான்

ஆதரவாளர்களைத் தூண்டிவிட்ட இம்ரான்!

இந்த வன்முறைக்கும், போராட்டங்களுக்கும் இம்ரானின் தூண்டுதல்களே காரணமாக அமைந்தன. ``காவல்துறை என்னைக் கைதுசெய்ய வரவில்லை; கடத்திச் சென்று படுகொலை செய்யவே திட்டமிடுகிறார்கள்'' என்று அவர் பேசியது பி.டி.ஐ கட்சித் தொண்டர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது. லாகூரைத் தாண்டி ராவல்பிண்டி, பெஷாவர், கராச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் அரசுக்கு எதிராக இம்ரானின் ஆதரவாளர்கள் களமிறங்க நாடே பதற்றமானது. இந்த நிலையில், மேலுமொரு வீடியோவில் சில துப்பாக்கித் தோட்டாக்கள், கண்ணீர் புகைக்குண்டுகளை தனக்கு முன் வைத்துக்கொண்டு, ``இது என் வீட்டின் முன்பு கிடைத்தவை. என்னைக் கொலை செய்தாலும், அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடக்கும்'' என்று பேசி தனது ஆதரவாளர்களின் கொதிப்பு அடங்காமல் பார்த்துக்கொண்டார் இம்ரான்.

இம்ரான் கான் வீடு

பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி இம்ரான் தரப்பு நீதிமன்றத்தை நாட, அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, `நீதிமன்றத்தில் நேரடியாக இம்ரான் ஆஜராவார்; காவல்துறையை நம்பமாட்டோம்' என்றது பி.டி.ஐ கட்சி. அதன்படி, நீதிமன்றத்துக்கு அவர் கிளம்பிச் சென்ற பின்னர், அவரது வீட்டுக் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற காவல்துறையினருக்கும், அங்கிருந்த பி.டி.ஐ கட்சியினருக்கும் பெரும் சண்டை வெடித்தது. இதற்கிடையில், இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு வெளியிலும் இம்ரான் ஆதரவாளர்களுக்கும், காவல்துறைக்கும் மோதல் வெடிக்க, அவருக்கு எதிரான பிடிவாரணட் ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் மார்ச் 31-ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ``என் மனைவி புஷ்ரா பேகம் மட்டும் தனியாக இருக்கும்போது, எனது வீட்டின்மீது போலீஸார் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். எந்தச் சட்டத்தின்கீழ் அவர்கள் இதைச் செய்கிறார்கள்?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார் இம்ரான் கான்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ``முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசியலமைப்புக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தானில் கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அனைவர்மீதும் சட்ட நடவடிக்கைகள் பாயும்'' என்றிருக்கிறார். இந்த நிலையில், இம்ரான் ஆதரவாளர்களிடையே பல்வேறு ஆயுதங்கள் இருந்ததாகச் சொல்லி பலரையும் கைதுசெய்திருக்கிறது பாகிஸ்தான் காவல்துறை. மேலும், இம்ரான் கான்மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் வழக்கும் பதியப்பட்டிருக்கிறது. இதனால் பாகிஸ்தானில், மேலும் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

பாகிஸ்தான் பஞ்சம்

பாகிஸ்தான் அரசியலை உற்று நோக்குபவர்கள், ``இம்ரான் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்றும், அவரது செல்வாக்கை அசைத்துப் பார்க்க வேண்டும் என்றும்தான் ஷெபாஸ் தலைமையிலான அரசு அவரைக் கைதுசெய்யத் துடிக்கிறது. இம்ரானும், சிறைக்குச் சென்றுவிட்டால் பாதுகாப்பாக நாம் வெளியே வரமுடியாது என நினைக்கலாம். அதே நேரம், நாட்டின் முக்கியத் தலைவர் தனது ஆதரவாளர்களின் பலத்தைக் கொண்டு சரணடைய மறுப்பது தவறு. பெரும் ஆதரவு பெற்றிருக்கும் ஒரு தலைவர் சட்டத்தின் பிடியிலிருந்து இவ்வாறு தப்பிவிட முடியும் என்பதற்கு இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அதோடு இந்த வன்முறை, மோதல்களால் சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கையைப் பாகிஸ்தான் இழந்துகொண்டிருக்கிறது. இது பொருளாதாரத்தை மேலும் படுகுழியில் தள்ளும்!'' என்கிறார்கள்.

ஷெபாஸின் அதிகார பலத்துக்கும், இம்ரானின் தொண்டர் பலத்துக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கித் தவிப்பது என்னவோ இவர்களுக்கு வாக்களித்த மக்கள்தான். உணவுப் பஞ்சத்தால் திண்டாடிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் மக்கள் வெகுண்டெழுந்தால் நாடு தாங்காது!


from India News https://ift.tt/3tWMASB

No comments