Breaking News

ஒன் பை டூ

செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்

``இந்த நாட்டு மக்களுக்கு, பிரதமர் மோடியின் ஆசீர்வாதம், கருணை, அனுசரணை எப்போது இருந்தது... இப்போது இல்லாமல் போவதற்கு. இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகு பிரதமரின் ஆசீர்வாதம் அனைத்தும் அதானிக்கும், அம்பானிக்கும், அவரின் நண்பர்களுக்குமல்லவா கிடைத்துக்கொண்டிருக்கிறது... `ஆட்சிக்கு வந்ததும் கறுப்புப் பணத்தை மீட்பேன்’ என்றார், செய்தாரா... `ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்’ என்றார், வழங்கினாரா... நேர்மாறாக 20 கோடிக்கும் அதிகமானோர் நாட்டில் வேலையிழந்து நிர்க்கதியாகியிருக்கிறார்கள். `இந்திய ரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகராக வரும்’ என்றார் பிரதமர். ஆனால், வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது இந்திய ரூபாயின் மதிப்பு. காஸ் விலையேற்றம், மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி போன்றோர் இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்தார்கள். ஆனால், பிரதமர் மோடி இந்திய ஜனநாயகத்தின் மாண்பை நசுக்கி, உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையைச் சிறிது சிறிதாகச் சிதைத்துக்கொண்டிருக்கிறார். கர்நாடகா தேர்தல் தோல்வி பயத்தால், மத்திய அரசின் ஆசி கிடைக்காது என்று மக்களை மிரட்டுவதற்காக, இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். கர்நாடகா தேர்தலிலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க-வுக்கு தோல்வி உறுதி.’’

செல்வப்பெருந்தகை, நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

``நட்டாவின் இந்தக் கருத்தை நாம் எப்படி எடுத்துக்கொள்வோம் என்பதில்தான் இருக்கிறது. தேர்தல்களில் வாக்கு செலுத்தாதவர்களையும், வாக்கு செலுத்தவைக்கச் சொல்லப்பட்ட நேர்மறையான கருத்தாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நாடு சுதந்திரமடைந்து 55 ஆண்டுகளாக ஆட்சிசெய்த காங்கிரஸ், இந்த நாட்டுக்குச் செய்ததெல்லாம் ஊழல் மட்டுமே. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில்தான் நாட்டின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அதையேதான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக, பிரதமர் மோடி செய்துவருகிறார். கொரோனா பேரிடர் வந்து அனைத்து நாடுகளும் ஆட்டம் கண்ட சமயத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காகவும் இலவச மின்சாரம், வீடு, குடிநீர், அந்நிய முதலீடு, புதிய வேலைவாய்ப்பு எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது பிரதமர் மோடியின் அரசு. அவரால் இந்தியா, உலக அரங்கில் பெரும் வல்லரசு நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, இந்தியாவையும் பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்கிறோமென தலைக்குனிவை ஏற்படுத்துகிறார்கள். `இந்தியாவை உலகத்துக்கே வழிகாட்டியாகத் திகழச்செய்யும் பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் விலகிவிடும், அவரின் ஆசி கிடைக்காது’ என்று நட்டா பேசியதில் எந்தத் தவறும் இல்லை.’’



from India News https://ift.tt/SBNTxCY

No comments