Breaking News

வெளிநாட்டு முதலீட்டுக்காக, சொந்த மக்களை பலி தருவதா?

‘ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை... வாரத்துக்கு மூன்று நாள்கள் விடுமுறை’ எனச் சட்டமன்றத்தில் வேகவேகமாக ஒரு மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றியது தி.மு.க அரசு. ஆனால், கூட்டணிக் கட்சிகளே கொந்தளித்து போர்ப்பரணி பாட ஆரம்பித்ததுடன், மாநிலம் முழுக்கவே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அத்துடன், தி.மு.க அரசுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களும் எழுந்தன.

இதைத் தொடர்ந்து, மசோதாவை நிறுத்தி வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இப்படி ஒரு மசோதாவைக் கொண்டுவரும்முன், அனைத்துப் பிரிவினருடனும் கலந்தாலோசித்திருந்தால், இப்படி எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்திக்க வேண்டியிருந்திருக்காது.

12 மணி நேர வேலை என்பது புதிய விஷயம் அல்ல. இன்றைக்கு ஐ.டி நிறுவனங்களிலும், பலவிதமான தொழிற்சாலைகளிலும், சூப்பர் மார்க்கெட் போன்ற வணிக வளாகங்களிலும் தினமும் 12 மணி நேரம் வேலை பார்க்கவே செய்கின்றனர் பெரும்பாலான ஊழியர்கள். சட்டவிரோதமாக வேலை பார்க்கக் கட்டாயப்படுத்தப்படுபவர்கள்தான் இதில் அதிகம். இந்த நிலையில், 12 மணி நேர வேலை என்பது சட்டமாக்கப்பட்டுவிட்டால் 13, 14 மணி நேரம் என்று மேலும் மேலும் அந்தத் தொழிலாளர்களின் உழைப்பு உறிஞ்சப்படவே வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.

மூன்று நாள் விடுமுறை எனப் பெரிதாக எடுத்துச் சொல்லப்பட்டாலும், அது பல ஊழியர்களுக்குக் கிடைக்காது. விடுமுறை தினத்தில் வேலை செய்தால், கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்கிற ஆசையை நிறுவனங்கள் காட்டினால், பலரும் வேலை செய்வார்கள். இதனால், அவர்களின் உடல்நலன் நீண்ட காலத்தில் மிகப் பெரியளவில் பாதிப்படையும்.

முக்கியமாக, 12 மணி நேரம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் அதிகமாகத் தரப்படும் என அரசுத் தரப்பில் எந்த விளக்கமும் இல்லை. விடுமுறை நாளில் எக்ஸ்ட்ரா வேலை, எக்ஸ்ட்ரா சம்பளம் என்பதால், ஊழியர்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை!

பிரிட்டனில் 12 மணி நேர வேலை சமீபத்தில் நடைமுறைக்கு வந்தது. அங்கு தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்கள் சிறப்பாக இருப்பதால், அங்குள்ளவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். சீனாவில்கூட 12 மணி நேரம் வேலை நடைமுறையில் இருந்தாலும், ஊழியர்கள் வேலை பார்க்கும் சூழலை மிகச்சிறப்பாக வைத்திருக்கிறது சீன அரசாங்கம். தவிர, கூடுதல் வேலைக்குக் கூடுதல் சம்பளத்தை சீன அரசே நிறுவனங்களிடம் இருந்து கறாராக வாங்கித் தந்துவிடுவதால்தான், அங்கு தனிநபர் வருமானம் நம் நாட்டைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது.

அதெல்லாம் இங்கு நடக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

- ஆசிரியர்



from India News https://ift.tt/513tDVw

No comments