Breaking News

கள்ளச்சாராயம், மதுவிலக்கு: ``எடப்பாடி போராடினால் சேர்ந்து குரல் கொடுக்க தயார்" - தொல்.திருமாவளவன்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ள நிலையில், திண்டிவனம் அருகே சரவணன் என்பவரும் சாராயம் குடித்து உயிரிழந்திருக்கிறார். கள்ளச்சாராயம் குடித்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (முண்டியம்பாக்கம்) சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று நேரில் பார்வையிட்டு, ஆறுதல் கூறிய வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்களை சந்தித்தார்.

திருமாவளவன் எம்.பி

அப்போது பேசியவர், "விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், கள்ளச்சாராயம் அருந்தி, கிட்டத்தட்ட 20 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. டாஸ்மாக் என்ற அரசு அனுமதி பெற்ற மது வணிகம் இயங்கிக் கொண்டிருக்கின்ற போதே, கள்ளச்சாராய புழக்கம் இந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது. அதுவும், குடியிருப்புகளுக்கு அருகே சென்று விநியோகம் செய்யக்கூடிய நிலை இருக்கிறது என்றால், இது அனைவருக்கும் தெரிந்தே நடைபெற்றிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. தமிழக முதலமைச்சர், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனே நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10  லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்க ஆணையிட்டு இருக்கிறார். இது ஒரு விதத்தில் ஆறுதல் அளித்தாலும் கூட, இந்த பிரச்னைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை காணவேண்டும். வி.சி.க-வை பொறுத்தவரை முழுமையாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதுமிட்டுமின்றி, தேசிய கொள்கையாகவே மதுவிலக்கை அறிவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து, மதுவிலக்கு கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தாத வரை, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க முடியாது.

தொல்.திருமாவளவன்

கள்ளச்சாராயம் பெருகும் என்பதை காரணம் காட்டி, அரசே மது வணிகத்தை அனுமதிப்பது அல்லது அரசே நடத்துவது என்பது ஏற்புடையது அல்ல. சம காலத்தில், மதுவிலக்கையும் நடைமுறை படுத்தவேண்டும், கள்ளச்சாராய ஒழிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்.  இதுதான் ஒரு அரசு செய்ய வேண்டியதாய் இருக்க வேண்டுமே தவிர, மதுக்கடைகளை திறக்கவில்லை என்றால்... மதுவிலக்கை அமல்படுத்தினால்... கள்ளச்சாராயம் பெருகும் என்று காரணத்தைச் சொல்லி, அரசே மது வணிகம் செய்வதும், கள்ளச் சாராய புழக்கத்தை அரசு கண்டும் காணாமல் இருப்பது, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, முதலமைச்சர் அவர்கள் மதுவிலக்கை தீவிரமாக நடைமுறைப்படுத்த முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிறப்பு உளவுப்பிரிவையும் அமைக்க வேண்டும். இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் குற்றவாளி என்று தெரிந்த பிறகு, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். மது அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் விதவைகளாகவும், அனாதைகளாகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். அவர்களை அரசே தத்தெடுத்துக்கொண்டு உதவிகளை செய்ய வேண்டும். 

திருமாவளவன் - ஸ்டாலின்

அத்துடன், குடிநோய் என்பது தீர்க்க முடியாத ஒன்றல்ல, தீர்க்க முடியும். அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே குடிப்பழக்கம் அதிகம் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்கள் அனைவருக்கும் உளவியல் ரீதியாக மருத்துவ ஆலோசனை வழங்க தேவையான மையங்களை ஏற்படுத்த வேண்டும். இது மிக மிக முக்கியமானது. மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த முடியாது என்றாலும், படிப்படியாக அமுல்படுத்த முடியும். இதில் முதல்கட்ட நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அவர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவர்களிடம் அறிவுறுத்தி இருக்கிறோம். இனி ஒருவரும் இறக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையை மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த கள்ளச்சாராயத்தை  தடுப்பதற்கான தீவிர முன் முயற்சியை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். நாங்கள் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். எதிர்க்கட்சியாக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி அவர்களே மதுவிலக்கு எதிராக என்ன போராட்டம் நடத்தியிருக்கிறார்.

தீவிர மருத்துவ சிகிச்சை - உயிர் குடித்த கள்ளச்சாராயம்.

மதுவிலக்கிற்காக நாங்கள் போராட வேண்டும்தான், இல்லை என்று சொல்லவில்லை. அவ்வப்போது எங்களது கருத்தை தெரிவித்து வருகிறோம். எதிர்க்கட்சியில் இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி அவர்கள், மதுவிலக்கிற்காக போராட்டம் நடத்துவாரேயானால் அவருடன் சேர்ந்து குரல் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.



from India News https://ift.tt/V609s7q

No comments