நெல்லை: ``முறையான அரசு அனுமதியுடனே கேரளாவுக்கு கனிமங்கள் செல்கின்றன” - அமைச்சர் துரைமுருகன்
நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்புத் திட்டமான தாமிரபரணி- நம்பியாறு - கருமேனியாறு திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அந்த திட்டத்தின் மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட பணிகள் நடக்கும் நாங்குநேரி அருகே உள்ள கோவன்குளம் பகுதியில் அவர் ஆய்வு செய்தார்.
அமைச்சருடன் சபாநாயகர் அப்பாவு, ஆட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்டோரும் சென்றனர். நதிநீர் இணைப்புத் திட்டப்பணிகள் நடந்து வருவது பற்றியும் எப்போது அப்பணிகள் முடிவடையும் என்பது குறித்தும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் இறுதிக்கட்ட பணிகள் நடக்கும் தூத்துக்குடி மாவட்டம், எம்.எல்.தேரி பகுதிக்கு மற்றும் பொன்னாக்குடி பகுதியில் நான்கு வழிச்சாலை கடக்கும் இடத்தில் நடக்கும் மேம்பாலப் பணிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ”முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் ஆட்சி காலத்தில் 2007 ம் ஆண்டு நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. 2011- ம் ஆண்டு வரையிலும் வேகமாக பணிகள் நடந்ததால் 50 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டன. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் 10 ஆண்டுகளாக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததால் இந்தப் பணிகளை மீண்டும் தொடங்கியிருக்கிறோம். இந்தப் பணிகள் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத மழைக் காலத்துக்குள் முடிவடைந்து இதன் வழியாக தண்ணீர் கொண்டு செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள் முடிவடைந்து முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும். நீர்நிலைகள், ஆறுகள் குறித்து எனக்கு அதிக ஆர்வம் உண்டு. அதன் காரணமாகவே நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கான பணிகள் நடப்பதை நேரில் பார்த்து ஆய்வு செய்ய வந்திருக்கிறேன்
அணைகளைத் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக நிதி ஆதாரத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். தென்காசி மாவட்டத்தின் கடனா நதி -ராம நதி இணைப்பு திட்டம் தொடர்பாக அடுத்த மாதம் நேரில் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும். அதே போல, ஜம்பு நதி மேல்மட்டக் கால்வாய்த் திட்டம் தொடர்பாக வனத்துறையினரிடம் அனுமதி பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்ல அனுமதி இருக்கிறது. அதனால் முறையான அனுமதி பெற்ற கனிம வாகனங்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் அல்லாமல் ராட்சத வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுமானால் அவற்றைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.
நெல்லை மாவட்டம் இடையன்குடியில் உள்ள தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் நினைவு இல்லத்துக்குச் சென்ற அமைச்சர் துரைமுருகன், கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்
from India News https://ift.tt/rqtnKou
No comments