`அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு'; சென்னை, விழுப்புரம் என 5 இடங்களில் சோதனை!
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே, தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி திடீர் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அன்றிரவே அவரைக் கைதுசெய்தனர்.

அதன்பின்னர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி, இதய அறுவை சிகிச்சை, நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல் என அரங்கேறிய நிகழ்வுகளுக்குப் பின்னர், செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் , `செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர். அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்' என உத்தரவிட்டது. இது அமலாக்கத்துறைக்கு சாதகமாக அமைந்திருக்கும் இந்த வேளையில் தான், தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக 1996 - 2001 காலகட்டத்தில் பொன்முடி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து இந்த மாத தொடக்கத்தில் தான் விடுவிக்கப்பட்டார். இது நடந்து 10 நாள்களே ஆகியிருக்கும் நிலையில் தற்போது திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று பொன்முடி வீட்டில் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.

சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனி மற்றும் விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்றுகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், பொன்முடியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

மொத்தமாக ஐந்து இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறிருக்க எதன் அடிப்படியில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. விரைவில் சோதனைக்கான காரணம் குறித்த அறிக்கையை அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
from India News https://ift.tt/yBCqFcl
No comments