ஒன் பை டூ: குடிகாரர்கள் குறித்த அமைச்சர் முத்துசாமியின் கருத்து சரியா?
கோவை சத்யன், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க
“அமைச்சர் சுயவிமர்சனம் செய்திருக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. காலையில் ஏழு மணிக்கு மது அருந்துபவர்களை, `குடிகாரர்கள்’ என்று அழைக்காமல் எப்படி அழைப்பது... அல்லது யாரையெல்லாம் குடிகாரர்கள் என்று சொல்லலாம் என அமைச்சரே விளக்கம் கொடுத்துவிடலாம். மதுவிலக்குத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிபோலவே முத்துசாமியும் மது விற்பனையை ஊக்குவிக்கும் அமைச்சராகவே செயல்படுகிறார். போகும் போக்கைப் பார்த்தால் இந்த அரசு, ஆவின் பால் அட்டைபோல, டாஸ்மாக்கிலும் மாத அட்டை கொடுத்து மதுவையும் காலை, மாலை வீட்டுக்கே கொண்டு வந்து டெலிவரி செய்யக்கூடும். மது போதையுடன் வேலை செய்யக் கூடாது என்பது ஓர் அடிப்படை விஷயம். அது பணிப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தார்மிகக் கருத்தும்கூட. ஆனால், அமைச்சரே குடித்துவிட்டு வேலை செய்வதை நியாயப்படுத்துகிறார். தூய்மைப் பணியாளர்கள் குடித்துவிட்டுத்தான் வேலை பார்க்க முடியும் என்று சொல்வதற்கு இந்த அரசு வெட்கி, தலைகுனிய வேண்டும். யார் செத்தால் என்ன... அவர்களுக்கு டாஸ்மாக் மூலம் கோடி கோடியாகப் பணம் வருகிறது. அந்த ஒற்றை நோக்கத்துக்காக, பொறுப்புள்ள பதவியில் இருந்துகொண்டு அமைச்சர் இப்படிப் பேசுகிறார். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.’’

சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க
``கொங்கு மக்கள் பேசும் தொனியில் பேசியிருக்கிறார் அமைச்சர். அதை அரசியல் நோக்கத்துக்காக, திட்டமிட்டுத் திரிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். `புதிய குடி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமலிருக்க, அவர்களுக்கு மனநல சிகிச்சை வழங்குவோம்’ என்பது உட்பட மது ஒழிப்பு தொடர்பான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் அமைச்சர் பேசினார். அது குறித்து யாராவது கருத்து தெரிவித்தார்களா... தி.மு.க அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடியிருக்கிறது. சட்டவிரோதமாக இயங்கிவந்த பார்களையும் மூடியிருக்கிறது. `மதுவிலக்கைக் கொண்டுவருவோம்’ எனத் தேர்தல் அறிக்கையிலேயே சொன்னது தி.மு.க மட்டும்தான். ஆனால், டாஸ்மாக்கைக் கொண்டு வந்து, அரசே மது விற்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது அம்மையார் ஜெயலலிதாதான் என்பதையும், `தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மது விற்பனைக்கூடம் இருக்கக் கூடாது’ என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததும், அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அரசு வழக்கு தொடர்ந்ததையும் அ.தி.மு.க-வினர் மறந்துவிட்டார்களா... குடிப்பவர்களை ‘மதுப்பிரியர்கள்’ என்று அழைத்தவர்கள்தானே இவர்கள்... அப்போதும் சரி, இப்போதும் சரி. மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க உறுதியாக இருக்கிறது. தி.மு.க-வைக் குறைகூற அ.தி.மு.க-வினருக்கு எந்த அருகதையும் இல்லை.’’
from India News https://ift.tt/CGAZHB2
Post Comment
No comments