Breaking News

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: நடுநிலை என்று தீர்மானித்த அமெரிக்கா, பின்னர் போரில் பங்கேற்றது ஏன்?

முதலாம் உலகப்போர் தொடங்கிய காலகட்டத்தில் அப்போதைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன், இந்தப் போரில் தங்கள் நாடு நடுநிலை வகிக்கும் என்று தீர்மானித்தார். 'இந்த விஷயத்தில் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்' என்று வேறு அறிவித்தார். தங்கள் நாட்டுக்குப் போரினால் எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாதே என்கிற கவலை அதில் தெரிந்தது. என்றாலும் இந்த வைராக்கியம் நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. நேச நாடுகளுக்கு அமெரிக்கா நட்புக்கரம் நீட்ட வேண்டிய கட்டாயமும் வந்தது.

ஒருவிதத்தில் பார்க்கப்போனால் அமெரிக்கா இந்தப் போரில் ஈடுபட வேண்டிய அவசியமே இல்லை. புவியியல் அமைப்பின்படி ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று வெகு அருகே அமைந்திருந்தன. அவை போரில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயமானது. ஆனால் அமெரிக்கா அவற்றிலிருந்து தொலைவிலிருந்த நாடு, கடலால் பிரிக்கப்பட்ட நாடு. அது வேறு கண்டமும் கூட. தவிரப் பிற நாடுகளின் வெளியுறவு விஷயங்களில் தலையிடக் கூடாது என்ற கொள்கையை அப்போது அமெரிக்கா கொண்டிருந்தது.கூட்டு நாடுகள் என்ற பிரிவை அப்போது அமெரிக்கா வைத்திருக்கவில்லை.

I am neutral but not afraid of any of them 1915 - USA World War I poster

தவிர அதற்கு முந்தைய வருடங்களில் பல சோதனைகளை அனுபவித்திருந்தது அமெரிக்கா. 1920ல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட, அதற்கு எதிரான பல குற்றங்கள் நாட்டையே ஆட்டிப்படைத்தன. 1930களில் அந்த நாடு ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. அப்போது வேலை இல்லாத் திண்டாட்டம் வறுமை போன்றவை லட்சக்கணக்கான அமெரிக்கர்களை ஆட்டிப்படைத்தது. இந்தக் காலகட்டத்தில் மாபெரும் புழுதிப் புயல்கள் (Dust Bowls) வீச நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. தவிர இந்தப் புயல்களால் விவசாயத்தை போதிய அளவு செய்ய முடியாமல் போனது. ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குக் குடியேற்றங்கள் பெருமளவில் நடைபெறத் தொடங்கி இருந்தன. ஆக, பெரும் சேதங்களை அனுபவித்திருந்த அமெரிக்க மக்கள் தங்களுக்கு நேரடித் தொடர்பில்லாத உலகப்போரில் தங்கள் நாடு ஈடுபடுவதைச் சிறிதும் விரும்பவில்லை. ஜனாதிபதி உட்ரோ வில்சன் அமெரிக்கா நடுநிலைமையைத்தான் வகிக்கும் என்று கூறியதற்கு மக்களின் இந்த மனப்போக்கும் ஒரு முக்கிய காரணம்.

என்றாலும் அமெரிக்கா தன் நிலையை மாற்றிக் கொண்டது. நேச நாடுகளின் பக்கம் சாய்ந்தது. இதற்கு ஒரு முக்கிய காரணம் ஜெர்மனி இந்தப் போரில் தங்கு தடையில்லாமல் பயன்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்கள். இது நேரடியாக அமெரிக்காவையும் பாதித்தது.

1915இல் பிரிட்டிஷ் கப்பலான RMS லூசிடானியா என்பதை ஜெர்மனியின் போர்க்கப்பல்கள் மூழ்கடித்தன. அந்தக் கப்பலில் பல அமெரிக்கர்களும் இருந்தனர். கப்பல் மூழ்கியதால் 128 அமெரிக்கர்கள் இறந்தனர். இதன் காரணமாக ஜெர்மனியிடம் பகைமை பூண்டது அமெரிக்கா. பின்னர் தொடர்ந்து ஜெர்மனி அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கத் தொடங்கவே அது தன் நடுநிலைமை போக்கை மாற்றிக்கொண்டது.

ஜிம்மர்மேன் தந்தி (Zimmermann Telegram)
ஒரு தந்தியும் அமெரிக்கா தன் நிலையை மாற்றியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆர்தர் ஜிம்மர்மேன் என்பவர் ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். அவர் மெக்சிகோவுக்கு ஒரு தந்தியை அனுப்ப, அது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. (அந்தத் தந்தி ஜிம்மர்மேன் தந்தி (Zimmermann Telegram) என்றே வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது). அதில் அமெரிக்கா தங்களுக்கு எதிராகப் போரிடத் தொடங்கினால் மெக்சிகோவுடன் ராணுவ ஒப்பந்தத்தை ஜெர்மனி செய்து கொள்ளத் தயங்காது இன்று இருந்தது.

தவிர டெக்சாஸ், நியூ மெக்ஸிகோ, அரிசோனா ஃபோன் பகுதிகள் மெக்ஸிகோவிடம் இருந்து அமெரிக்காவுக்கு அப்போது சென்று விட்டிருந்தன. இந்தப் பகுதிகளை மீண்டும் மெக்ஸிகோ தன்வசப்படுத்த வேண்டும் என்றும் அந்த தந்தி கூறியது. சங்கேத வார்த்தைகளில் அனுப்பப்பட்டிருந்த அந்த தந்தி பிரிட்டிஷ் உளவுத்துறையின் கைக்குச் சென்றுவிட்டது. அவர்களால் அந்த சங்கேத வார்த்தைகளை உடைத்து அதன் உண்மைத் தன்மையை உணர முடிந்தது. அதை அவர்கள் பகிரங்கமாக்கினார்கள். ஜெர்மனிக்கு எதிராக முதலாம் உலகப் போரில் அமெரிக்கா போரிட முனைந்ததற்கு இந்தத் தந்தியும் ஒரு முக்கிய காரணம். இந்த தந்தி வாசகங்கள் காரணமாக அமெரிக்க மக்களில் கணிசமானவர்கள் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஜெர்மனி ஒரு நேரடி ஆபத்து என்று கருதத் தொடங்கினார்கள். முதலாம் உலகப்போரில் அமெரிக்கா ஜெர்மனிக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்ற கருத்து பரவத் தொடங்கியது.

இவற்றின் விளைவாக 1917 ஏப்ரல் 2 அன்று அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் தனது பாராளுமன்றத்தில் ஒரு உருக்கமான போர் உரையைப் படித்தார். தங்கள் நாடு ஜெர்மனி மீது போரை அறிவிக்க வேண்டும் என்றும், இது நாடு பிடிப்பதற்கான எண்ணமல்ல என்றும், ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான போர் இது என்றும் குறிப்பிட்டார். அடுத்த நான்கு நாLகளில் அமெரிக்கப் பாராளுமன்றம் ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
பாராளுமன்றத்தில் அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சனின் உரை

1917ல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியும் அமெரிக்காவின் முடிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது. ரஷ்யாவில் ஜார் மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் ரஷ்யாவில் ஜெர்மானியர்கள் ஆதிக்கம் தலை எடுக்கலாம் என்றும் அப்படி நடைபெற்றால் ஐரோப்பாவில் தனது செல்வாக்குக் குறையும் என்றும் அது கணக்குப் போட்டது.

அமெரிக்காவின் முடிவுக்கு வணிகமும் ஒரு காரணம். முதலாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பாக நேச நாடுகளுக்கு (முக்கியமாகப் பிரிட்டனுக்கும் ஃப்ரான்ஸ்க்கும்) பல பொருள்களை ஏற்றுமதி செய்து வந்தது அமெரிக்கா. தவிர அந்த நாடுகளுக்கு பெரும் அளவில் கடனும் அளித்து வந்தது. இந்த நிலையில் முதலாம் உலகப்போரில் ஜெர்மனி அணி வென்றுவிட்டால் அது அமெரிக்க வணிகத்துக்கும் முதலீட்டுக்கும் பெருத்த அடியாக இருக்கும் என்ற நிலை உண்டானது. எனவே தனது பொருளாதாரக் கோணம் நலியாமல் இருப்பதற்காகவும், தாங்கள் ஏற்கெனவே அளித்த பெரும் கடன் தொகை தங்களுக்கு மீண்டு வர வேண்டும் என்பதற்காகவும் நேச நாடுகளுடன் அமெரிக்கா கூட்டுச் சேர்ந்தது.

- போர் மூளும்...



from India News https://ift.tt/SBfUPv3

No comments