மிஸ்டர் கழுகு: பிடிகொடுக்காத தி.மு.க... ஆட ஆரம்பித்த அழகிரி... 15 சீட் பின்னணி!
நாடாளுமன்றத் தேர்தல் வரையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் நீடிப்பது, கடலூர் தொகுதியில் போட்டியிடுவது போன்ற தனது திட்டங்களுக்கு தி.மு.க-வின் உதவியை எதிர்பார்த்தாராம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. ஆனால், அவர்கள் அதற்குப் பிடிகொடுக்கவில்லை என்கிறார்கள். `தி.மு.க-வை வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்றால் கூடுதல் சீட் கேளுங்கள்’ என்று யாரோ யோசனை சொல்லியிருக்கிறார்கள்போல. அதை நம்பி, சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் ஒன்றை நடத்தி, ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 15 சீட் கேட்கவிருக்கிறோம்’ என்று கிளப்பிவிட்டிருக்கிறது அழகிரி தரப்பு. சுதாரித்துக்கொண்ட தி.மு.க தலைமை, காங்கிரஸுக்குள்ளேயே இருக்கும் தன் ஆதரவாளர்களைவைத்து, ‘தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கே.எஸ்.அழகிரி மர்மமாகக் கூட்டம் நடத்துகிறார்’ என்று பதிலடி கொடுத்திருக்கிறது. `இதெல்லாம் இவருக்குத் தேவையா?’ என்று கேலி செய்கிறார்களாம் சத்தியமூர்த்தி பவனில்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இடமாற்றம்... துணிந்த சீனியர்... கடுப்பில் சின்னவர்!
சேலத்தில் நடக்கவிருக்கும் தி.மு.க இளைஞரணி மாநாட்டை நடத்துவது தொடர்பான மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், முதலில் அன்பகத்தில்தான் நடக்கவிருந்ததாம். இது தொடர்பாக அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அறிவாலய சீனியர் வாயிலாக போன் மூலம் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, இளைஞரணியினரின் கை கட்சிக்குள்ளும், மாவட்ட அளவிலும் ஓங்கியிருக்கும் நிலையில், வழக்கத்துக்கு மாறாக அன்பகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்துவதா என்று சீனியர் மா.செ-க்கள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்தது. பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற நிலையில், இரண்டெழுத்து சீனியர் அமைச்சர்தான், “அன்பகத்தில் இளைஞரணிக்குத்தானே மரியாதை இருக்கும். இது தேவையில்லாமல் சீனியர்களைச் சீண்டும் வேலை!” என்று எதிர்ப்பைப் பதிவுசெய்தாராம். இதன் பிறகே மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தி.நகரில் இருக்கும் தனியார் ஹோட்டலில் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் வாயிலாக முறைப்படி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தி சின்னவர் காதுகளுக்குக் கொண்டுபோக, அந்த அமைச்சர்மீது அவர் செம காண்டாகியிருக்கிறாராம்!
இ.டி-யின் தீவிரக் கண்காணிப்பில் பாலாஜி... மருத்துவ அறிக்கை தரத் தயங்கும் டாக்டர்கள்!
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வரும் 28-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஏற்கெனவே மனு விசாரணைக்கு வந்தபோதே, ‘பாலாஜிக்குக் கணையத்தில் கட்டி இருக்கிறது. நுரையீரலிலும் பிரச்னை இருக்கிறது. பக்கவாதம் ஏற்படும் அபாயம்கூட இருக்கிறது’ என்று மருத்துவ அறிக்கையைக் காட்டி அவருடைய வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். 28-ம் தேதிதான் கடைசி வாய்ப்பு என்பதால், எம்.ஆர்.ஐ., இ.சி.ஜி எண்டோஸ்கோப்பி உள்ளிட்ட பரிசோதனைகளைச் செய்யும் முனைப்பில் இறங்கியிருக்கிறது பாலாஜி தரப்பு. ‘இதற்கு மேலும் ஜெயிலில் இருந்தால் உயிருக்கே ஆபத்து’ என்று சொல்லுமளவுக்கு வலுவான மருத்துவ அறிக்கையைப் பெற்றுவிட வேண்டுமென ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறையின் சிறப்பு மருத்துவர்களைவைத்து செந்தில் பாலாஜியைப் பரிசோதனை செய்துகொண்டிருக்கிறார்களாம். அதேநேரத்தில், செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், செய்யப்படும் பரிசோதனைகளின் உண்மைத்தன்மை குறித்து அமலாக்கத்துறை வட்டாரமும் தீவிரமாகக் கண்காணித்துவருகிறதாம். இதனால், எதற்கு வம்பு என மருத்துவ அறிக்கை கொடுப்பதற்குச் சில டாக்டர்கள் தயங்குகிறார்களாம்.
‘எல்லா இடங்களிலும் என் ஆட்கள்...’ அண்ணாமலையின் பேராசை... அல்லாடும் பா.ஜ.க!
தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகளெல்லாம் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகளில் முன்வரிசையில் நிற்க, பா.ஜ.க-வில் இன்னமும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளே முடிய வில்லையாம். ஏன் இந்தப் பின்னடைவு என்று விசாரித்தால், “அனைத்துத் தொகுதிகளிலும் தன் ஆதரவாளர்கள் தான் பொறுப்பாளர் களாக இருக்க வேண்டும்... பூத் கமிட்டியில்கூட தன்னுடைய ஆட்களே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. அப்படியான ஆட்களைத் தேர்வு செய்யும் பணி இன்னமும் முடியாததுதான் காரணம்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஏற்கெனவே, அண்ணாமலையின் இந்தத் தனி ஆவர்த்தனத்தால் சீனியர்களெல்லாம் கடுப்பிலிருக்க, தேசிய பொறுப்பிலிருக்கும் பெண் நிர்வாகி, இந்தப் பிரச்னையை டெல்லியின் கவனத்துக்குக் கொண்டு போகும் முடிவிலிருக்கிறாராம்!
போதைக் கும்பலுடன் போலீஸ் தொடர்பு... கடுகடுத்த முதல்வர்... வெலவெலத்த அதிகாரிகள்!
தமிழ்நாட்டில் இளைஞர்கள், சிறுவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதும், அதன் காரணமாகக் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் தொடர்ந்து சர்ச்சையாகிவருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தாராம் முதல்வர். `பெரும்பாலான பகுதிகளில் போலீஸுக்குத் தெரிந்தேதான் போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. கடத்தலுக்குச் சில ஐ.பி.எஸ் அதிகாரிகளே உடந்தையாக இருக்கிறார்கள்' என்று அறிக்கை கொடுத்திருக்கிறது உளவுத்துறை. போதைப்பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான விரிவான ஆய்வுக் கூட்டத்தை கடந்த 22-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், உளவுத்துறை தந்த தகவலைக் கூட்டத்தில் சொல்ல, இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் முகம் இருண்டுபோனதாம். போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நேரடித் தொடர்பிலிருக்கும் கடைநிலை போலீஸார் முதல், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வரை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படவே, அடுத்த நாளே சென்னை மற்றும் ஆவடியில் 9 காவல் ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள், 24 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டிருக் கின்றனர். இரண்டு ஐ.பி.எஸ்-கள் மீது விரைவில் நடவடிக்கை பாயுமாம்!
from India News https://ift.tt/PjK3AkT
No comments