Breaking News

`பா.ஜ.க தன் சாதனைகளைப் பேசாமல் சாதி, மதம் குறித்துப் பேசுவதா' என்ற பிரியங்கா காந்தியின் விமர்சனம்?

செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்

``எங்கள் தலைவர் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. பா.ஜ.க-வின் இத்தனை வருட ஆட்சியில் ஏதாவது செய்திருந்தால்தானே சாதனை என்று சொல்லிக்கொள்ள முடியும்... சுவிஸ் வங்கியிலிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்போம் என்றார்கள். `அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம்’ என்றார்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு உயர்த்தப்படும், பெட்ரோல், டீசல், காஸ் விலை குறைப்பு... என்று பா.ஜ.க அளித்த வாக்குறுதிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எதையாவது அவர்கள் செய்திருக்கிறார்களா... இவர்கள் கொண்டுவந்த ஜி.எஸ்.டி-யால் இந்தியாவின் மொத்த சிறு, குறு தொழில்களும் நசுங்கிப்போயின. நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. வெறும் வாய்ச் சவடால்களால் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., அதானி என்ற ஒரு தனிமனிதனின் வளர்ச்சிக்காக இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்கிறது. சொல்வதற்குச் சாதனை எதுவும் இல்லாததால் சாதி, மத துவேஷங்களைப் பேசி நாட்டில் பிரிவினையை உண்டாக்கத் துடிக்கிறது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். வரும் தேர்தலில் பா.ஜ.க மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப்படும்.’’

செல்வப்பெருந்தகை, கரு.நாகராஜன்

கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

``அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இந்தியாவில் சாதி, மதங்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. தற்போதுகூட, சாதிவாரி கணக்கெடுப்பு, ஓ.பி.சி போன்று பல சாதி, மத விவகாரங்களை மையாக வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். இதில், அவர்கள் எங்களைக் குற்றம் சொல்வதுதான் கேலிக்கூத்து. பா.ஜ.க அரசு அமைந்ததிலிருந்தே ஏழை, எளிய மக்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடி அரசு கொண்டுவந்திருக்கிறது. அதில், அனைவருக்கும் கழிவறை தொடங்கி, அனைவருக்கும் வீடு வரை பல்வேறு திட்டங்கள் அடங்கும். சாதி, மதம் குறித்துப் பேசி குறுக்குவழியில் ஆட்சிக்கு வர நினைக்கும் காங்கிரஸின் கற்பனைக் குற்றச்சாட்டை நம்ப யாரும் தயாராக இல்லை. கொரோனா பேரிடரில் நிலையான பொருளாதாரத்தால் நமது நாடு உலக அரங்கில் முன்னோக்கிச் செல்கிறது. ஐந்து ட்ரில்லியன் இலக்குவைத்து, அதில் நான்கு ட்ரில்லியனை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். தோல்வி பயத்தில் இப்போதிலிருந்தே காங்கிரஸ் கட்சியினர் உளறிக்கொண்டி ருக்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாபெரும் வெற்றியைப் பெறும் பா.ஜ.க.”



from India News https://ift.tt/qGw3oyB

No comments