Breaking News

எதிர்க்கட்சிகளின் பிரதமர் முகம் கார்கேவா? - பரபரப்பான சூழலில் ஆலோசனை கூட்டம் நடத்திய இந்தியா கூட்டணி

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக, எதிர்க்கட்சிகளின் `இந்தியா' கூட்டணியின் செயல்பாடுகள் பெரிய அளவில் இல்லாமலிருந்தது. இந்தத் தேர்தலில் தனித்துக் களமிறங்கிய காங்கிரஸ், தெலங்கானாவில் மட்டும் வெற்றிபெற்று, நான்கு மாநிலங்களில் தோல்வியடைந்ததையடுத்து, உடனடியாக லோக் சபா தேர்தலுக்கான ஆலோசனையில் ஈடுபட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது.

`இந்தியா’ கூட்டணி

இருப்பினும், காங்கிரஸின் திடீர் அறிவிப்பால், சில முக்கிய தலைவர்கள் வர இயலாமல் போகவே, ஆலோசனைக் கூட்டமும் தள்ளிப்போனது. இன்னொருபக்கம், மக்களவை பாதுகாப்பு மீறல் தொடர்பாக மோடியும், அமித் ஷாவும் பதிலளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 141 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழலில், காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஸ்டாலின், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால், டி.ராஜா, திருமாவளவன், வைகோ உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

குறிப்பாக, மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தங்களுடன் சீட் பகிர்வு செய்துகொள்ளாததால் அதிருப்தியிலிருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் இதில் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில், கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வாக சீட் பங்கீடு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்டாலின் - சோனியா காந்தி

மேலும், பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்தலாம் என்பது குறித்து சில தலைவர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்ததாகவும், மம்தா பானர்ஜி, கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

கூட்டம் நடந்துமுடிந்த பிறகு ஊடகத்திடம் பேசிய கார்கே, ``இந்த நான்காவது கூட்டத்தில் 28 கட்சிகள் கலந்துகொண்டு, தங்களது யோசனைகளை முன்வைத்தன. இதில், கூட்டணி எவ்வாறு முன்னோக்கிச் செல்லவேண்டும் என்று ஒருமனதாக முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தகட்டமாக, நாடு முழுவதும் 8 முதல் 10 கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. மாநில அளவில் சீட் பங்கீடு நடைபெறும்.

மல்லிகார்ஜுன கார்கே

அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், மத்திய அளவில் பேசி தீர்த்துவைக்கப்படும். தேர்தலில் வெற்றிபெறுவதே இலக்கு. அதன் பிறகு, பிரதமர் யார் என்பது குறித்து ஜனநாயக முறையில் எம்.பி-க்கள் முடிவெடுப்பார்கள். எனவே, முதலில் ஒற்றுமையாகப் போராடி பெரும்பான்மையைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்" என்று கூறினார். மேலும், 141 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து டிசம்பர் 22-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் கார்கே தெரிவித்தார்.

இன்னொருபக்கம், கூட்டத்தில் நடந்தவை குறித்து ஊடகத்திடம் பேசிய திருமாவளவன், ``இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும், பிரதமர் வேட்பாளராகவும் கார்கேவை முன்னிறுத்த வேண்டும் என மம்தா பானர்ஜி முன்மொழிந்தார். அவரைத் தொடர்ந்து இறுதியாகப் பேசிய கார்கே, ஒருங்கிணைப்பாளரையும், பிரதமர் வேட்பாளரையும் அறிவிக்க வேண்டிய தேவை இப்போது இல்லை. தேர்தலுக்குப் பின் அதை முடிவுசெய்யலாம் என்று கூறி மம்தா பானர்ஜியின் கூற்றை நிராகரித்தார்" என்று கூறினார்.

இன்னொருபக்கம், கார்கே ஒருங்கிணைப்பாளரா, பிரதமர் வேட்பாளரா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, `பிரதமர் வேட்பாளர்' என வைகோ தெரிவித்தார். இன்னொருபக்கம், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ``விரைவில் சீட் பங்கீடு முடிந்ததும், களத்தில் இறங்கிச் செயல்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் தயாராக இருக்கின்றன. இந்தியா கூட்டணியின் வியூகம் என்பது பி.டி.ஏ கூட்டணி போன்றே இருக்கும் என்று முதல் நாளிலிருந்து கூறிவருகிறேன். பா.ஜ.க-வை நிச்சயம் தோற்கடிப்போம்" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.



from India News https://ift.tt/KN6ZVb1

No comments