2-வது டி20 போட்டி: ரோகித் சர்மா அதிரடியால் இந்தியா அபார வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தியது. இந்த போட்டியில் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியாக போட்டி 8 ஓவர்களாக (ஒரு அணிக்கு ) குறைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மேத்தீவ் வேட் 20 பந்துகளில் 41 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க வீரர் ஆரோன் பின்ச் 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- கேஎல் ராகுல் இறங்கினர். ஒருமுனையில் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோகித் சர்மா சிக்ஸர் மழை பொழிந்தார். ராகுல் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ரோகித் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி 2 பவுண்டரிகளை விளாசிய நிலையில் ஜாம்பா பந்துவீச்சில் போல்ட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதற்கு அடுத்த பந்திலே சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 9 ரன் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த போதிலும் ரோகித் சர்மா அதிரடியை குறைக்கவில்லை. இறுதி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட, களத்தில் ரோகித் - தினேஷ் கார்த்திக் ஜோடி இருந்தனர். முதல் பந்தில் சிக்சர் விளாசிய கார்த்திக், அடுத்த பந்தை பவுண்டரி விரட்டி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இந்திய அணி 7.2 ஓவர்களில் 92 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 46 ரன்கள் (4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) குவித்து அசத்தினார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் சமநிலை வகிக்கின்றன.
இதையும் படிக்க: ‘வீரர்கள் தவறு செய்யும்போது உங்களுக்கு கோபமே வராதா?’ - தோனி சொன்ன 'கூல்' பதில்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/TS0rVHD
via
Post Comment
No comments