மகப்பேறு நிதியுதவித் திட்டம் நிறுத்தமா? - குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சு-வின் பதில் ஏற்புடையதா?!
தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் கர்ப்பிணிகள், 12 வாரங்களுக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம், கணினியில் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களைத் தெரிவித்து, தங்கள் பெயரைப் பதிவுசெய்தால், அவர்களுக்கு ரூ.14,000, ரூ.4,000 மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18,000 மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த ஊட்டச்சத்துப் பெட்டகத்தில், ஊட்டச்சத்து மாவு, இரும்புச் சத்து திரவம், உலர் பேரிச்சம், புரதச்சத்து பிஸ்கட் உள்ளிட்ட பொருள்கள் இருக்கும். இந்தப் பரிசு பெட்டகம் கர்ப்பிணிகளுக்கு இருமுறை வழங்கப்படும்.
கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்தை உறுதிசெய்யத்தான் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இரு ஆண்டுகளுக்கு மேலாக நிதியுதவியும், உணவுப் பெட்டகமும் கிடைப்பதில்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பாதிக்கப்படுவது ஏழை பெண்கள்தான் என்பதை அரசு எப்போது உணரும், நிதி நெருக்கடியைக் காரணம்காட்டி இந்தத் திட்டத்தையும் நிறுத்த அரசு திட்டமிடுகிறதா போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன.

ஒது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. `கர்ப்பிணிகள் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியிலும் ஊழலா?' என்னும் கேள்வியை முன்வைத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், `கர்ப்பிணிகள் நலனுக்காக மத்திய அரசின் `மாத்ரு வந்தனா' திட்டம், 2017-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1987-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ’டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி’ திட்டத்துடன் இணைந்து கர்ப்பிணிகளுக்கு ஐந்து தவணைகளாக ரூபாய் 14,000, ரூபாய் 4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் நிதியுதவியில், 60% மத்திய அரசு நிதி. `கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசே இந்தத் திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ரூ.257 கோடி நிதி வழங்கியிருக்கிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு காரணங்களைக்கூறி கர்ப்பிணிகளுக்கு இந்த நிதி வழங்கப்படவில்லை’ என்று செய்தியும் ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. மகளிருக்கு வழங்கப்பட்டுவந்த தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தினார்கள். பட்டியல் பிரிவு மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பினார்கள். தமிழகப் பள்ளி மாணவர்களைத் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பாமல், அவர்களின் வாய்ப்புகளை பறித்தார்கள். அரசு மாணவர் விடுதிகளுக்கான அடிப்படை வசதிகளைக்கூட நிறைவேற்றாமல், புறக்கணித்தார்கள். தற்போது கர்ப்பிணிகளுக்கான நிதியுதவி திட்டத்தையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கியிருக்கிறார்கள். தி.மு.க அரசின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டிக்கிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்திருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தப்படவில்லை. 2006-ம் ஆண்டு, ரூ.6,000 வழங்கப்பட்டது. அது தற்போது ரூ.18,000-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் பிரதம மந்திரி `மாத்ரு வந்தனா யோஜனா' திட்டத்துக்கு, மத்திய அரசின் பங்களிப்பு ரூ.3,000 மட்டுமே ஒதுக்கப்படுகிறது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் 1.14 கோடி பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிரதம மந்திரி `மாத்ரு வந்தனா யோஜனா' திட்டத்தின்கீழ் இணையதளப் பதிவேற்றத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டன. இதனால் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் நிதியுதவி வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. மூன்று ஆய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. மேலும், தமிழக சுகாதார திட்ட உறுப்பினர்கள் டெல்லியிலுள்ள தேசிய தகவல் மையத்துக்கு நேரில் சென்று, மென்பொருள் பொறியாளர்களுடன் நேரடி ஆய்வுக்கூட்டம் நடத்தினர். இந்தக் குறைபாடுகள் காரணமாகவே தற்காலிகமாக இந்தத் திட்டத்துக்கான நிதியுதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. நிலுவையிலுள்ள பயனாளிகளுக்கு விரைவில் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறியிருக்கிறார் .

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் நம்மிடம் பேசுகையில், ”எங்களுக்குக் குழந்தைப் பிறந்தவுடன் சென்று பதிவுசெய்திருந்தோம். இரண்டாண்டுகள் நெருங்கிவிட்டன. ஆனால், உதவித்தொகை வரவில்லை. மகப்பேறு காலத்தில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு கொடுக்க வேண்டும் என்பதுதான் திட்டத்தின் முதன்மை நோக்கம். ஆனால், காலம் கடந்தும் கொடுக்காமல் இருப்பது சரியல்ல. அதற்கு இணையதளம்மீது குற்றச்சாட்டை வைப்பதை ஏற்க முடியாது. இதனால், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்” என்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் கண்ணன், “இணையதளம் பிரச்னை என அமைச்சர் சொல்வது பொய்யானது. மாநில-மத்திய அரசுகள் இடையே நடக்கும் நிதிப் பங்கீடு காரணமாக நிதியுதவி வழங்கப்படாமல் இருக்கிறது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்தில், திட்டங்களைக் கைகழுவி வருகிறது. தாலிக்குத் தங்கம் திட்டம் தொடங்கி, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது என பல திட்டங்கள் தற்போது செயல்பாட்டிலேயே இல்லை.

அந்த வரிசையில் இந்த மகப்பேறு நிதியுதவித் திட்டத்தையும் நிறுத்த அரசு முயல்கிறது. அதற்கு ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒரு புது காரணத்தை தமிழக அரசு சொல்கிறது. ஏதோ மென்பொருள் பிரச்னைக்காக நிதியுதவியை நிறுத்தி வைத்திருப்பதாகச் சொல்வது ஏற்புடையதல்ல. எல்லாம் ஆன்லைன் என்னும் காலத்தில், அதை சரிசெய்ய ஓர் அரசுக்கு இரண்டாண்டுகள் தேவைப்படுகிறதா என்னும் கேள்வி எழுகிறது. இது பணத்தை மிச்சப்படுத்தும் செயலேயன்றி வேறில்லை” என்றார்.
from India News https://ift.tt/sCUbnz5
Post Comment
No comments