விடாமல் அடம்பிடிக்கும் `ஓ.பி.எஸ்’... `கைகழுவும்' பா.ஜ.க - யாரை ஏமாற்றுகிறார் பன்னீர்?!
நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து ஜூலை 18-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தியது பா.ஜ.க. இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பா.ஜ.க அளித்த முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து பா.ம.க சார்பில் ஏ.கே.மூர்த்தி, த.மா.கா வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஜான்பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் தேவநாதன், புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், ஐ.ஜே.கே பச்சமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், பா.ஜ.க தங்களுடன் கூட்டணிக்காக பேசிக் கொண்டுதான் இருக்கிறது என்று கூறிவரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எவ்வித அழைப்பையும் பா.ஜ.க கொடுக்கவில்லை. மேலும், பன்னீர் தரப்பை டெல்லி பா.ஜ.க கைவிட்டுவிட்டது என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன.
இந்த நிலையில்தான், 'உள்ளபடியே... அவர்களாக (பா.ஜ.க) முறித்துக்கொள்ளும் வரை நான் அந்தக் கூட்டணியில் தொடர்வேன்' என்று மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். பன்னீர்செல்வத்தின் இந்தக் கருத்து, பா.ஜ.க அவரைக் கண்டுக்கொள்ளவில்லையென்றாலும், அவர்களைவிட்டு விலகாமல் அவர் அடம்பிடிப்பதுபோன்றே இருப்பதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக பன்னீருக்கு நெருக்கமான அவரின் அணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``எடப்பாடியுடன் பிரச்னை ஏற்பட்டபோது, 'நாங்கள் இருக்கிறோம்' என்று குரல் கொடுத்து, தனித்து செயல்பட ஏற்பாடுகளைச் செய்ததே டெல்லிதான். ஆனால், எடப்பாடிக்கே எல்லா ஃபேவரையும் செய்து கொடுத்தது டெல்லி. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடிக்கு எதிராகத் தேவையில்லாமல் வேட்பாளரைப் போட்டு, பின்பு டெல்லியின் பேச்சைக் கேட்டு வாபஸ் பெற்றார் ஓ.பி.எஸ். அந்த வேட்பாளரும் எடப்பாடி தரப்புக்குத் தாவியதால் அடைந்த அவமானத்துக்கு அளவே இல்லை.

இருந்தபோதிலும், டெல்லிமீது நம்பிக்கையை வைத்திருந்தார் ஓ.பி.எஸ். அவரின் மகன் ரவீந்திரநாத்தின் எம்.பி பதவியை நீதிமன்றம் ரத்துசெய்தவுடன் கடும் அப்செட்டான ஓ.பி.எஸ்., டெல்லி பா.ஜ.க மேலிடத்திடம் தொடர்புகொண்டு அவர்களின் ஆலோசனையைக் கேட்டார். ஆனால், ‘மேல்முறையீடு செய்யுங்கள், பார்க்கலாம்’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார்கள். டெல்லியில் நடந்த என்.டி.ஏ கூட்டத்துக்கான அழைப்பு எங்களுக்கும் வரும் என்று நம்பினோம். ஆனால், வாக்குவங்கியே இல்லாத சிறுசிறு கட்சிகளையெல்லம் அழைத்த டெல்லி, எங்களை டீலில் விட்டுவிட்டது.
இந்த நிலையில்தான், அ.தி.மு.க எம்.பி என்ற முறையில் ரவீந்தரநாத்துக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. இது ஓ.பி.எஸ்-ஸுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுத்திருக்கிறது. இதில் சட்ட நுணுக்கங்களும் இருக்கின்றன. ஆனால், டெல்லி எங்களை அரசியல்ரீதியாகக் கைவிட்டுவிட்டது என்று நன்றாகவே புரிகிறது. இதை மனதில் வைத்து, அணியை வலுப்படுத்த ஓ.பி.எஸ் முடிவு செய்யவேண்டும். அப்போதுதான், டெல்லியே எங்களைத் தேடிவரும். நாங்கள் பலமாக இருந்தால், தர்மயுத்த காலகட்டத்தில் நடந்ததுபோல, எடப்பாடியே இணைப்புக்கு தயாராவார்.

திருச்சிக்கு அடுத்ததாக திருப்பூரில் மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது, அந்த மாநாட்டை ரத்துசெய்யச் சொல்லிவிட்டார் ஓ.பி.எஸ். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்துக்கும் தயாரானார். அதையும் கேன்செல் செய்துவிட்டார். இப்படி அவரது தரப்பை வலுப்படுத்தும் முயற்சிகளையெல்லாம் கைவிட்டுவிட்டு 'பா.ஜ.க-வாக முறித்துக்கொள்ளும் வரை, கூட்டணியில் தொடர்வேன்' என்று சொல்வது, அவரை அவரே ஏமாற்றுவதைத் தாண்டி, உடன் வந்த எங்களையும் சேர்த்தே ஏமாற்றுக்கிறார் என்றே கருதுகிறோம்." என்றனர் ஆற்றாமையுடன்.
இது குறித்து பன்னீர் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜிடம் பேசியபோது, ``பா.ஜ.க நடத்திய கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்துக்கு எடப்பாடியை அழைத்தவர்கள், ஓ.பி.எஸ்-ஸைப் புறக்கணித்தார்கள். ஆனால், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் குறித்தான எம்.பி-க்களின் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு `அ.தி.மு.க' என்று தலைப்பிட்டு, ஓ.பி.எஸ்ஸுன் மகன் ரவீந்திரநாத் எம்.பி-யை அழைத்திருக்கிறார் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர்.

ஒன்றிணைந்த அ.தி.மு.க-வைத்தான் பா.ஜ.க விரும்புகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனைப் புரிந்து கொண்டுதான் அவர்களாக முறித்துக்கொள்ளும் வரை நாங்கள் பா.ஜ.க கூட்டணியில் நீடிப்போம் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தெரிவித்திருக்கிறார். எடப்பாடி பா.ஜ.க கூட்டணியின் பலத்துக்கு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்தான் சாட்சி. ஆனால், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ஒற்றைத் தொகுதி வெற்றியை ஓ.பி.எஸ்-ஸால் தான் தரமுடிந்தது" என்றார்.
from India News https://ift.tt/5fKzFMP
Post Comment
No comments