நட்டாவுடன் பவன் கல்யாண் தீவிர ஆலோசனை... ஆந்திராவில் பாஜக-வின் வியூகம் என்ன?!

பா.ஜ.க-வுக்கு, தென் மாநிலங்களில் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவும் கைவிட்டுப்போனது. எனவே, தென் மாநிலங்களில் எப்படியாவது மீண்டும் அதிகாரத்துக்கு வந்துவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க முனைப்பு காட்டிவருகிறது. சி.பி.எம்-மும் காங்கிரஸும் வலுவாக இருக்கும் கேரளாவிலோ, திராவிடக் கட்சிகள் வலுவாக இருக்கும் தமிழ்நாட்டிலோ பா.ஜ.க ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை.

பவன் கல்யாண் - சந்திரபாபு நாயுடு

எனவே, ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் பா.ஜ.க முட்டிமோதிப் பார்க்கிறது. தெலங்கானாவில் ஆளும் பி.ஆர்.எஸ்-ஸுக்கும் காங்கிரஸுக்கும் இடையில்தான் போட்டி. ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வலுவாக இருக்கிறது. எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் இன்னும் பலவீனமாகத்தான் காணப்படுகிறது.

பா.ஜ.க-வுடன் ஜெகன்மோகன் ரெட்டி நட்புறவுடன் இருக்கிறார். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு கொண்டுவரும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்கிறார். ஆனால், தேர்தல் கூட்டணிக்கு மட்டும் பா.ஜ.க-வுக்கு ‘நோ’ சொல்லிவிடுகிறார் ஜெகன்மோகன் ரெட்டி. எனவே, சந்திரபாபு நாயுடுவுடன் பா.ஜ.க கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்திவந்தது. தெலுங்கு தேசம் ஏற்கெனவே பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிதான்.

நட்டாவுடன் பவன் கல்யாண்

ஆந்திராவிலிருந்து தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட சூழலில், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. அப்போது, பா.ஜ.க கூட்டணி வைத்த தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தது. மோடி தலைமையிலான மத்திய அரசில் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அமைச்சர்களாக இடம்பெற்றனர்.

ஆனால், 2018-ம் ஆண்டு மார்ச் மாதம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க மத்திய அரசு மறுத்த காரணத்தால், என்.டி.ஏ-விலிருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது. பா.ஜ.க-வையும் பிரதமர் மோடியையும் சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தார் சந்திரபாபு நாயுடு.

இந்நிலையில் மீண்டும் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைக்க பா.ஜ.க பேச்சு நடத்திவந்தது. ஆனால், அது வேலைக்கு ஆகவில்லை. ஆகவே, பா.ஜ.க-வின் பார்வை பவன் கல்யாண் பக்கம் திரும்பியது. ஜூலை 18-ம் தேதி டெல்லியில் 38 கட்சிகளை அழைத்து என்.டி.ஏ கூட்டத்தை பா.ஜ.க நடத்தியது. அந்த 38 கட்சிகளில் ஜனசேனாவும் ஒன்று. என்.டி.ஏ கூட்டத்தை நடத்த முடிவுசெய்த பா.ஜ.க., சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு கொடுக்காமல், பவன் கல்யாணை டெல்லிக்கு வரச் சொன்னது. உற்சாகமாக டெல்லிக்குச் சென்று என்.டி.ஏ கூட்டத்தில் கலந்துகொண்ட பவன் கல்யாண், ஜூலை 20-ம் தேதி பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

சந்திரபாபு நாயுடு

தற்போது, பா.ஜ.க-வின் ஆந்திர மாநிலத் தலைவராக முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மகன் புரந்தேஸ்வரி பொறுப்பேற்றிருக்கிறார். இந்த நிலையில்தான், பவன் கல்யாண் என்.டி.ஏ கூட்டத்துக்கு அழைக்கப்பட்டார். டெல்லியில் என்.டி.ஏ கூட்டத்தில் பங்கேற்ற பவன் கல்யாண், அங்கு பா.ஜ.க-வின் தலைவர்கள் பலரை கடந்த இரண்டு நாள்களாகச் சந்தித்துவருகிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு எதிரான வியூகங்கள் குறித்து அவர் ஆலோசித்துவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பா.ஜ.க - ஜனசேனா கூட்டணியில் மேலும் எந்தெந்த கட்சிகளை இணைக்கலாம் என்று நட்டாவுடன் அவர் ஆலோசித்திருக்கிறார். கடைசி நேரத்தில் தெலுங்கு தேசம் இந்தக் கூட்டணியில் இணையலாம் என்றும் பேசப்படுகிறது. அதே நேரத்தில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ப்பதன் மூலம், ஜெகனை தீவிரமாக எதிர்க்க வேண்டிய நிலை வரலாம். அது நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு பாதகமாக முடியலாம் என்பதால் இந்த விவகாரத்தை கவனமாக கையாள்கிறது டெல்லி பாஜக.!



from India News https://ift.tt/vhjC5TR

No comments